புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

இராஜராஜ சோழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராஜராஜ சோழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மன்னாதிமன்னன்- இராஜராஜசோழன்! (பகுதி-5)

*
பகுதி 1 இங்கே -> வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும்!
பகுதி 2 இங்கே -> விழித்துக்கொண்ட பேரரசு - திருப்புறம்பியம் போர்!
பகுதி 3 இங்கே -> அரங்கேறியது ஒரு இராஜகொலை -ஆதித்த கரிகாலன் மரணம்!
பகுதி 4 இங்கே ->அரியணை ஏறினான் இராஜராஜசோழன்!


குந்தவை எனும் தேவதை!

இராஜராஜசோழன் ஒன்றும் திடீரெனப் புகுந்து ஆட்சியைப் பிடித்து அதிகாரத்தை விஸ்தீரணம் செய்துவிடவில்லை என்பதை நாம் முந்தைய பக்கங்களில் அறிவோம்.
சந்திரகுப்தருக்கு ஒரு சாணக்கியர் இருந்ததுபோல ராஜராஜனுக்கு சாணக்கியராக இருந்தவர் ஒரு பெண் என்றால் நம்பமுடிகிறதா..?
ஆம்.அவர்தான் குந்தவை நாச்சியார்.

இராஜராஜனின் அக்காவான இவர்தான் அவனுடைய ஒவ்வொரு வெற்றிக்கும் பின் இருந்த பெண்.
தஞ்சையில் கற்றளி(கற்கோவில்!) எழுப்பியதில் இருந்து, தரணியில் எங்கும் வெற்றிக்கொடி நாட்டியதுவரை ஒவ்வொரு செயலிலும் மறைமுகமாக ராஜராஜனுக்குப் பக்கத்துணையாயிருந்தது குந்தவையே. அவன் கொஞ்சம் கொஞ்சமாக தனது அக்காவான குந்தவையால் செதுக்கப்பட்டான் என்றே சொல்லலாம்.



'குந்த' என்றால் 'தும்பைப்பூ போல் தூய்மையான' என்ற அர்த்தம்.குந்தவை எனும் தேவதையால் சோழர்குலம் பெருமையடைய வேண்டும் என்பதாலேயே சுந்தரசோழர் இந்தப்பெயரை வைத்திருந்தார்.(கி.பி-960 களில், கீழைச்சாளுக்கிய நாட்டை ஆண்ட வீமன் என்பவன் தன் மகள் குந்தவையை அரிஞ்சய சோழருக்கு மணமுடித்தான்.அந்த வீமன் குந்தவையின் நினைவாகவே சுந்தரசோழர் தன் மகளுக்குக் குந்தவை என்று பெயரிட்டார்.பின்னாளில் தன் அக்காவின் மீது கொண்ட எல்லையற்ற அன்பால் தன் மகளுக்கும் குந்தவை என்றே ராஜராஜன் பெயரிட்டான் என்பதும் வேறு விசயம்!)

குந்தவையின் நட்சத்திரமான அவிட்டமும்,ராஜராஜனின் நட்சத்திரமான சதயமும் அடுத்தடுத்த நட்சத்திரம் என்பதாலும் அவர்களுக்குள் பாசப்பிணைப்பு நிறைந்திருந்தது என்று ஆரூடம் கூறுபவர்களும் உள்ளனர்.ஆண்டுதோறும் இந்த இரண்டு நாட்களுமே அப்போது சோழமக்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டது.

"உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் திரு தமக்
கையார் வல்லவரையார் வந்தியத்தேவர்
மகாதேவியார் ஆழ்வார். பராந்தகன்
குந்தவையாழ்வார்"

என்று தஞ்சைக் கல்வெட்டுகளும்,

"உடையார் பொன் மாளிகையில் துஞ்சிய தேவர்
திருமகளார் ஸ்ரீ பராந்தகன் குந்தவைப் பிராட்டியார்"


என்று தாராபுரம் கல்வெட்டுகளும் கூறுகின்றன.

