புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

சில நல்லவர்களைப் பற்றி!




லைவாணர் வள்ளல் என்பது உலகறிந்த விசயம். ஆனால், அவர் இடதுகை கொடுப்பது வலதுகை அறியாது என்பது போலத்தான் உதவி செய்வாராம்.
ஒரு முறை நண்பர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு வயதானவர் சற்றே ஏழ்மைத்தோற்றத்துடன் அருகேவந்து
"ஐயா என் பொண்ணுக்குக் கல்யாணம்.உங்ககிட்டக் கேட்டா ஏதாவது பண உதவி செய்வீங்கன்னு சொன்னாங்க. அதுதான் வந்தேன்."
என்றார்.

கலைவாணருக்கு வந்ததே கோபம்.
"ஏம்ப்பா நான் என்ன இங்கக் கொட்டியா வச்சிருக்கேன்.நானே அல்லாடுறேன்.போ.போ..!
என விரட்ட.
நொந்து போன அந்தப் பெரியவரும் அங்கிருந்து அகன்றார்.
சற்றுதூரம் சென்றிருப்பார் ..அவரை அழைத்த கலைவாணர்
"சரி.சரி! வந்தது வந்துட்ட...இந்தா இந்த வெத்தலையைப் போட்டுக்கிட்டுப் போ!'
எனக்கொடுக்க,

அதை வாங்கிக்கொண்டு சற்றுதூரம் சென்று பிரித்துப்பார்த்தபோது அதனுள் பணத்தினை சுருட்டிவைத்துக் கொடுத்திருந்தாராம் கலைவாணர்.

மற்றவர் அறியக் கொடுத்தால் வாங்குபவர் சங்கடப்படுவாரே என நினைத்த கலைவாணர் எங்கே?
ஒரு டியூப் லைட்டைக் கோவிலுக்குக்கொடுத்துவிட்டு அதில் உபயம் - சி.மு.கரு.ப....
என கருப்புமையால் எழுதி வெளிச்சத்தையே மறைக்கும் இந்நாளைய மனிதர்கள் எங்கே?

***************************************************


க்கன் என்பவரை தமிழகம் நன்கறியும் என நினைக்கிறேன். அறியாவிட்டால் அது தமிழகத்தின் தலையெழுத்து.இவர் காமராஜர் ஆட்சியில் போலீஸ்துறை மற்றும் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தவர்.

எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்த இவரது நூற்றாண்டு விழாதான் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களால் வெகுவிமரிசையாகக்(?!) கொண்டாடப்பட்டது.

காமராஜர் ஒருமுறை கட்சிக் கூட்டத்திற்குச் செல்லவேண்டும் என கக்கனை அழைத்துச்செல்ல முன்கூட்டியே சொல்லாமல்கொள்ளாமல் அவரைத்தேடி வீட்டிற்கே வந்துவிட்டார்.வாசலில் காரில் இருந்துகொண்டு ஒருவரை உள்ளே அனுப்பி கக்கனை அழைத்துவரச் சொன்னார்.
உள்ளே சென்றவர்
"அய்யா! இன்னும் 5 நிமிடத்தில் வந்திர்ரேன்னு சொன்னாருங்க" என்றார்.
10 நிமிடமாகியும் காணாததால் "இவன் என்னதான் பண்ணுறான் இன்னும்?"
என்றபடி காமராஜர் வீட்டினுள் புக..அங்கே கொல்லையில் தனது வேட்டியைக் கையில் பிடித்து வெயிலில் காயவைத்துக்கொண்டிருந்தார் கக்கன்.

"ஏய்!என்னப்பா பண்ணுற?"

"இல்லைங்க ஐயா! ஒரே ஒரு வேட்டிதான் இருந்தது. இப்பதான் துவைச்சேன்.அதான் காயட்டும்னு வெயில்ல வச்சிருக்கேன்!இந்தா இப்பக் காஞ்சிரும்!"
என்றாராம் அந்த போலீஸ்துறை மற்றும் பொதுப்பணித்துறை மந்திரி.

இவர்தான் பின்னாளில் முடியாமல் இருந்தபோது அரசு ஆஸ்பத்திரியில் கவனிக்க ஆளின்றிக் கிடந்ததாகவும் எதேச்சையாக அவரை எம்.ஜி.ஆர் கண்டு சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியதாகவும் தகவல்கள் உண்டு.

