புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

ஏ! ஏ! அற்ப மானிடா!!!!




கரும் படியிலும்,
நடந்தே விரைகிறான்
நாகரிக மனிதன்! (escalator!)

காலனைத் துரத்திப்
பிடித்திட இத்தனை
வேகமென் றெண்ணிடுவேன்!

நாக ரீகம்
எனவே உரைத்து
நலங்கள் பலதொலைப்பான்!

கால மாற்றம்
எனும் பெயராலே
களங்கம் பலபுரிவான்!

வன்..

ன்றை நினைத்து
நேற்றினைத் தொலைத்தான்
வாழவும் மறந்துவிட்டான்!

தோ..

நாளையை நினைத்து
இன்றைத் தொலைக்கிறான்
நன்மைபல என்பான்!

நாளை எனவரும்
நாளைக் காணாது
நாளை இறந்திடுவான்!

ல்லைக் காட்டி
பணமும் சிரிக்க!
பாதாளம் சென்றிடுவான்

நில்லென ஒருநொடி
மனதை நிறுத்த
மறந்தவனும் ஆனான்!

ல்லை யெனஎவர்
வந்திடும் போதும்
இல்லை எனவுரைத்தான்!

வன் ...

நினைப்பால் எதையும்
வாழ்வான்! ஆனால்..
நிஜத்தில் வாழ்ந்துவிடான்!

ற்பனை தனிலே
காலம் கரைத்தான்
காலன் தனைஅடைந்தான்!

த்துவம் பலவும்
பேசுவன் எதையும்
தாரை வார்த்துவிடான்!

த்தரை மீதில்
இதுஎன்ன வாழ்வென
இழித்தும் பேசிடுவான்!

முத்தங்கள் கன்னியர்
முகத்தில் தந்ததும்
முழுதும் மறந்திடுவான்!

ழுகை கவலை
கோபம் என்றே
அருமை தொலைத்திடுவான்!

வன்தான் என்றும்
இனிமை அறியாது
இறப்பான் அற்ப மானுடனே!!!!!


***************

சேதுவை மேடுறுத்தி பீதி சமைப்போம்!!!!



னிதரை மனிதர் கொல்லும் நோய்க்கு
மருந்தொன் றிங்கு வேண்டும்!
மீனவர் வாழ்வும் மானிட வாழ்வென
மாற்றார் புரிந்திட வேண்டும்!

புனிதர்கள் என்றே யாரும் இங்கிலர்
புரிந்திடல் நன்றே யாகும்!
குனிந்திடக் குனிந்திடக் கொட்டுதல் முறையோ?
கேட்கவும் நாதியு மிலையோ?

திரிகள் என்றே அழைப்பவர் கூட
இப்படிச் செய்திட மாட்டார்!
புதிராய் இருக்குது புரியவும் மறுக்குது
பூனைக்கு மணியும் இலையோ?

னியொரு மனிதனுக் குணவில் லையெனில்
செகத்தினை அழித்திடச் சொன்னார்!
இனியொரு மனிதன் அழிந்திடும் போதும்
இப்படித் தானா இருக்கும்?

ட்டுகள் மட்டும் போதுமிங் கென்றால்
ஓலம் தொடர்ந்திடச் செய்யும்!
வீட்டுக்குள் துயரம் வந்ததாய் நினைத்து
விரட்டிட முனைவோம் வாரீர்!

நமது மீனவர்களுக்காக நாம் நகர்த்தும் ஓர் கோரிக்கைக்கப்பல்!

*****

தொடுப்பு:

சேதுவை மேடுறுத்த
செங்கற்கள் தேவையில்லை!
செத்த மீனவனின்
உடல்களே போதுமானது!

ஓர் நிலவும் - சிறுவனும்!