இராஜராஜசோழன் கி.பி 947-ல் ஐப்பசி சதயத்தில் பிறந்தவன்.இதனாலேயே சதயத்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே.ஆனாலும் மிகப்பொறுமை காத்து(அரியணை ராஜராஜன் அமர்வதற்காகக் காத்திருந்தது என்பதே தகும்!) கிட்டத்தட்ட தனது 38-ஆவது வயதிலேயே அரசுக்கட்டில் அமர்ந்தான்.

இலங்கையின் வடபகுதிகள்,பாண்டியர்கள்,சாளுக்கியர்கள் எனப் பலரை போர்முனைகளில் ஏற்கனவே சந்தித்து பேரளவில் பெற்றிருந்த அனுபவத்துடன் ராஜராஜன் அரியணை ஏறியபோது சுற்றியிருந்த அரசர்களின் வயிற்றில் புளியைக் கரைத்ததென்னவோ உண்மை.

என்றாலும்,கி.பி 985 -லேயே ஆட்சிக்கு வந்தாலும்,
முதல் நான்கு வருடங்கள் ஆட்சியையும், நாட்டையும் படைகளையும் பலப்படுத்துவதில் தான் ராஜராஜனது கவனம் இருந்தது.எதிரிகளைக் கண்காணித்துப் பின் அவர்களை ராஜராஜன் அணுகிய விதம் போற்றுதலுக்குரியது.

சுந்தரசோழன் இறப்பின்போதே வானவன் மாதேவியாரும் உடன் கட்டை ஏறிவிட்டதால் பெற்றோரின் இடத்தில் இருந்து ராஜராஜனை வழிநடத்தியது குந்தவையே.ராஜராஜனும் அக்காவான குந்தவையின் மீது உயர்ந்த மரியாதை வைத்திருந்தான்.அரசின் முக்கிய விசயங்களில் முடிவெடுக்கும் அளவிற்கு குந்தவையின் செல்வாக்கு இருந்தது.அந்த முடிவுகள் ராஜாங்க விசயங்களில் சரியாகவும் இருந்தது என்பதும் உண்மை.

குந்தவையும் பிறந்தவீட்டுடனே தங்கிவிடவேண்டும் என்ற பேராவல் கொண்டவராகவே இருந்தார்.அதனாலேயே பேரரசுகளுக்கு ராணியாக வேண்டியவர் சற்றே வலிமையிழந்து சிற்றரசாகக் கோலோச்சி சோழருக்குக் கீழ் இருந்த வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவனை மணந்தார்.
(பொன்னியின் செல்வனில் உயர்திரு.கல்கி அவர்களின் இலங்கைக்கு அருண்மொழியை சந்திக்கச் செல்லும் தூதனான அதே வந்தியத்தேவன்.அருண்மொழி கதைநாயகனாக இருந்தபோதும் அவனுக்கும் ஒருபடிமேலே போய் தனது வீரச்செயல்களினால் நம்மைக் கவர்ந்தவன் இந்த வாணர்குல வீரன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!)

வந்தியத்தேவன் ராஜராஜன் ஆட்சியில் வட ஆற்காடு(சேலம்) பகுதிகளின் தண்டநாயகனாக இருந்தான்.
வந்தியத்தேவனை மணந்த குந்தவை சோழ அரண்மனை பழையாறையிலேயே தங்கியிருந்து கோவில்களுக்குக் கொடைகளும்,ராஜராஜனுக்கு விலைமதிப்பற்ற அறிவுரைகளையும் வழங்கினார்.
ராஜராஜனின் வெற்றிக்குப் பின் இருந்த பெண் என்று தைரியமாக நாம் குந்தவை நாச்சியாரை அடையாளம் காட்ட முடியும்.

குந்தவி தேவியும், வானதியும்



குந்தவை சைவசமயப் பற்றுடன் இருந்தாலும் வைணவ, ஜைன மதங்களையும் போற்றிவளர்த்தார்.இதில் அக்காவின் வழியையே ராஜராஜனும் கடைப்பிடித்தான்.
குந்தவை நாச்சியாரின்,
ரவிகுல மாணிக்க ஈஸ்வரம்,குந்தவை ஜீனாலயம்,குந்தவை விண்ணகரம் போன்றவை இதற்கு சாட்சி.
(ஜீனாலயம் - சமணமதப்பள்ளி, விண்ணகரம் - பெருமாளுக்கான கோயில்களையும் குறிக்கும்!)