உங்களுக்குத் தெரியுமா?
இன்று பெய்கின்ற மழைகளுக்கெல்லாம் மேகம் விதைத்தவர்கள் இவர்கள்தான்.
"நாளைக்கு!" என்று எதையும் சேர்த்துவைத்துக்கொள்ளத் தெரியாதவர்கள்.
இவர்களெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்கள்தான்.ஆனால்,
மக்கள் மனங்களில் நிலைக்கத் தெரிந்தவர்கள்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுபோன்றே தலைவர்கள் அல்ல..
நல்ல மனிதர்கள் பற்றிப் பேசலாம்.
நன்றிகள்!

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!




"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசைப் பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு"


கவியரசரின் இந்தப் பாடலை கேட்காதாரும், விரும்பாதவர்களும் யாருமில்லை.
பாட்டிற்குப் பொருள்கொள்ள விரும்பினால்
கவியரசர் அவர்கள்,
மதுவில் தான் குடியிருப்பதாகவும், அந்நேரம் ஒரு மங்கையைத் துணை வைத்திருப்பதாகவுமே எளிதில் கண்டுகொள்ள முடியம்.இதில் மறைபொருளாக இன்னொரு பொருளும் அடங்கி இருப்பதை நான் நண்பர் உயர்திரு.ராமகிருஷ்ணன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அறியமுடிந்தது.

மறைபொருள் இதுதான்..
அந்நாளிலே மைப் பேனாவைக்கொண்டே எழுதப் பயன்படுத்தியதால் அந்த மை புட்டியைத் தான்
ஒரு கோப்பை என்றும், அதிலேதான் தனது கருத்துகள் குடிகொண்டு வாழ்வதாகவும்,
கோலம் வரையும் மயிலாகப் பேனாவை உருவகப்படுத்தி அதுவே அவர்கையில் நாளும் துணையிருப்பாய் இருந்ததாகவும் இருபொருள்படக் கூற விரும்பிய கவியரசர் அவர்கள் மேற்கண்டவாறு எழுதியிருக்கின்றார்.
அதாவது, கோப்பையை மைபுட்டி-யுடனும்
கோலமயிலை - பேனாவுடனும் ஒப்பிட்டிருக்கிறார். ஆனால், இருபொருள் தொனிக்கும் வகையில்!
இன்னும் கவியரசரோட என்னென்னப் பாட்டுக்கெல்லாம் என்னென்ன அர்த்தம் இருக்குதோ???

********************************

ண்பனுடன் இணைய நிலையத்திற்கு(பிரௌசிங் சென்டர்-தான். சரியா இருக்கா?!)சென்றிருந்தேன்.வேலை முடிந்து பணத்தைக் கட்டிவிட்டுக் கிளம்பும்போது, கடைக்காரர் மீதப்பணமாக ஒரு 20ரூ நோட்டைக் கொடுக்க,
நண்பன் 20ரூபாய்க்குப் பதில் இரண்டு 10 ஆகவே கொடுத்துவிடுங்கள் என்றான்.
ஏற்கனவே இவன் பையில் சில்லரைகள் பிதுங்கியிருக்க எதற்கு இப்படிக் கேட்கிறான் என நினைத்தவாறே நான் அவனை வினவ..
சொன்னான்..

"நோட்டு கிழிஞ்சிருக்கு..வேற நோட்டுக்குடுங்க - ந்னு சொன்னா அவன் மனசு வருத்தப்படும். அதனாலதான் இரண்டு 10 ஆகக் கேட்டுவிட்டால் ஏதோ தேவை போலிருக்கிறது-ந்னு அவன் கொடுத்து விடுவானில்லையா.எந்தப் பிரச்சினையும் இல்ல பாரு!" என்றான்.

இல்லைன்னு சொல்லிட்டாருன்னா..??
நான் கேட்க,
"நம்ம கண்ணு முன்னாடிதான ட்ராயரை ஓப்பன் பண்ணுணான்.கண்டிப்பா நாம பார்த்திருப்போம்-ன்னு அவனுக்குத் தெரியும்" என்றான்.
சில்லரையை வாங்க்க்கொண்டு அவனுடன் 'நடைபயின்றேன்'.