நிலவும் இவனும் நித்தம் மகிழ்ந்தே
...உலவித் திரிவர் உயர்வாய் வானில்!
நீல வண்ண நிலம்போல் வானம்
...கோல வடிவாய்க் கரையும் மேகம்!
தேவதை போலே திரியும் நிலவு
...மாவதை இவனும் மறைத்ததை அறியா!
பெருமை மிகவும் பூண்டே, வானப்
...பருந்தைக் கடந்தும் பறக்கும் நிலவுக்
கெத்தனை பெரிய இறகு என்றே
...இத்தனை நாளாய் எண்ணியும் வந்தான்!
எழுந்து சென்று ஏதோ ஏதோ
...கொழுந்து எரியக் கலந்து பேசி,
நிலவு சிரித்தால் நிதமும் சிரிப்பான்
...நிலவழு தால்இந் நீசனும் அழுவான்!
பழுதைப் போலே பாலனை எண்ணி
...கழுத்தைக் கூடவும் காட்டிட இயலா
வெண்ணி லாவிடம் வேண்டிப் பேசிட
...கண்ணையும் அதுவோ காட்டிட மாட்டா!

திரும்ப நினைவைத் தீண்டிய போதே
...விருப்ப மின்றி வெண்ணிலா சொன்னது!
உனையும் பார்ப்பேன் உலகில் நானும்
...இனியும் பேசு என்றும் கேட்பேன்!
இரும்பால் செய்த இதயம் அதற்கு
...துரும்பாய் இளைத்தும் துணைவர வில்லை!
இவனுக் கோபனி இதழென இதயம்!
...குவலயப் பனிபோல் 'களுக்'கெனக் கரையும்!

இறகு மட்டுமே இருப்பதை அறிந்தவன்
...உறவு வேண்டியே ஒருயுகம் துடித்தவன்!
அலகும் உண்டு அப்பற வைக்கென
...சிலபொழு தேனும் சிந்தித் திருந்தால்!
*கற்றவர் மறுக்கும் கலகம் இதனில்
...ஒற்றனைப் போலே ஒளிந்திட மாட்டான்!


தொடுப்பு:
*புதுக்கவிதை எனப் பெயரை வைத்துவிட்டு இதுபோல் எழுதுவதற்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்?:)
*"கற்றவர்" - என்றால் "அனுபவப்பட்டவர்கள்" என்று கொள்ளலாம்.

களவானி! - ஓர் ஓவியம்!




திவுகள் இட்டு பலநாட்கள் ஆகிவிட்டதால் இடைவெளியை நிரப்பிட இந்தப் பதிவு!
சில படங்கள் மட்டுமே ஓவியமாவதற்குத் தகுதியானவை.(அனைத்தையுமே வரையமுடியும் என்றாலும் வெகுசில தான் வரையவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும்!
அந்த வகையில் இந்தக் களவானி என்னை ரொம்பவே கவர்ந்த படம்.)
இறுதிக்கட்டத்தில் பொறுமையில்லாததால் ஓவியத்தின் பின்புலங்கள் ரசிக்கமுடியாததாக இருக்கலாம்.
இருப்பினும் உங்களின் பார்வைக்கு!

இராஜராஜசோழனை விரைவில் தொடரமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.பார்க்கலாம்.
அதுவரை அடியேனின் அன்பு வணக்கங்கள்..!

நடக்கும் என்பார் நடக்காது!
நடக்கா தென்பார் நடந்துவிடும்!
-கவியரசர்

மன்னாதிமன்னன்- இராஜராஜசோழன்! (பகுதி-5)

*
பகுதி 1 இங்கே -> வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும்!
பகுதி 2 இங்கே -> விழித்துக்கொண்ட பேரரசு - திருப்புறம்பியம் போர்!
பகுதி 3 இங்கே -> அரங்கேறியது ஒரு இராஜகொலை -ஆதித்த கரிகாலன் மரணம்!
பகுதி 4 இங்கே ->அரியணை ஏறினான் இராஜராஜசோழன்!


குந்தவை எனும் தேவதை!

இராஜராஜசோழன் ஒன்றும் திடீரெனப் புகுந்து ஆட்சியைப் பிடித்து அதிகாரத்தை விஸ்தீரணம் செய்துவிடவில்லை என்பதை நாம் முந்தைய பக்கங்களில் அறிவோம்.
சந்திரகுப்தருக்கு ஒரு சாணக்கியர் இருந்ததுபோல ராஜராஜனுக்கு சாணக்கியராக இருந்தவர் ஒரு பெண் என்றால் நம்பமுடிகிறதா..?
ஆம்.அவர்தான் குந்தவை நாச்சியார்.

