
மனிதரை மனிதர் கொல்லும் நோய்க்கு
மருந்தொன் றிங்கு வேண்டும்!
மீனவர் வாழ்வும் மானிட வாழ்வென
மாற்றார் புரிந்திட வேண்டும்!
புனிதர்கள் என்றே யாரும் இங்கிலர்
புரிந்திடல் நன்றே யாகும்!
குனிந்திடக் குனிந்திடக் கொட்டுதல் முறையோ?
கேட்கவும் நாதியு மிலையோ?
எதிரிகள் என்றே அழைப்பவர் கூட
இப்படிச் செய்திட மாட்டார்!
புதிராய் இருக்குது புரியவும் மறுக்குது
பூனைக்கு மணியும் இலையோ?
தனியொரு மனிதனுக் குணவில் லையெனில்
செகத்தினை அழித்திடச் சொன்னார்!
இனியொரு மனிதன் அழிந்திடும் போதும்
இப்படித் தானா இருக்கும்?
ஓட்டுகள் மட்டும் போதுமிங் கென்றால்
ஓலம் தொடர்ந்திடச் செய்யும்!
வீட்டுக்குள் துயரம் வந்ததாய் நினைத்து
விரட்டிட முனைவோம் வாரீர்!
நமது மீனவர்களுக்காக நாம் நகர்த்தும் ஓர் கோரிக்கைக்கப்பல்!
*****
தொடுப்பு:
சேதுவை மேடுறுத்த
செங்கற்கள் தேவையில்லை!
செத்த மீனவனின்
உடல்களே போதுமானது!
சேதுவை மேடுறுத்தி பீதி சமைப்போம்!!!!
லேபிள்கள்: நெடுங்கவிதைகள்
ஓர் நிலவும் - சிறுவனும்!

நிலவும் இவனும் நித்தம் மகிழ்ந்தே
...உலவித் திரிவர் உயர்வாய் வானில்!
நீல வண்ண நிலம்போல் வானம்
...கோல வடிவாய்க் கரையும் மேகம்!
தேவதை போலே திரியும் நிலவு
...மாவதை இவனும் மறைத்ததை அறியா!
பெருமை மிகவும் பூண்டே, வானப்
...பருந்தைக் கடந்தும் பறக்கும் நிலவுக்
கெத்தனை பெரிய இறகு என்றே
...இத்தனை நாளாய் எண்ணியும் வந்தான்!
எழுந்து சென்று ஏதோ ஏதோ
...கொழுந்து எரியக் கலந்து பேசி,
நிலவு சிரித்தால் நிதமும் சிரிப்பான்
...நிலவழு தால்இந் நீசனும் அழுவான்!
பழுதைப் போலே பாலனை எண்ணி
...கழுத்தைக் கூடவும் காட்டிட இயலா
வெண்ணி லாவிடம் வேண்டிப் பேசிட
...கண்ணையும் அதுவோ காட்டிட மாட்டா!
திரும்ப நினைவைத் தீண்டிய போதே
...விருப்ப மின்றி வெண்ணிலா சொன்னது!
உனையும் பார்ப்பேன் உலகில் நானும்
...இனியும் பேசு என்றும் கேட்பேன்!
இரும்பால் செய்த இதயம் அதற்கு
...துரும்பாய் இளைத்தும் துணைவர வில்லை!
இவனுக் கோபனி இதழென இதயம்!
...குவலயப் பனிபோல் 'களுக்'கெனக் கரையும்!
இறகு மட்டுமே இருப்பதை அறிந்தவன்
...உறவு வேண்டியே ஒருயுகம் துடித்தவன்!
அலகும் உண்டு அப்பற வைக்கென
...சிலபொழு தேனும் சிந்தித் திருந்தால்!
*கற்றவர் மறுக்கும் கலகம் இதனில்
...ஒற்றனைப் போலே ஒளிந்திட மாட்டான்!
தொடுப்பு:
*புதுக்கவிதை எனப் பெயரை வைத்துவிட்டு இதுபோல் எழுதுவதற்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்?:)
*"கற்றவர்" - என்றால் "அனுபவப்பட்டவர்கள்" என்று கொள்ளலாம்.
லேபிள்கள்: நெடுங்கவிதைகள்
நானே! நானே! அனைத்தும் நானே!