தஞ்சைப் பெரியகோவிலில் சுந்தரசோழருக்கும்,வானவன்மாதேவியாருக்கும் திருமேனி(சிலை) எடுத்து நிவேதனமும் அளித்தார்.உமாதேவியர்,விடங்கர் திருமேனியை அளித்ததோடு ஏராளமான பொன்னையும்,முத்து,மாணிக்கங்களையும் கோவிலுக்கு அளித்துள்ளார்.
(இதன் மதிப்பு இன்றைய கணக்கில் சில கோடிகள்!)

ஆதித்த சோழன் இறந்தபிறகு அரியணை பற்றி அருண்மொழிக்கு அறிவுரை கூறியதிலும் குந்தவையின் பங்கு மகத்தானது.
குந்தவை நாச்சியார் தவிர,

இன்னொரு பெண்பிராட்டியாரான செம்பியன் மாதேவியார்(கண்டராதித்தரின் மனைவி!) 6 தலைமுறை மன்னர்களைக் கண்டவராக சிறப்புடன் வாழ்ந்துவந்தார்.ராஜாங்க விசயங்களில் அவர் தலையிடவில்லை என்றாலும் அரண்மனையின் முக்கிய விவகாரங்களில் அவர் முன்னின்று தன் மக்களை வழிநடத்தினார் என்று தெரிகிறது.

சோழநாட்டில் பெண் அதிகாரிகள் செயல்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரம் கூட இருக்கின்றது. இராஜராஜனின் மனைவி லோகமகாதேவி கொடுத்த நிவந்தங்களைக் கல்வெட்டில் பதிக்குமாறு "சோமன் அமிர்தவல்லி" என்ற பெண் அதிகாரி உத்தரவிட்டதாகக் கூறும் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து பெண்களும் அந்த நேரத்தில் உயர்ந்த இடத்திலிருந்ததை அறிய முடிகிறது.


உடன் கூட்டத்து அதிகாரம் செய்கின்ற
கோவலூர் உடையான் காடன்
னூற்றெண்மரையும் அதிகாரிச்சி
எருதந் குஞ்சர மல்லியையும்..!


என்ற கல்வெட்டில் இதனை நாம் அறிய முடிகிறது.

வரலாறு எப்போதும் போர்களை மட்டும் கணக்கிடுவதல்ல என்பதால் தான் இதனையும் எழுதினேன்.ரொம்ப அயர்ச்சி தந்தால் பாதையை மாற்றி விடலாம்.
இவ்வளவு பாசமாயிருந்த தமக்கை குந்தவைப் பிராட்டியாரைப் பற்றி எழுதாவிட்டால் ராஜராஜன் என்மீதும் (பாசப்)போர்தொடுக்கக்கூடும். அதனாலேயே இந்தப் பதிவு.



(பொன்னியின் செல்வனில் நந்தினி,பூங்குழலி என்று அழகுப்பதுமைகள் பலரைப் பற்றியும் உயர்திரு.கல்கி அவர்கள் வர்ணித்திருந்தாலும் நம் ஆதர்சத் தேர்வு நீள்மூக்கும்,கொண்டையும்,கயல்விழிகளும் கொண்டு பேரறிவுடன்(பேரழகுடனும்) விளங்கிய குந்தவை நாச்சியார்தான்.
வந்தியத்தேவனின் காதுகளில் இது விழுந்திருக்காது என்றே நம்புவோம்!)

-தொடர்ந்து வருவான்

மன்னாதிமன்னன்- இராஜராஜசோழன்! (பகுதி-4)

*
பகுதி 1 இங்கே -> வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும்!
பகுதி 2 இங்கே -> விழித்துக்கொண்ட பேரரசு - திருப்புறம்பியம் போர்!
பகுதி 3 இங்கே -> அரங்கேறியது ஒரு இராஜகொலை -ஆதித்த கரிகாலன் மரணம்!


அரியணை ஏறினான் இராஜராஜசோழன்!