இராஜராஜனின் அக்காவான இவர்தான் அவனுடைய ஒவ்வொரு வெற்றிக்கும் பின் இருந்த பெண்.
தஞ்சையில் கற்றளி(கற்கோவில்!) எழுப்பியதில் இருந்து, தரணியில் எங்கும் வெற்றிக்கொடி நாட்டியதுவரை ஒவ்வொரு செயலிலும் மறைமுகமாக ராஜராஜனுக்குப் பக்கத்துணையாயிருந்தது குந்தவையே. அவன் கொஞ்சம் கொஞ்சமாக தனது அக்காவான குந்தவையால் செதுக்கப்பட்டான் என்றே சொல்லலாம்.



'குந்த' என்றால் 'தும்பைப்பூ போல் தூய்மையான' என்ற அர்த்தம்.குந்தவை எனும் தேவதையால் சோழர்குலம் பெருமையடைய வேண்டும் என்பதாலேயே சுந்தரசோழர் இந்தப்பெயரை வைத்திருந்தார்.(கி.பி-960 களில், கீழைச்சாளுக்கிய நாட்டை ஆண்ட வீமன் என்பவன் தன் மகள் குந்தவையை அரிஞ்சய சோழருக்கு மணமுடித்தான்.அந்த வீமன் குந்தவையின் நினைவாகவே சுந்தரசோழர் தன் மகளுக்குக் குந்தவை என்று பெயரிட்டார்.பின்னாளில் தன் அக்காவின் மீது கொண்ட எல்லையற்ற அன்பால் தன் மகளுக்கும் குந்தவை என்றே ராஜராஜன் பெயரிட்டான் என்பதும் வேறு விசயம்!)

குந்தவையின் நட்சத்திரமான அவிட்டமும்,ராஜராஜனின் நட்சத்திரமான சதயமும் அடுத்தடுத்த நட்சத்திரம் என்பதாலும் அவர்களுக்குள் பாசப்பிணைப்பு நிறைந்திருந்தது என்று ஆரூடம் கூறுபவர்களும் உள்ளனர்.ஆண்டுதோறும் இந்த இரண்டு நாட்களுமே அப்போது சோழமக்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டது.

"உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் திரு தமக்
கையார் வல்லவரையார் வந்தியத்தேவர்
மகாதேவியார் ஆழ்வார். பராந்தகன்
குந்தவையாழ்வார்"

என்று தஞ்சைக் கல்வெட்டுகளும்,

"உடையார் பொன் மாளிகையில் துஞ்சிய தேவர்
திருமகளார் ஸ்ரீ பராந்தகன் குந்தவைப் பிராட்டியார்"


என்று தாராபுரம் கல்வெட்டுகளும் கூறுகின்றன.

இராஜராஜசோழன் கி.பி 947-ல் ஐப்பசி சதயத்தில் பிறந்தவன்.இதனாலேயே சதயத்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே.ஆனாலும் மிகப்பொறுமை காத்து(அரியணை ராஜராஜன் அமர்வதற்காகக் காத்திருந்தது என்பதே தகும்!) கிட்டத்தட்ட தனது 38-ஆவது வயதிலேயே அரசுக்கட்டில் அமர்ந்தான்.

இலங்கையின் வடபகுதிகள்,பாண்டியர்கள்,சாளுக்கியர்கள் எனப் பலரை போர்முனைகளில் ஏற்கனவே சந்தித்து பேரளவில் பெற்றிருந்த அனுபவத்துடன் ராஜராஜன் அரியணை ஏறியபோது சுற்றியிருந்த அரசர்களின் வயிற்றில் புளியைக் கரைத்ததென்னவோ உண்மை.

என்றாலும்,கி.பி 985 -லேயே ஆட்சிக்கு வந்தாலும்,
முதல் நான்கு வருடங்கள் ஆட்சியையும், நாட்டையும் படைகளையும் பலப்படுத்துவதில் தான் ராஜராஜனது கவனம் இருந்தது.எதிரிகளைக் கண்காணித்துப் பின் அவர்களை ராஜராஜன் அணுகிய விதம் போற்றுதலுக்குரியது.