**********************************************

னது நண்பர்களுக்குக் கொஞ்சம் தமிழ்பக்தி அதிகம்.அதிலும் சிலபேர் உரக்கத் தமிழ்பேசி, புழக்கத்திலேயே அதிகமில்லாத (புளகாங்கிதம்! போன்ற) வார்த்தைகளைப் பயன்படுத்தி சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார்கள்.பாடல்களில் 'ழ'கர உச்சரிப்புகள் சற்றுத் தூக்கலாகவே இருக்கும்.மின்னியல்துறையில் வேலைசெய்யும் நமது நண்பர் 'ழ'கரப்புகழ் சுரேஷ் என்பவர்...வெகுநாளாக வேலைக்கு அழைத்தும் வரமறுத்த அவருடைய நண்பரான சப்-காண்ட்ராக்டர் ஒருவரை,

ஒரு வாரமா போன் செய்றேன்.எங்கப்பா போன? என ஆரம்பித்துக் கோபமாகி ஏகத்துக்கும் விளாசத்தொடங்க,
பேச்சை இடைமறித்த அந்த சப்-காண்ட்ராக்டர் சொன்னார்.
"சுரேஷு இதைக்கேளுங்க.ஒரு நல்ல கவிதை. தலைப்பு இதுதான்
"பொறுமை!"

தண்ணீரையும் சல்லடையில் எடுத்துச் செல்லலாம்.
அது பனிக்கட்டியாகும்வரை
பொறுமையிருந்தால்!


அதுனால கொஞ்சம் பொறுமையா இருங்க சுரேஷு..என சொல்லிவைக்க..
வெறுத்துப்போன நம் நண்பர்.எவ்வளவு சொல்றோம்.கவிதையா சொல்ற நீ என்றபடி..
கொஞ்ச நேரம் பேசிவிட்டுக் கிளம்ப எத்தனித்த காண்டிராக்டரக் கையமர்த்தியவர்.."நான் ஒரு கவிதை சொல்றேன்.நீங்க கேளுங்க" என்றார்.
தலைப்பு இதுதான்
“காலதாமதம்.”

தண்ணீரையும் சல்லடையில் எடுத்துச் செல்லலாம்.
அது பனிக்கட்டியாகும்வரை
பொறுமையிருந்தால்!ஆனால்,
அந்தப் பனிக்கட்டியும் மீண்டும் தண்ணீராகிவிடும்
சற்றே காலதாமதித்தால்!


யோவ்...உனக்கு எத்தனை மணிக்கு வரனும்னு சொல்லு.4 மணிக்குத் தான சொன்ன..3 1/2க்கே வர்ரேன் ஆளை விடு! என சப்-காண்ட்ராக்டர் நொந்து கிளம்பினாராம்.

**********************************************

ம்மகிட்ட உள்ள கெட்டப்பழக்கமே எதையாவது பார்த்தால், படித்தால் நாமும் அதுபோலவே செய்ய வேண்டும் என சாட்டையைச் சொடுக்குவதுதான்.
காளமேகப்புலவரின் பாடல்களில் அவர் இகழ்வது போலக் கடவுளர்களைப் புகழ்ந்து பாடியவை மிகப்பிரசித்தி பெற்றவை.
இதைப்படித்ததிலிருந்து கை அரிப்பு உண்டாகி நாமும் முயன்று..
காளமேகம் பொறுத்தருள்வாராக..
கண்ணனைப் பற்றி..!

கொண்டலாய் வண்ணமும் பொன்முடி அற்றுமே
சின்னமயில் தன்னினதுத் தோகையைக் - கொண்டிலங்கும்
கண்ணா உனக்குநாளும் கள்வனென்று வேறுபெயர்
பின்னெப்படிப் பெண்கொடுப் பார்!


கொண்டல்-மேகம்
கொண்டிலங்கும்-கொண்டு விளங்கும்
*******************************************

வெட்டு ஒண்ணு..துண்டு ரெண்டு!



நிறைய விசயம் எழுதி இருந்தும் அதனைத் திருத்துவதற்கு நேரமற்ற காரணத்தாலேயே பதிவை இட முடியாமல் போய்விடுகிறது.எல்லோருக்குமே இப்படித்தான் என நினைக்கிறேன்.
சிறப்பாகவே எழுதவேண்டும் என நினைக்கிறது மனம் ஒவ்வொரு முறையும்.இரண்டு நாட்கள் கழித்து எடுத்துவைத்துப் பார்க்கும்போதும் இனிமேல் திருத்தவே வழியில்லை என நினைத்த இடுகையிலும் சிறுசிறு திருத்தங்கள் இருக்கத்தான் செய்கிறது.
இதனாலேயே நாளை பதிவிடலாம் என நாளைத் தள்ளிப்போட வேண்டியிருக்கிறது. ஒருவேளை அந்த நாளை என்னும் நாளைச் சந்திக்காமலேயே போய்விட்டால்?((நம்பிக்கைதானே வாழ்க்கை!)
அதனால்தான் அனுபவத்தால் ஒவ்வொரு மனிதனும் பக்குவமடைகிறான் என்று சொல்கிறார்களோ? ஒரு நண்பர் பக்குவம் என்றால் என்ன? என்று கேள்வியெல்லாம் கூடக் கேட்பார். விட்டுவிடுவோம்.
தலைப்புக்குத் தகுந்தபடி பதிவில்லாததற்கு மன்னிக்கவும்.
வெட்டுஒண்ணு - துண்டு ரெண்டு கீழே!!