சுந்தரசோழன் இறந்தபிறகு, உத்தமசோழன்(மதுராந்தகன்) பரகேசரி என்ற பட்டத்துடன் ஆட்சிக்கு வந்தது சரியாக கி.பி 973-ல்.இதிலிருந்து சரியாகப் பனிரெண்டு ஆண்டுகள் அருண்மொழிவர்மன் பட்டத்து சோழ இளவரசனாக வலம்வந்தான்.

உத்தமசோழனைப் பற்றி அத்தனை கொடுங்கோலன் என்றெல்லாம் எந்தக் கல்வெட்டுகளோ,குறிப்புகளோ குறிப்பிடவில்லை.அவனுடைய ஆட்சிக்காலம் சிறப்பாகவே இருந்தது.ஏனெனில் சுந்தரசோழனுடைய ஆட்சிக்காலத்திலேயே எதிரிகளாக அச்சுறுத்தியவர்கள் சற்றே அடக்கி வைக்கப்பட்டிருந்தனர்.தவிரவும் ஈழத்திலும்,பாண்டிய மண்டலத்திலும் உத்தமசோழனது நாணயங்கள் காணக்கிடைக்கின்றன.

தனிப்பட்ட முறையிலும் அரசாங்க காரியங்களிலும் சிறந்தவனாகவே உத்தமசோழன் இருந்துவந்தான்.திருநாரையூர்,திருவீசையூர்,திருவாலங்காடு உள்ளிட்ட பல சிவாலயங்களுக்கு நிவந்தங்களும் அளித்துள்ளான்.சைவசமயத்தின் பால் அதிகமான ஈடுபாடு கொண்டவனாக இருந்தபோதிலும்,வைணவ ஆலயங்களையும் அவன் மறுக்காமல் சில விஷ்ணு ஆலயங்களுக்கும் நிவந்தங்கள் செய்துள்ளான்.

இராஜராஜனும் மதுராந்தகரிடம் மிகப்பாசம் கொண்டிருந்தான்.தனது மகனான (முதலாம்) ராஜேந்திரன் பிறந்தவுடன் தன் சிற்றப்பனின் மேல் கொண்ட அன்பாலும்,குழந்தையின் மதுரமான சிரிப்பைக் கொண்டும் மதுராந்தகன் என்றே பெயரிட்டான்.

உத்தமசோழன் அரிஞ்சய சோழனுக்குப் பிறகே ஆட்சிக்கு வந்திருக்க வேண்டியவன்.உரியவயது இல்லை என காரணம்காட்டி பலகாலம் அரியணை மறுக்கப்பட்டான் என்று கூறுவோரும் உள்ளனர்.

உத்தமசோழனுடைய ஆட்சியில் மக்கள் நன்றாகவே இருந்தார்கள் என்றாலும், சோழநாட்டின் வடக்குப்பகுதிகளிலும்,பாண்டிய நாட்டிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகளை உத்தமசோழனால் அடக்க இயலவில்லை என்றே தெரிகிறது.மலைநாடும்,சில சிற்றரசுகளும்கூட போர்க்கொடியைத் தூக்கியிருந்தன.

சோழநாட்டுக்கு வடக்கில் இந்நேரம் மிகப்பெரிய திருப்பம் ஒன்று நிகழ்ந்திருந்தது.

காலம்காலமாகவே மிகப்பெரிய நிலபரப்பைத் தன்னகத்தே கொண்டு வலிமையுடன் விளங்கிய பேரரசு மான்யகேதா-வைத் தலைமையாகக் கொண்ட ராட்டிரகூடப் பேரரசு.கி.பி-730 - களில் (சரியாகச் சொல்வதானால் கி.பி 735-ல்) சாளுக்கியர்களை ஒழித்துவிட்டு அந்த பரந்த நிலப்பரப்பைக் கைப்பற்றிய ராட்டிரகூடத்தின் முதல்மன்னன் தந்திதுர்கனே, பிற்காலச் சோழர்களுக்குப் பெரும் தலைவலியைத் தொடங்கி வைத்தான்.பல்லவர்கள் இருந்த வரை அவர்களை ஒருவழி செய்தவர்கள்,அடுத்து சோழர்களைப் பதம்பார்க்கத் தொடங்கியிருந்தனர்.