சுந்தரசோழன் இறப்பின்போதே வானவன் மாதேவியாரும் உடன் கட்டை ஏறிவிட்டதால் பெற்றோரின் இடத்தில் இருந்து ராஜராஜனை வழிநடத்தியது குந்தவையே.ராஜராஜனும் அக்காவான குந்தவையின் மீது உயர்ந்த மரியாதை வைத்திருந்தான்.அரசின் முக்கிய விசயங்களில் முடிவெடுக்கும் அளவிற்கு குந்தவையின் செல்வாக்கு இருந்தது.அந்த முடிவுகள் ராஜாங்க விசயங்களில் சரியாகவும் இருந்தது என்பதும் உண்மை.

குந்தவையும் பிறந்தவீட்டுடனே தங்கிவிடவேண்டும் என்ற பேராவல் கொண்டவராகவே இருந்தார்.அதனாலேயே பேரரசுகளுக்கு ராணியாக வேண்டியவர் சற்றே வலிமையிழந்து சிற்றரசாகக் கோலோச்சி சோழருக்குக் கீழ் இருந்த வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவனை மணந்தார்.
(பொன்னியின் செல்வனில் உயர்திரு.கல்கி அவர்களின் இலங்கைக்கு அருண்மொழியை சந்திக்கச் செல்லும் தூதனான அதே வந்தியத்தேவன்.அருண்மொழி கதைநாயகனாக இருந்தபோதும் அவனுக்கும் ஒருபடிமேலே போய் தனது வீரச்செயல்களினால் நம்மைக் கவர்ந்தவன் இந்த வாணர்குல வீரன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!)

வந்தியத்தேவன் ராஜராஜன் ஆட்சியில் வட ஆற்காடு(சேலம்) பகுதிகளின் தண்டநாயகனாக இருந்தான்.
வந்தியத்தேவனை மணந்த குந்தவை சோழ அரண்மனை பழையாறையிலேயே தங்கியிருந்து கோவில்களுக்குக் கொடைகளும்,ராஜராஜனுக்கு விலைமதிப்பற்ற அறிவுரைகளையும் வழங்கினார்.
ராஜராஜனின் வெற்றிக்குப் பின் இருந்த பெண் என்று தைரியமாக நாம் குந்தவை நாச்சியாரை அடையாளம் காட்ட முடியும்.

குந்தவி தேவியும், வானதியும்



குந்தவை சைவசமயப் பற்றுடன் இருந்தாலும் வைணவ, ஜைன மதங்களையும் போற்றிவளர்த்தார்.இதில் அக்காவின் வழியையே ராஜராஜனும் கடைப்பிடித்தான்.
குந்தவை நாச்சியாரின்,
ரவிகுல மாணிக்க ஈஸ்வரம்,குந்தவை ஜீனாலயம்,குந்தவை விண்ணகரம் போன்றவை இதற்கு சாட்சி.
(ஜீனாலயம் - சமணமதப்பள்ளி, விண்ணகரம் - பெருமாளுக்கான கோயில்களையும் குறிக்கும்!)

தஞ்சைப் பெரியகோவிலில் சுந்தரசோழருக்கும்,வானவன்மாதேவியாருக்கும் திருமேனி(சிலை) எடுத்து நிவேதனமும் அளித்தார்.உமாதேவியர்,விடங்கர் திருமேனியை அளித்ததோடு ஏராளமான பொன்னையும்,முத்து,மாணிக்கங்களையும் கோவிலுக்கு அளித்துள்ளார்.
(இதன் மதிப்பு இன்றைய கணக்கில் சில கோடிகள்!)

ஆதித்த சோழன் இறந்தபிறகு அரியணை பற்றி அருண்மொழிக்கு அறிவுரை கூறியதிலும் குந்தவையின் பங்கு மகத்தானது.
குந்தவை நாச்சியார் தவிர,

இன்னொரு பெண்பிராட்டியாரான செம்பியன் மாதேவியார்(கண்டராதித்தரின் மனைவி!) 6 தலைமுறை மன்னர்களைக் கண்டவராக சிறப்புடன் வாழ்ந்துவந்தார்.ராஜாங்க விசயங்களில் அவர் தலையிடவில்லை என்றாலும் அரண்மனையின் முக்கிய விவகாரங்களில் அவர் முன்னின்று தன் மக்களை வழிநடத்தினார் என்று தெரிகிறது.