திருக்குறள்..
கடைச் சங்க காலத்திலும்..
கடை சந்து பொந்துகளிலும்..

*************
பாஞ்சாலி..
பாரதியின் சபதங்களிலும்.!
பார்ப்பவரின் கண்களிலும்..!

*************
சண்டை..
தெருக்களிலும்..
திரைப் படங்களிலும்..

*************
சிந்தனை..
நல்லவனிடத்திலும்..
கெட்டவனிடத்திலும்..

*************
காதல்..
கடற்கரைகளிலும்..
கண நேரங்களிலும்..

*************
செம்மொழி..
செம்புலப்பெய நீராயும்..
சென்னைவாசியிடமும்..

*************
ஆங்கிலம்..
காப்பாற்ற தமிழனும்..
கரையேற்ற ஆங்கிலேயனும்..

*************
நண்பன்..
கண்ணனும் குசேலனும்..
ஜூலியஸ்சீசரும் ப்ரூட்டசும்..

*************
மதம்..
புத்தரிடத்திலும்.. !
புத்தரின் பேரன்களிடத்திலும் அல்லது
யானைகளிடத்திலும்..!



நன்றிகள்!

சில கவிதைகள் (ஆவணி- 5)



பக்திப் பிரசங்கம்!

முருகனை வேண்டுங்கள்
முக்தி!
மால்மருகனை வேண்டுங்கள்!
முக்தி!
அதோ ஒருவன்..
கூட்டத்தில் புகுகிறான்..
நையப் புடையுங்கள்!

*****************
கடவுள்!

கூன் கிழவியின்
ஊண் உன்னாலென்றால்..
சிரிப்பது கிழவியல்ல..
அதுதான் கடவுள்!

*****************

சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும்
விண்ணப்பம்
பூர்த்தி செய்கிறது..
உன் நாக்கு!

*****************

ம்புலனையும் அடக்கி வாழ்!
வறியவர்க்குக் கொடுப்பதில்
அல்ல!

*****************

னாதை இல்லத்திற்கு
அரைவேளை உணவிட்டாயா?
இதோ குறித்துக்கொள்..
இந்த மழை
உன்னால் பெய்கிறது!

*****************

செத்தபின் செல்வது
சொர்க்கமா? நரகமா?
உன் அண்டைவீட்டுக்காரனே
அதை முடிவு செய்கிறான்!

*****************

சரி! சற்றே பெரியதாயிருப்பினும்
இதையும் படித்துவிடுங்கள்!

எம் வழி! அற வழி!

காறி முகத்தினில் உமிழ்ந்திடும்போதும்
.........கையால் துடைத்து விட்டிடுவோம்!
மாறி மாறியே முகத்தில் அறையினும்
.........மன்னித்தே நாம் அருள்புரிவோம்!
பாரினில் யாவரும் பெரும்பழி தந்திட
.........பகவானிடம் நாம் வேண்டி நிற்போம்!

ஆயினும், ஆயினும் ஒன்று உரைப்பேன்..!
ஓரிரு வார்த்தை களேனும் தமிழை
.........உயர்வு குறைத்துப் பேசுவார் தம்மின்
நாவை அறுத்திடுவோம்! அவரை
.........நடுங்கப் புடைத்திடுவோம்!

******

மிழ் தேதியை நான் இங்கு சென்று கண்ட போது இந்த வாக்கியத்தையும் காண நேர்ந்தது.!

உங்களுக்காகப் பொய் சொல்கிறவன்..
உங்களுக்கு எதிராகவும் பொய் சொல்வான்!


***********

நன்றிகள்!

எங்கே உள்ளது குற்றம்?



ரொம்பவே கனவுகளோடு என் நண்பன் E.B-யில் நடந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளச் சென்றான்.E.B-யின் உள்வாயிலில் ஒரு குறிப்பிட்ட தலைமைக்கட்சியின் டாடாசுமோ, கட்சிக்கொடியுடன் நிற்கவே, தெரிந்துவிட்டது.இந்த இண்டர்வியூ என்ன ஆகப்போகிறதென்று!
(பல மரம் கண்ட தச்சனாயிற்றே!)