கண்ணனைப் பற்றி எத்தனை கவிதை வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே இருக்கலாம்!
கனவில் வந்த கண்ணன் கவியெழுத உரைத்தான்.!
(கண்ணனுக்குப் போதாத காலம், நம்ம கனவுலயெல்லாம் வர ஆரம்பிச்சுட்டார்)
விடுவேனா நான். கேள் என் கவியை! என கண்ணனே உரைப்பதாக ஒரு கவிதைய எடுத்துவிட்டேன்.
அம்புட்டுதேன்.மகாலட்சுமியே தேவலை என்று நான் கண்விழிக்கும்போதுமறைந்துவிட்டான்.
மாயக்கண்ணன்!
யாரெனக் கண்ணனைக் கேட்டால்,
அவன் தன்னை எப்படி அறிமுகம் செய்வான்?கற்பனைதான்!
அன்னையர் எனைத்தான் கண்ணன் என்பார்!
கன்னியர் எனைத்தான் கிருஷ்ணன் என்பார்!
விண்ணவர் முன்னவர் யாவருக்கும் நான்
அன்னவர் என்றே அறியப் படுவேன்!
வேதம் நான்கினையும் ஓதும் அடியார்தம்
நாவினில் இருப்பதும் நானே ! நானே!
ஊதுகுழல்பிடிக்கும் ஆய்ச்சியர்தம்மில்
கீதமிசைப்பதுவும் நானே! நானே!
பாதம்வரைவார் தம் பாகமொன்றாக
வீடு புகுவதும் நானே! நானே!
தாதன்போல நிதம் தயங்கும்வேளைதனில்
காதில் உரைப்பவனும் நானே! நானே!
வீணை மீட்டிவிட விரல்கள் முனைகையில்
நாதம் ஒலிப்பவனும் நானே!நானே!
மானே!தேனே! எனும் மயங்கும் வார்த்தைதனில்
மருகும் அன்புமது நானே!நானே!
இன்பமும் துன்பமும் படைக்கும் மனிதா!
எல்லாப் பொருளிலும் இயக்கம் நானே!
கல்லார் இதயமும் கற்றவர் உதயமும்
எல்லாம் எழுவதும் என்னரு ளாலே!
ராதையர் தேடிடும் கண்ணனும் நானே!
கீதையின் நாயகன் கிருஷ்ணனும் நானே!
பாதையில் தோன்றிடும் முட்களும் நானே!
வீதியில் ஓடிடும் எறும்புமென் உயிரே!
இந்த அறிமுகம் போதுமா ?
இன்னும் கொஞ்சம் வேண்டுமா?? என்று கேட்பானோ?
(இவிங்க அழிம்புகளுக்கு ஒரு அளவே இல்லையா?!)
லேபிள்கள்: நெடுங்கவிதைகள்
கல்விக்கண் திறந்ததின்று!
கார்மேகம் திரண்டதின்று!
கர்மவீரர் பிறந்ததின்று!
காமராசர் உதித்ததின்று!
சூரியனோ டொப்பிட்டால்
சூரியனோ ஒளியிழக்கும்!
மாரியினோடொப்பிட்டால்
மழைநீரோ வற்றிநிற்கும்!
ஒப்புவமை இல்லாத
உயர்வான ஒருபொருளை
எப்பொருளோ டொப்பிடுவேன்
இயலாது திகைத்துநிற்பேன்!
காமராசர் ஆட்சி செய்ய
கலகங்கள் துடைத்து நிற்க
நூறுபேரின் வாய்திறக்கும்
நின்முகமோ பசியாற்றும்!
குன்றாத புகழ்வாய்ந்த
எம்.சி.ஆர் அன்று சொன்னார்
அண்ணா- என் வழிகாட்டி!
காமராசர் - என் தலைவர்!
ஆயிரம்பேர் அய்யாவின்
ஆட்சி செய்யத் துடித்திடலாம்!
தனக்குவமை இல்லாத
தலைவர் காமராசர்தான்!
அய்யன் காமராசர் வந்த
அருமையான இந்நாளில்
அவரை வணங்கி நிற்க
அழகுபெறும் நம்வாழ்வும்!
தனக்குவமை இலாத அருந்-
தலைவரவர் தாள்பணிவோம்!
படிக்காத மேதை அவர்களின் அரிய புகைப்படங்களும்,தகவல்களும் இங்குள்ளன.
http://kamarajar.blogspot.com/
லேபிள்கள்: நெடுங்கவிதைகள்
கொஞ்ச(ம்) நீ என்னருகில் வாயேன்!!!!

சாம்பாருடன் கொஞ்சம் சோறு
சடுதியாட நிறை சேறு!
பாம்பாட்டி போலொரு ஆட்டம்!
பம்பரம் போல்சுழல் ஓட்டம்!
வீம்பாகத் தலைசாய்ப்பு, கோபம்
விளையாட்டாய்க் கொஞ்சலொடு சிணுங்கல்
தாம்பாலத் தட்டினிலே இனிப்பு
தகிக்காத வெயிலினிலே களிப்பு!
கள்ளமில்லா சிறார் வேணும்!
காலத்துக்கும் விளையாட வேணும்!
பள்ளமில்லா வாழ்க்கையும் வேணும்!
பயமின்றிப் பாடியாட வேணும்!
உள்ளத்தில் உருவாகும் நினைப்பு!
உயர்வாகி நலம்பெறவே வேணும்!
பள்ளிக்கு மீண்டும்நான் போயே
பாடமிரண்டு படித்திடவும் வேணும்!
குருவிபோல் வானத்தின் மீதே
குழந்தைநான் பறந்திடவும் வேணும்!
தெருவிலே நண்பனொடு அலைந்து
தேடிபழம் அடித்திடவும் வேணும்!
நல்லபிள்ளை யாயிருப்பேன் - அம்மா!
நலமாகச் சொல்கேட்பேன் - அம்மா!
கொஞ்சம்நீ என்னருகில் வாயேன்-மீண்டும்
குழந்தையாய் மாற்றிவிடு தாயே!
லேபிள்கள்: நெடுங்கவிதைகள்