சோழநாட்டில் பெண் அதிகாரிகள் செயல்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரம் கூட இருக்கின்றது. இராஜராஜனின் மனைவி லோகமகாதேவி கொடுத்த நிவந்தங்களைக் கல்வெட்டில் பதிக்குமாறு "சோமன் அமிர்தவல்லி" என்ற பெண் அதிகாரி உத்தரவிட்டதாகக் கூறும் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து பெண்களும் அந்த நேரத்தில் உயர்ந்த இடத்திலிருந்ததை அறிய முடிகிறது.


உடன் கூட்டத்து அதிகாரம் செய்கின்ற
கோவலூர் உடையான் காடன்
னூற்றெண்மரையும் அதிகாரிச்சி
எருதந் குஞ்சர மல்லியையும்..!


என்ற கல்வெட்டில் இதனை நாம் அறிய முடிகிறது.

வரலாறு எப்போதும் போர்களை மட்டும் கணக்கிடுவதல்ல என்பதால் தான் இதனையும் எழுதினேன்.ரொம்ப அயர்ச்சி தந்தால் பாதையை மாற்றி விடலாம்.
இவ்வளவு பாசமாயிருந்த தமக்கை குந்தவைப் பிராட்டியாரைப் பற்றி எழுதாவிட்டால் ராஜராஜன் என்மீதும் (பாசப்)போர்தொடுக்கக்கூடும். அதனாலேயே இந்தப் பதிவு.



(பொன்னியின் செல்வனில் நந்தினி,பூங்குழலி என்று அழகுப்பதுமைகள் பலரைப் பற்றியும் உயர்திரு.கல்கி அவர்கள் வர்ணித்திருந்தாலும் நம் ஆதர்சத் தேர்வு நீள்மூக்கும்,கொண்டையும்,கயல்விழிகளும் கொண்டு பேரறிவுடன்(பேரழகுடனும்) விளங்கிய குந்தவை நாச்சியார்தான்.
வந்தியத்தேவனின் காதுகளில் இது விழுந்திருக்காது என்றே நம்புவோம்!)

-தொடர்ந்து வருவான்

மன்னாதிமன்னன்- இராஜராஜசோழன்! (பகுதி-4)

*
பகுதி 1 இங்கே -> வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும்!
பகுதி 2 இங்கே -> விழித்துக்கொண்ட பேரரசு - திருப்புறம்பியம் போர்!
பகுதி 3 இங்கே -> அரங்கேறியது ஒரு இராஜகொலை -ஆதித்த கரிகாலன் மரணம்!


அரியணை ஏறினான் இராஜராஜசோழன்!

சுந்தரசோழன் இறந்தபிறகு, உத்தமசோழன்(மதுராந்தகன்) பரகேசரி என்ற பட்டத்துடன் ஆட்சிக்கு வந்தது சரியாக கி.பி 973-ல்.இதிலிருந்து சரியாகப் பனிரெண்டு ஆண்டுகள் அருண்மொழிவர்மன் பட்டத்து சோழ இளவரசனாக வலம்வந்தான்.

உத்தமசோழனைப் பற்றி அத்தனை கொடுங்கோலன் என்றெல்லாம் எந்தக் கல்வெட்டுகளோ,குறிப்புகளோ குறிப்பிடவில்லை.அவனுடைய ஆட்சிக்காலம் சிறப்பாகவே இருந்தது.ஏனெனில் சுந்தரசோழனுடைய ஆட்சிக்காலத்திலேயே எதிரிகளாக அச்சுறுத்தியவர்கள் சற்றே அடக்கி வைக்கப்பட்டிருந்தனர்.தவிரவும் ஈழத்திலும்,பாண்டிய மண்டலத்திலும் உத்தமசோழனது நாணயங்கள் காணக்கிடைக்கின்றன.