"பரமேஸ்வரன்..!"
இவன் பெயரை இண்டர்வியூ அறையிலிருந்து விளித்தவுடன்,
சற்றே நிதானித்தவன்..
சான்றிதழ்கள் அடங்கிய ஃபைலை இன் செய்யப்பட்ட சட்டையின் முதுகுப்பகுதிக்குள் மறைத்துக்கொண்டு சுற்றிக் காத்திருந்த அனைவரையும் பரிதாபமாகப் பார்த்தான். ஒவ்வொருவர் கண்ணிலும் எப்படியாவது இந்த வேலையைப் பெற்றுவிட வேண்டும் என்கிற கனவு.கண்களிலும்,நெஞ்சினிலும் ரௌத்ரத்துடன் உள்ளே பிரவேசித்தான்.

பிதுங்கிய தொப்பைகளுடன் சோபாவில் புதைந்திருந்தார்கள் 3-4 கேள்(லி)வியாளர்கள்.
கேட்டார் ஒருவர் "சர்டிபிகேட்ஸ் எங்கே?"

"இல்ல சார்.பஸ்ல வர்றப்ப மிஸ் ஆகிடுச்சு"

"என்ன இவ்வளவு கூலா சொல்ற?" - எகத்தாளமாகக் கேட்டார் அவர்.

"ஏன், சர்டிபிகேட் இருந்தா மட்டும் வேலை தந்துருவீங்களா என்ன?"
முதல் அடியே வலுவாக அடித்தான்.

"ஒரிஜினல் இருந்தா தான் உங்களை செலக்ட் பண்ண முடியும் தம்பி"
உடைபட்ட மூக்கை ஒட்டவைக்க முயற்சி செய்தார்.

"நாந்தான் ஏற்கனவே ஜெராக்ஸ் குடுத்துருக்கேனே .அதை நீங்கள் பார்க்கலாமே!"
நண்பன் அசராமல் அடித்ததில் மிரண்டவர்கள்.என்ன இவன் இவ்வளவு ராங்காப் பேசுறான்?
என்றபடி அருகில் இருந்தவரிடம்,
"சரிங்க! இவரோட பேரைப் பார்த்து அந்த ஃபைலை எடுங்க.."

"நல்லாத்தான் மார்க்கெல்லாம் வாங்கியிருக்க.
என்ன படிச்சீங்க?"
பயம் கொஞ்சம் மரியாதையை உருவாக்கியது.

"அதுலயே போட்டிருக்குமே!"

"சொல்லுங்க தம்பி ..குறைஞ்சா போயிருவீங்க!"

"எலெக்ட்ரிகல் ஐ.டி.ஐ !"

"ஏன் அது படிக்கனும்னு உங்களுக்குத் தோணுச்சு..?"

"அதுதான் அப்ப கிடைச்சது .அதனால படிச்சேன்!"

"கிடைக்கலைன்னா.."

"மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஏதாவது படிச்சிருப்பேன்."

"ஓ! அப்ப இப்ப எதுக்காக இங்க இண்டர்வியூக்கு வந்தீங்க?"

"என் அம்மாவுக்கு அவங்க பிள்ளை கவர்ன்மெண்ட் வேலைபார்த்தா சந்தோஷம்.
அதனாலதான்!"

"இந்த வேலை கிடைச்சதுன்னா என்ன பண்ணுவீங்க?"

"வீட்டுல சந்தோசப்படுவாங்க"

"கிடைக்கலைன்னா?"

"நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்!"
எந்த பயமுமின்றி அவன் பேசியதில் அவர்கள் ஆடித்தான் போனார்கள்.

ஒரு மஞ்சள் நிற வயரை எடுத்து(வயரை எலெக்ட்ரிகல் மொழியில் 320 கே.ஜி, 720 கே,ஜி என்றெல்லாம் வரையறுப்பதுண்டு!) அவனிடம் கேள்வி கேட்டார்கள்.
"இது என்ன வயர்?"

அவன் சொன்னான்.
"யெல்லோ வயர்"

"தம்பி என்ன இப்படி ராங்கா பேசுற?"

"பின்ன என்ன சார்! ஏற்கனவே ஆளை செலக்ட் பண்ணிட்டீங்க.அப்புறம் எதுக்கு சார் இந்த இண்டர்வியூ?"

கொஞ்சமே கொஞ்சம் .. தயங்கிய அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்.
"ஆமாந்தம்பி! எங்கள என்ன பண்ணச் சொல்கிறீங்க.இது வெறும் கண்துடைப்புதான்.உங்களுக்குப் புடிக்கலைன்னா போயிடுங்க.நாங்க என்ன பண்ண முடியும்?
இன்னும் கொஞ்ச நேரத்துல E.P-லயிருந்து செலக்ட் ஆனவங்க லிஸ்ட் வரும்!"

