"அப்பா.."
அழைத்தபடி வந்து என்னை முதுகோடு கட்டிக்கொண்ட மகள் பிரீத்திகா..
பிரீத்.பிரீத்..பிரீத்திகா..(ரிதம் மாதிரி இருக்கில்ல..)
இந்த வருடம் வகுப்பு 5-ல்.
(ம்ஹ்ம்..கவலைகளில்லாத தேவதைகள்..!)
ஒரு கையில் தமிழ்ப்புத்தகத்துடன் எனது தாடையைத் திருப்பினாள்.
"என்னம்மா?" கொஞ்சலானேன்.
'இது என்னப்பா?'
குழலினிது..யாழினிது தோற்கிறது.
புத்தகத்தின் முகப்புப் பக்கத்தைக் காட்டிக் கேட்டாள்..
"
தீண்டாமை ஒரு பாவச்செயல்..
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்.
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்..
"
சட்டென்று சூழ்நிலை மாறுகிறது.ஆனாலும்,ரம்மியம் குறையவில்லை.
நினைத்தேன்..! குழந்தைகள்தான் எவ்வளவு அறிவாக, எதையும் உற்று நோக்கும் திறனுடன் இருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு சமூகத்தின் கட்டமைப்புகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய நேரம் இதுதான்!
சாதிகளினால் தான் எத்தனை சண்டைகள்,சச்சரவுகள்,பிரிவுகள்..
பாரதியின் "சாதிகள் இல்லையடி...." -யையெல்லாம் சொல்லி அவளுக்குப் புரிய வைத்தேன்.
முடிக்கற்றைகள் காற்றில் பறக்க தலைசாய்த்துக் காதுமடல்களில் பென்சிலைக் கொடுத்து நெம்பியவாறே,
சொல்வதை முழுதும் கேட்டவள் அவளது தோழியின் குரல்கேட்க சிட்டாய்ப் பறந்தோடினாள்..
***************
ஒரு வாரம் கழித்து காற்றிலாடிய தமிழ்ப்புத்தகத்தின் முகப்பில்
நான் காண நேர்ந்தது புன்னகையுடன் இவ்வாறு..
(சற்றே.. பென்சில் திருத்தங்களுடன்!)
"
காலாண்டு ஒரு பாவச்செயல்..
அரையாண்டு ஒரு பெருங்குற்றம்..
முழு ஆண்டு ஒரு மனிதத் தன்மையற்ற செயல்.."
ம்ஹூம்...தேவதைகளுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை..
பரீட்சைகளைத் தவிர!
*****
பி.கு :
படங்களிலுள்ள குட்டிதேவதை நண்பர் பாலனது வீட்டில் குடிகொண்டிருக்கிறாள்..
ஒரு பக்கக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு பக்கக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவதைகளின் மணித்துளிகள்!
லேபிள்கள்: ஒரு பக்கக்கதை