தனிப்பட்ட முறையிலும் அரசாங்க காரியங்களிலும் சிறந்தவனாகவே உத்தமசோழன் இருந்துவந்தான்.திருநாரையூர்,திருவீசையூர்,திருவாலங்காடு உள்ளிட்ட பல சிவாலயங்களுக்கு நிவந்தங்களும் அளித்துள்ளான்.சைவசமயத்தின் பால் அதிகமான ஈடுபாடு கொண்டவனாக இருந்தபோதிலும்,வைணவ ஆலயங்களையும் அவன் மறுக்காமல் சில விஷ்ணு ஆலயங்களுக்கும் நிவந்தங்கள் செய்துள்ளான்.

இராஜராஜனும் மதுராந்தகரிடம் மிகப்பாசம் கொண்டிருந்தான்.தனது மகனான (முதலாம்) ராஜேந்திரன் பிறந்தவுடன் தன் சிற்றப்பனின் மேல் கொண்ட அன்பாலும்,குழந்தையின் மதுரமான சிரிப்பைக் கொண்டும் மதுராந்தகன் என்றே பெயரிட்டான்.

உத்தமசோழன் அரிஞ்சய சோழனுக்குப் பிறகே ஆட்சிக்கு வந்திருக்க வேண்டியவன்.உரியவயது இல்லை என காரணம்காட்டி பலகாலம் அரியணை மறுக்கப்பட்டான் என்று கூறுவோரும் உள்ளனர்.

உத்தமசோழனுடைய ஆட்சியில் மக்கள் நன்றாகவே இருந்தார்கள் என்றாலும், சோழநாட்டின் வடக்குப்பகுதிகளிலும்,பாண்டிய நாட்டிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகளை உத்தமசோழனால் அடக்க இயலவில்லை என்றே தெரிகிறது.மலைநாடும்,சில சிற்றரசுகளும்கூட போர்க்கொடியைத் தூக்கியிருந்தன.

சோழநாட்டுக்கு வடக்கில் இந்நேரம் மிகப்பெரிய திருப்பம் ஒன்று நிகழ்ந்திருந்தது.

காலம்காலமாகவே மிகப்பெரிய நிலபரப்பைத் தன்னகத்தே கொண்டு வலிமையுடன் விளங்கிய பேரரசு மான்யகேதா-வைத் தலைமையாகக் கொண்ட ராட்டிரகூடப் பேரரசு.கி.பி-730 - களில் (சரியாகச் சொல்வதானால் கி.பி 735-ல்) சாளுக்கியர்களை ஒழித்துவிட்டு அந்த பரந்த நிலப்பரப்பைக் கைப்பற்றிய ராட்டிரகூடத்தின் முதல்மன்னன் தந்திதுர்கனே, பிற்காலச் சோழர்களுக்குப் பெரும் தலைவலியைத் தொடங்கி வைத்தான்.பல்லவர்கள் இருந்த வரை அவர்களை ஒருவழி செய்தவர்கள்,அடுத்து சோழர்களைப் பதம்பார்க்கத் தொடங்கியிருந்தனர்.

இவர்களிடமிருந்து நாட்டின் வடபகுதியைக் காப்பதற்கே பெரும்பாலான படைகளை சோழர்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது.ராட்டிரகூடர்களிடமிருந்து தங்களது பகுதிகளைக் காப்பதே பெரிய வேலையாக இருந்ததால் அவர்களிடமிருந்து எந்தப்பகுதிகளையும் கைப்பற்றுவதைப் பற்றி நினைத்துக்கூடப்பார்க்க முடியாத நிலை.

அதிலும் கண்டராதித்தர் ஆட்சியின்போது கிட்டத்தட்ட இன்றைய தஞ்சை வரை வந்து ராட்டிரகூடர்கள் ஆக்கிரமித்துக்கொண்டதும்,பின் அரும்பாடுபட்டு அவர்களை அப்புறப்படுத்தியதும் நடந்தது.சாளுக்கியர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தங்களது கொடியைப் பறக்கவிட்ட இந்த ராட்டிரகூடர்களின் கடைசிமன்னன் இந்திரா IV.