"அப்படி முதல்லயே சொல்ல வேண்டியதுதான சார்! வெளியூர்லயிருந்தெல்லாம்
அவனவன் காலையிலேயே வந்து சாப்பிடாமக் கெடக்கான்.அப்புறம் எதுக்கு சார் போஸ்ட் கம்பம் ஏறச் சொல்றீங்க?விழுந்து கைகால் உடைஞ்சிருந்தா?

"சரிங்க தம்பி நீங்க யாரு..போன் நம்பர் என்னா-ந்னு சொல்லுங்க" என்று எதற்கும் பெரிய விவகாரம் ஆகிவிட்டால் தொடர்பு கொள்ள ஏதுவாக வாங்கி வைத்துக் கொண்டார்கள்.எந்தத் தயக்கமுமின்றி கொடுத்துவிட்டு கதவை அறைந்துசாத்திவிட்டு வெளியே வந்தவன்,
சத்தமாகச் சொன்னான்,

"இங்க நடக்குறது எல்லாமே வெறும் கண்துடைப்புதான்.அவங்க ஆளுங்களை ஏற்கனவே செலக்ட் செய்தாச்சு.நான் சண்டை போட்டுட்டு வந்துட்டேன்.கிளம்புறவங்க கிளம்புங்க.இனிமேலும் காத்துக்கிடக்காதீங்க"

என்றபடி அந்த இடத்தைவிட்டு அகல,

ஒரு 3,4 பேர் அவனுடன் சேர்ந்து வெளியே கிளம்ப மற்றவர்கள் அனைவரும் இருந்து நேர்முகத்தேர்வை சிறப்பித்துவிட்டே கிளம்பினார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்.இதில் யார்மீது குற்றம்?
மக்கள்????அதிகாரிகள்????அரசாங்கம்????
எனக்குத் தெரியவில்லை.ஆனால், ஒன்று புரிகிறது.

அன்பளிப்பு லஞ்சம் ஆனதும்!
அதிகாரம் நாட்டை ஆள்வதும்!



பி.கு :
*நண்பனது பெயரை சிறிது மாற்றியிருக்கிறேன்.
*மற்றபடி சம்பவங்கள், வசனங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க உண்மையே!
*எந்த நபரின் ஆட்சிக்காலத்தில் இது நிகழ்ந்தது என்று சொல்வதற்கில்லை.
காமராஜரின் வசனத்தைக் கொள்க.

அப்புறம்,
நாளைக்கு சுதந்திரதினம்!!!!

நாத்திகமும்..ஆத்திகமும்!

*
நாத்திகவாதிகளிடமும், த்திகவாதிகளிடமும் சில கேள்விகள்! நான் எந்தப் பக்கமாவது
சாய்ந்திருந்தால் தெரிவித்துவிடவும்!
அன்பாக!
ஒவ்வொன்றைப் பற்றியும் இருவரும் என்னென்ன கற்பனை
கொண்டிருக்க முடியும் என்பதான கற்பனை!


கடவுள்?

**ல்லாத ஒருவன்

**ங்கும் நிறைந்தவன்


சிலைகள்?

**வெறும் கல்..

**டவுளின் மற்றுமொரு உறைவிடம்(உருவம்!)


பூசைகள்?

**வெட்டிச் செலவுகள்

**றைவனுக்கான சில தொண்டுகள்.


அன்னதானம்?

**ரிசிமூட்டைகளுக்கு இடப்படும் அரிசிமூட்டைகள்.

**க்கள் தொண்டின் ஒருபகுதி!(மகேசன் தொண்டு!)


நடைபயணம்?

**ருட உணவு செரிக்கச் செல்வது.

**டலோடு இறைபக்தியையும், அர்ப்பணிப்பையும் உறுதிசெய்கிறது.


இதிகாசங்கள்?

**சோம்பேறிகளாக்கும் தலையணைகள்

**டவுளர்களின் கருத்துகள் உலகிற்கு.


உண்டியல்?

**மாற்றுவோரின் நிதிநிலையங்கள்.

**கோவிலுக்கான நற்கொடைகள்


பக்தி?

**ணம் பறிக்க எளிய வழி.

**றைவனிடம் வாங்கிய கடனுக்கு வட்டியாவது செலுத்துவோம்..


வாழ்க்கை?

**லகை முன்னேற்ற நாம் பெற்ற ஓர் வாய்ப்பு.

**பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட சிறியகால இடைவெளி


கணவன் மனைவி?