இவர்களிடமிருந்து நாட்டின் வடபகுதியைக் காப்பதற்கே பெரும்பாலான படைகளை சோழர்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது.ராட்டிரகூடர்களிடமிருந்து தங்களது பகுதிகளைக் காப்பதே பெரிய வேலையாக இருந்ததால் அவர்களிடமிருந்து எந்தப்பகுதிகளையும் கைப்பற்றுவதைப் பற்றி நினைத்துக்கூடப்பார்க்க முடியாத நிலை.

அதிலும் கண்டராதித்தர் ஆட்சியின்போது கிட்டத்தட்ட இன்றைய தஞ்சை வரை வந்து ராட்டிரகூடர்கள் ஆக்கிரமித்துக்கொண்டதும்,பின் அரும்பாடுபட்டு அவர்களை அப்புறப்படுத்தியதும் நடந்தது.சாளுக்கியர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தங்களது கொடியைப் பறக்கவிட்ட இந்த ராட்டிரகூடர்களின் கடைசிமன்னன் இந்திரா IV.

(பார்க்க படம் - ராட்டிரகூடப் பேரரசு)



வாழ்க்கை மட்டுமல்ல ..வரலாறும் வட்டம் என்பதுபோல்,
கி.பி - 973-ல் தைலப்பா-II என்ற மேலைச்சாளுக்கிய மன்னன் இந்திரா-IV -ஐ வெற்றிகொண்டு ராட்டிரகூடத்தில் 240 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சாளுக்கியக் கொடி ஏற்றினான்.இத்துடன் ராட்டிரகூட வம்சம் சிதறிப்போய் விட்டது.
(இவ்வளவு விவரமாக இவர்களைப் பற்றிச் சொல்வதில் விசயம் இருக்கிறது.ஏனெனில்
இந்த தைலப்பா-II கி.பி 997-ல் இறந்துவிட்டபோது ஆட்சிக்கு வந்தவனே சத்யாசிரயன்.
தந்தையைவிட அடாவடித்தனத்தோடு சோழர்களுக்குத் தொல்லை தந்தவன்)

இந்த சாளுக்கிய நாடும் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது.
கல்யாணியைத் தலைநகராய்க்கொண்ட மேலைச்சாளுக்கியநாடு.வடபெண்ணை முதல் கிருஷ்ணா வரை கொண்ட வேங்கி தலைநகரான கீழைசாளுக்கியநாடு.

சரி! ராட்டிரகூடர்களை புறந்தள்ளி நம் ராஜராஜனிடம் வருவோம்!

(கி.பி 973-985 )உத்தமசோழன் 12 ஆண்டுகள் ஆட்சிசெய்து கி.பி 985-ல் மரணமடைந்தான்.மதுராந்தக கண்டராதித்தன் என்ற பெயரில் உத்தமசோழனுக்கு ஒரு மகன் இருந்தபோதிலும் கொடுத்த வாக்கின்படி அருண்மொழியே ஆட்சிக்கு வர ,இளைய மதுராந்தகன் கோவில் நிலங்களையும்,நிர்வாகங்களையும் கண்காணிக்கும் முக்கியப்பொறுப்பில் அமர்த்தப்பட்டான்.

அடுத்து அருண்மொழி அரியணை ஏறும்முன் , சட்டென
சோழநாட்டைச் சுற்றி அப்போது இருந்த நாடுகளை ஒரு நோட்டம் விடுவோம்!
(பார்க்க படம்:2)



சோழநாட்டுக்குத் தெற்கே பாண்டியநாடு,அதற்கும் கீழே ஈழநாடு,மேற்குக்கரையில் மலைநாடு(சேரம்),அதை ஒட்டி கங்கபாடி,காவிரி தொடங்கும் குடகுநாடு,மைசூரை உள்ளடக்கிய தடிகைபாடி,மைசூருக்குக் கிழக்கே நுளம்பபல்லவர்கள் ஆண்ட நுளம்பபாடி(தும்கூர்,பெங்களூரு முதலிய பகுதிகள்!),வடக்கே சாளுக்கிய நாடு,கலிங்கநாடு என்ற அளவில் நாடுகளும்,அவற்றால் பகைகளும் சோழநாட்டைச் சூழ்ந்திருந்தன.