(பார்க்க படம் - ராட்டிரகூடப் பேரரசு)



வாழ்க்கை மட்டுமல்ல ..வரலாறும் வட்டம் என்பதுபோல்,
கி.பி - 973-ல் தைலப்பா-II என்ற மேலைச்சாளுக்கிய மன்னன் இந்திரா-IV -ஐ வெற்றிகொண்டு ராட்டிரகூடத்தில் 240 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சாளுக்கியக் கொடி ஏற்றினான்.இத்துடன் ராட்டிரகூட வம்சம் சிதறிப்போய் விட்டது.
(இவ்வளவு விவரமாக இவர்களைப் பற்றிச் சொல்வதில் விசயம் இருக்கிறது.ஏனெனில்
இந்த தைலப்பா-II கி.பி 997-ல் இறந்துவிட்டபோது ஆட்சிக்கு வந்தவனே சத்யாசிரயன்.
தந்தையைவிட அடாவடித்தனத்தோடு சோழர்களுக்குத் தொல்லை தந்தவன்)

இந்த சாளுக்கிய நாடும் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது.
கல்யாணியைத் தலைநகராய்க்கொண்ட மேலைச்சாளுக்கியநாடு.வடபெண்ணை முதல் கிருஷ்ணா வரை கொண்ட வேங்கி தலைநகரான கீழைசாளுக்கியநாடு.

சரி! ராட்டிரகூடர்களை புறந்தள்ளி நம் ராஜராஜனிடம் வருவோம்!

(கி.பி 973-985 )உத்தமசோழன் 12 ஆண்டுகள் ஆட்சிசெய்து கி.பி 985-ல் மரணமடைந்தான்.மதுராந்தக கண்டராதித்தன் என்ற பெயரில் உத்தமசோழனுக்கு ஒரு மகன் இருந்தபோதிலும் கொடுத்த வாக்கின்படி அருண்மொழியே ஆட்சிக்கு வர ,இளைய மதுராந்தகன் கோவில் நிலங்களையும்,நிர்வாகங்களையும் கண்காணிக்கும் முக்கியப்பொறுப்பில் அமர்த்தப்பட்டான்.

அடுத்து அருண்மொழி அரியணை ஏறும்முன் , சட்டென
சோழநாட்டைச் சுற்றி அப்போது இருந்த நாடுகளை ஒரு நோட்டம் விடுவோம்!
(பார்க்க படம்:2)



சோழநாட்டுக்குத் தெற்கே பாண்டியநாடு,அதற்கும் கீழே ஈழநாடு,மேற்குக்கரையில் மலைநாடு(சேரம்),அதை ஒட்டி கங்கபாடி,காவிரி தொடங்கும் குடகுநாடு,மைசூரை உள்ளடக்கிய தடிகைபாடி,மைசூருக்குக் கிழக்கே நுளம்பபல்லவர்கள் ஆண்ட நுளம்பபாடி(தும்கூர்,பெங்களூரு முதலிய பகுதிகள்!),வடக்கே சாளுக்கிய நாடு,கலிங்கநாடு என்ற அளவில் நாடுகளும்,அவற்றால் பகைகளும் சோழநாட்டைச் சூழ்ந்திருந்தன.

இந்நிலையில்தான்,
புறாவுக்காக சதைகொடுத்த சிபிச்சக்கரவர்த்தி,நீதிக்காய் மகனைத் தேர்க்காலில் கிடத்திய மனுநீதிச்சோழன்,இமயத்தில் கொடி பொறித்த கரிகாற்பெருவளத்தான் என அனைத்துப்புகழ்பெற்ற சோழச்சக்கரவர்த்திகளின் மொத்த உருவமாய்,
கி.பி 985-ஆம் ஆண்டு ஆடிமாதம் புனர்பூச நட்சத்திரம்(ஜூலை 18) அருண்மொழி வர்மன் ராஜகேசரி என்ற பட்டத்துடன் உலகப்புகழ் பெறப்போகும் இராஜராஜசோழனாக அரியணை ஏறினான்.

இனி செல்லுமிடம் எங்கும்... ஜெயக்கொடிதான்!


-தொடர்ந்து வருவான்

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2011 (4)
    • ▼  மார்ச் (1)

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!