**மூகக் கட்டமைப்பில் தூண்கள்

**டவுளால் சொர்க்கத்திலேயே ஒருங்கிணைக்கப்பட்டவர்கள்


எழுத்து?

**ருட்டினைக் கிழிக்கும் வாள்

**றைவனின் கொடை


உலகம்?

**சூரியனிலிருந்து பிரிந்த பெரியபந்து.

**ண்டத்தில் இறைவன் உருட்டி விளையாடும் பந்துகளில்
இதுவும் ஒன்று.



மனிதன்?

**டவுளென்று ஒருவன் இருப்பானேயானால்
அவனையும் கடந்து உள்ளிருப்பவன்

**டவுளால் ஆட்டிவைக்கப்படும் பொம்மைகள்.


இறந்த பின் உயிர் என்னவாகிறது ?
சட்..
கணினி தட்டச்ச மறுக்கிறது.
தெரிந்தால் சொல்லுங்களேன்!


சூன்யம்!

சூன்யம்!

ஒரு துரோகம்.. ஒரு கொலை..!



"சிந்தனை செய்.. சிந்தனை செய் மனமே!"
இப்போது என் மனதில் ஓடும் சிந்தனை உங்கள் யாருடைய மனதிலும் ஓடுவதற்கு அல்லது நிற்க..நடக்க..என எதற்குமே வாய்ப்பில்லை.
அடுத்த இட்லி அல்லது பேருந்து எனக் காத்திருப்பில் இருக்கும் உங்களில் யாரும் கண்டிப்பாக எனது நினைவு எல்லைக்குள் வர முடியாது.
ஒன்றுமில்லை..(இரண்டுமில்லை!)
சின்னதாக ஒரு கொலை செய்ய வேண்டும். கொலையில் கூட சின்னது..பெரியது..உண்டா என்ன?
நான் என் இனிய நண்பனை..இல்லையில்லை..ஒரு நம்பிக்கைத் துரோகி என்ற பட்டத்துக்கு சொந்தக்காரனை.
நயவஞ்சகனை.._____________
டேஷில் நிறைய போட்டுக்கொள்ளுங்கள்.

துரோகம்..பெரிய துரோகம்!
என்னவென்று சொல்வதற்கில்லை.(சீக்ரெட்..!)
எப்படியாவது அவனை உலகத்தைவிட்டுத் துரத்து..இதுதான்.இதுதான் இப்போது வேண்டும்!
சரி! எப்படிக் கொலை செய்யலாம்..
துப்பாக்கி எளிதானது.ஆனால், வீணாகும் ஒவ்வொரு குண்டுக்கும் நாளை பதில் சொல்ல வேண்டும்.
கள்ளத்துப்பாக்கி வாங்கலாம்.அதுவும் சிக்கல்.விசயம் கசிந்துவிடும்.
கத்தி! ம்ஹூம்..வேண்டாம்.நிறைய ரத்தம் சேதமாகும்.
கயிறு..ம்..சரியான ஆயுதம்..நான் பலமான ஆள்தான்.
பின்பக்கம் சென்று (ஏன் முன்பக்கமாகவே! நானென்ன கோழையா?)
கழுத்தோடு இறுக்கி வைத்து சொடக்..ஃபினிஷ்..
ஏதோ 28 கொலைகள் செய்தவனைப் போல் பேசுகிறேன்.

இந்தக் கொலையால் என்ன லாபம்?
இழந்த பணம்,பதவி,மரியாதை திரும்பக்கிடைத்து விடுமா?
இல்லை.ஆனால், நம்பிக்கைத்துரோகியை கொல்வதில் உள்ள சுகம் வேறெதிலுமில்லை.
என்ன சரிதானே?
நீங்கள் மனதுக்குள் முயற்சிக்கிறீர்கள்.நான் கைகளில் நைலான் கயிறோடு கிளம்பிவிட்டேன்.அவ்வளவுதான்.

எந்தத் தடயமும் விட்டுவிடக்கூடாது.
கைகளுக்கு உறை..ஷூ-அச்சுகளைத் தவிர்க்க வாஷ்பேஷினை ஓப்பன் செய்துவிட்டால் வீடு நீரால் நிரம்பப்போகிறது.
ஃபாரன்சிக் திணருவார்கள்.
காரியம் முடிந்து கைரேகைகள் கவனித்து..கபாலென்று காரில் வந்து..உடனே கனடா!
என்ன யாரும் சந்தேகிக்க முடியாது.கொலை நடந்த நேரம் பெங்களூரில் என் பெயரில் ஒரு ரூம் புக்காகியிருக்கும்.
போலீசாருக்கு என் மேல் சந்தேகம் வந்தாலும் இருக்கவே இருக்கிறது இந்த ஆதாரம்.
அவனுக்கு மனைவி, குழந்தைகள் யாருமில்லை.இன்றைய கிழமை வேலைக்காரன் வேறு லீவ்..
ஏற்கனவே எல்லாத் தகவலும் கைவசம்.