இந்நிலையில்தான்,
புறாவுக்காக சதைகொடுத்த சிபிச்சக்கரவர்த்தி,நீதிக்காய் மகனைத் தேர்க்காலில் கிடத்திய மனுநீதிச்சோழன்,இமயத்தில் கொடி பொறித்த கரிகாற்பெருவளத்தான் என அனைத்துப்புகழ்பெற்ற சோழச்சக்கரவர்த்திகளின் மொத்த உருவமாய்,
கி.பி 985-ஆம் ஆண்டு ஆடிமாதம் புனர்பூச நட்சத்திரம்(ஜூலை 18) அருண்மொழி வர்மன் ராஜகேசரி என்ற பட்டத்துடன் உலகப்புகழ் பெறப்போகும் இராஜராஜசோழனாக அரியணை ஏறினான்.

இனி செல்லுமிடம் எங்கும்... ஜெயக்கொடிதான்!


-தொடர்ந்து வருவான்

மன்னாதிமன்னன்- இராஜராஜசோழன்! (பகுதி-3)

*
பகுதி 1 இங்கே -> வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும்!
பகுதி 2 இங்கே -> விழித்துக்கொண்ட பேரரசு - திருப்புறம்பியம் போர்!


அரங்கேறியது ஒரு இராஜகொலை -ஆதித்த கரிகாலன் மரணம்!

இராஜகுடும்பங்களில் இருப்பவர்கள் பெரிய,பெரிய அரசர்களானாலும் சரிதான்.எந்த நேரமும் உயிருக்கு உத்திரவாதமில்லை என்பது மிகஉண்மை.திடீரென யாராவது புகுந்து அல்லது யாராவதுடைய தூண்டுதலின் பேரில் எளிதாக ராஜகுடும்ப வாரிசுகளைப் போட்டுத் தள்ளிவிடுவதும் உண்டு.இதுதான் சோழர்கள் விசயத்திலும் நடந்தது.

சுந்தர சோழ சக்கரவர்த்திக்குப் பிறகு ஆட்சிக்குவர முழுமையான அதிகாரத்துடன் திகழ்ந்தது அருண்மொழியைக் (ராஜராஜனைக்) காட்டிலும் அவனது அண்ணனான ஆதித்த கரிகாலனே.

வீரத்தில் சிறந்து தில்லைச் சிற்றம்பல முகட்டை பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்தர் பெயரையும், இமயத்தில் புலிக்கொடி பொறித்து வச்சிர நாட்டு மன்னனின் முத்துப்பந்தரையும்,அவந்தி மன்னனின் வாயில் தோரணமும்,மகத அரசனின் பட்டி மண்டபமும் கொண்டு வெற்றி முரசு கொட்டிய கரிகாலன் பெயரையும் சேர்த்து ஒருசேரப் பெயர் விளங்கிய ஆதித்த கரிகாலன் வீரத்தில் சற்றும் சளைத்தவனல்ல.

வட தென் ஆற்காடு மாவட்டங்களில் கிடைத்த கல்வெட்டுகளிலும்,பரந்தூர்க் கல்வெட்டுகளிலும் வீரபாண்டியனின் தலைகொண்டதாகக் குறிப்பிடப்படும் இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலன் என்பவன் இவனே.
அண்ணனும்,தம்பியுமாக அரசாண்டார்கள் என்று கல்வெட்டுகளில் பொறிக்க முடியாத அளவில் ஆதித்தனின் மரணம் நிகழ்ந்துவிட்டது.கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகள் (கி.பி - 956-969) வரை பட்டத்து இளவரசனாகவே இருந்துவிட்டு நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டான் இந்த வீர இளவரசன்.
அற்ப ஆயுளில் அநியாயமாகக் கொல்லப்பட்டதில் நிறைய மர்மங்கள் அடைந்துகிடந்தது.(உயர்திரு.கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் இதனை மர்மமாகவே வெளியிட்டிருப்பார்!)
கிடைத்த தகவல்களை யூகங்களின் அடிப்படையிலேயே தான் நாம் கொள்ள வேண்டியிருக்கிறது.ஆதித்த கரிகாலனைப் பற்றிய கவ்லெட்டுகள் குறைவே என்பதால் தகவல்களும் குறைவே.ஆனாலும், கிடைத்த தகவலின்படி,

சுந்தரசோழனுக்குப் பிறகு அரியணை ஏறிய உத்தமசோழன்(மதுராந்தகன்) சுந்தரசோழருக்குத் தம்பிமுறை.கண்டராதித்தரின் மகனான இவன் சுந்தரசோழருக்குப் பிறகு தானே ஆட்சிக்கு வர முழு உரிமை உடையவன் என்று எண்ணினான். தந்தையைப் போல பெரிய சிவபக்தராக வருவான் என்று நினைத்து மகிழ்ந்திருந்த மதுராந்தகரின் தாய் செம்பியன் மாதேவியாருக்கே இதில் விருப்பமில்லை.

பிற்காலச் சோழர்குல வரைபடம்

ஆனால், சுந்தரசோழர், தான் ஆட்சியில் இருக்கும்போதே தனது மகன் ஆதித்தகரிகாலனுக்கு பட்டத்து இளவரசனாகப் பட்டம் கட்டியது "எனக்கு அடுத்த வாரிசு ஆதித்த காரிகாலன் தான்!" என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது.இதனால் மனம்கொதித்த மதுராந்தகருக்கு அரண்மைனைப் பெரியவர்கள் சிலரும் சேர்ந்து தூபம் போட்டுவைக்க ஆதித்த கரிகாலனைக் கொல்வதற்கான சதியொன்று அங்கே அரங்கேறியது.

இதற்குப் பெரிய இடங்களிலும் , எதிரிகளிடமும் வலுவான ஆதரவு இருந்ததால், ஆதித்த கரிகாலன் தந்திரமாகக் கொலை செய்யப்பட்டான் என்று தெரிகிறது.ஏனெனில் உத்தமசோழன் ஆட்சிக்கு வந்த போது வம்சப் பகைவர்களான பாண்டியர்களுடன் நெருங்கிக் கைகோத்துக்கொண்டதும் நடந்தது.

கொலை நடந்த பிறகு, அரண்மனை விவகாரங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டன.தன்னையே வெற்றிகொள்ளப்போகும் வாரிசு என எண்ணி மகிழ்ந்திருந்த ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதில் மனமுடைந்தார் சுந்தரசோழர்.அருண்மொழிவர்மனோ இலங்கையின் வடபகுதிப் போர்களில் முக்கியப் பொறுப்பேற்றிருந்த காலமது.

ஆதித்த கரிகாலன் இறந்ததும்(கி.பி.969) மனம்வெறுத்து உடலும் பலமிழந்த நிலையில் மேலும் நான்குஆண்டுகள் ஆட்சிசெய்த சுந்தரசோழ சக்கரவர்த்தி கி.பி 973-ல் காஞ்சி பொன் மாளிகையில் இறந்தார்.அவருடன் மனைவி வானவன் மாதேவியாரும் உடன்கட்டை ஏறினார்.சுந்தரசோழர் இறந்தபிறகு அருண்மொழி முழுத்தகுதியுடன் இருந்தபோதும் மதுராந்தகராகிய உத்தமசோழரே அரியணை ஏறினார்.

உத்தம சோழனின் நாணயம்


திருவாலங்காட்டு பட்டயங்கள் சொல்வது போல்,
ஆதித்த கரிகாலன் விண்ணுலகு காணும் ஆசையில் இறந்ததால் மக்களும் கூட அருண்மொழிவர்மனே ஆட்சிக்கு வரவேண்டுமென்று விரும்பினார்கள்.ஆனால், சத்திரிய தர்மமறிந்த அருண்மொழிவர்மன் தனது சிற்றப்பனின் அரியணை ஆசை அறிந்து, தான் அரியணையை ஏற்க மறுத்துவிட்டான் என்றும் கூறுகின்றன.
மேலும் அருண்மொழியின் உடலின் சில அடையாளங்கள் கண்டு திருமாலே பூவலகை ஆளவந்ததாக நினைத்து அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி, மண்ணுலகை தானே ஆண்டான் மதுராந்தகன் என்றும் கூறுகின்றன.