******************
வன் வீடு இருந்த சந்தில் கார் புகுந்து திரும்பியது.
ஆனால், வழக்கத்தைவிட அவன் வீட்டின் முன்னால் ஒரே கூட்டம்.
தெருவின் முனையிலிருந்தே அங்கு நடப்பவைகளைக் கவனிக்க முடிந்தது.படிகளில் நிலைதடுமாறி கைகால்கள் பரப்பிக்கிடக்க..சட்டைகளில் ரத்தத் திட்டுகளுடன்..பட்டாபிராமன்..இப்போதைய பரம வைரி..

"ஷூட் பண்ணிட்டாங்கப்பா! எல்லாம் முடிஞ்சு போச்சு!"
இரண்டு மத்தியதரக் குடும்பஸ்தர்கள் கண்களில் கலவரத்துடன் காருக்கு அருகில் முணுமுணுத்துவிட்டுப் போனார்கள்

எனக்கே கொஞ்சம் அதிர்ச்சி..ஆனாலும்,
துரோகி ஒழிந்தான்.ஆனால், என் வாய்ப்பை எவனோ தட்டிப் பறித்துவிட்டான்.
துரோகிகள் ஒருவனுக்கு மட்டும் துரோகமிழைப்பது இல்லை போலும்.

******************
நைலான்கயிறை மெல்லத் தொட்டு கைகளில் அணைத்து காரின் அடியில் தள்ளினேன்.அருகில் சென்று அவனைப் பார்க்கும் ஆவலிருந்தும்..அந்தத் துரோகியை சவமாகக் கூட மீண்டும் சந்திக்க மனமில்லாததால்..
"போடா..!பட்டாபிராமா..! குட்பை!'..பார்ப்போம்..வாய்ப்பிருந்தால் நரகத்தில்.40 வருடங்கள் கழித்து..!
இனி..நோ..ப்ராப்ளம்..! நேரே கனடா.. மருந்துக்கும் இந்தியாவை நினைக்கப் போவதில்லை..
என்னை முந்திக் கொண்ட, அந்த முகம் தெரியா 'x'-க்கு நன்றிகள்!

புகை கக்கியபடி கார் சாலை வளைவில் திரும்பி மறைந்தது.

******************
"சார்!கைகுடுங்க..ரொம்ப நன்றி சார்! வீட்டை சூட்டிங்குக்காக கொடுத்ததோட இல்லாம நானே எதிர்பார்க்காத அளவுல,கொலை சீன்ல நீங்களே நடிச்சுப் பிரமாதப்படுத்திட்டீங்க சார்!"

அந்த டைரக்டர் கைகுலுக்க...பட்டாபிராமன் பெருஞ்சிரிப்போடு சொன்னான்.
"வேற சட்டை இருந்தா கொடுங்கப்பா..கசகசன்னு இருக்குது.."

******************
ங்கு நடந்தது எதுவும் தெரியாமல் நான் பழிவாங்கிய திருப்தியோடு
கனடா-வுக்கு விமானமேறிக் கொண்டிருந்தேன்!

********முற்றும்********


படம் : நன்றி கூகிள்

வெட்டு ஒண்ணு..துண்டு ரெண்டு (ஆடி - 18)



தந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே!

பார"தீ"!!!!!! உம்மை வணங்குகிறோம்!

இதைவிடவும் சுதந்திர தாகத்தை ஒருவன் தன்னுடைய
எண்ணங்களில்,தெளிவான பாடல்களில் வெளிப்படுத்த முடியுமா??

*****************************


இப்போ,
வெட்டு ஒண்ணு - துண்டு ரெண்டு!

பாரதி..
பாக்களில் ரதியும்..!
பார்க்கையில் தீயும்..!

*******
பாரதி..
விடுதலைக்கும்..!
விடு தளைக்கும்.!

*******
பாரதி..
கவிதைக்கும்.. - அவன்
கவி தைக்கும்!

*******
பாரதி!
கலை வா நீ!
சில களவானிகளும்.!

*******
பாரதி..
வீணை மீட்டவும்..!
வீட்டை மீட்க வழியற்றும்.!

*******

பாரதி..
பாருக்கே பாக்கொடைஞன்..
பாடைக்குப் பதினோரே பேர்!

*******
உண்மைதானே ..!
நன்றிங்க!

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!