உண்மையில்,
ஆதித்த கரிகாலன் இறந்தபோதே பட்டத்து இளவரசன் இறந்ததால் நாடே குழப்பநிலையிலிருந்தது.இந்த நிலையில் தான் ஆட்சிக்கு வருவது மேலும் குழப்பங்களையும்,எதிரிகளுக்கு வாய்ப்புகளையும் தரும் என்பதால் அரியணையை அருண்மொழி மறுத்துவிட்டான். அதே நேரம்,
"தனக்குப் பிறகு அருண்மொழிவர்மனும்,அவன் புதல்வர்களுமே ஆட்சிக்கு வரத் தகுதியானவர்கள்" என்று உத்திரவாதத்தைத் தன்னிடம் இருந்து குறுநிலமன்னர்களும்,வேளக்காரப்படையும் வாங்கிய பிறகே அரியணை ஏறச்சம்மதித்தார் மதுராந்தகர்.

(வேளக்காரப்படை என்பது சோழ அரசனைக்காக்க ஆபத்துக்காலங்களில் உயிரை விடவும் சபதமேற்று பணிபுரியும் படை.பலமுறை அரசன் உயிர்காக்க உயிரையும் பணயம் வைத்திருக்கின்றனர்.ராஜராஜன் காலத்தில் இருந்த வேளக்காரப்படைகளின் எண்ணிக்கை 14. இவர்களுக்கு மானியம் அரசாங்கத்திடமிருந்து வழங்கப்பட்டது.பாண்டியர்களின் ஆபத்துதவிப்படை போல சோழர்களுக்கு வேளக்காரப்படை இருந்தது.)

இந்த வேளக்காரப்படைகளின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டுதான் ஆதித்த கரிகாலன் கொலைசெய்யப்பட்டது நடந்தது.
உடையார்குடிக் கல்வெட்டு ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைப் பற்றி தெளிவாக விவரிக்கின்றது.
"ஸ்வஸ்திஸ்ரீ கோ ராஜராஜகேசரிவர்மர்க்கு.....பாண்டியன் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்,தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும்,இவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடன்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும்......"எனப் பலரைக் கைகாட்டுகின்றது.

விழுப்புரத்துக்கு அருகில் எசாலம் எனும் ஊரில் எடுக்கப்பட்ட இராஜேந்திரசோழனின் செப்பேட்டிலும் சில தகவல்கள் கூறப்படுகிறது. சோழருக்குப் படியாமல் தன்னாட்சி புரிய விரும்பிய வீரபாண்டியன் தலைகொண்டு ஆதித்த கரிகாலன் அதனை மூங்கில்கம்பில் கோத்து தஞ்சை அரண்மனைவாயிலில் வைத்தான். இது பாண்டியர்களைக் கொதிப்படையச் செய்து ஆதித்தனின் உயிரை எடுப்பதற்கு மிகத் தூண்டியிருக்கலாம்.இதற்கு சோழநாட்டில் பணிபுரிந்த பாண்டிய நாட்டானாகிய "பஞ்சவன் பிரம்மாதிராஜனை” வைத்து எளிதில் ஆதித்தனுடைய கதையை முடித்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதில் உத்தமசோழருக்கும் மறைமுகமாகப் பங்கிருந்ததாகத் தெரிவதால்(நேரிடையாகக் குறிப்பிட போதுமான ஆதாரமில்லை!)அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது உண்மை.(ஒருவேளை உத்தமசோழர் ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டிருப்பார்கள்.ஆனால்,தீர்ப்பு ராஜராஜனின் 3-ஆம் ஆட்சிக்காலத்திலேயே வழங்கப்பட்டது என்று கூறுவோரும் உண்டு)
எது எப்படியோ..
மதுராந்தகராகிய உத்தமசோழன் எதிரிகளை மன்னித்தாலும் ராஜராஜசோழன் மன்னிப்பதாக இல்லை.தகுந்த சந்தர்ப்பம் வாய்த்த போது அவர்களைப் போட்டுப் புரட்டி எடுத்தான் என்பதும் உண்மை.

-தொடர்ந்து வருவான்

மன்னாதிமன்னன்- இராஜராஜசோழன்! (பகுதி-2)

பகுதி 1 இங்கே -> வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும்!


விழித்துக்கொண்ட பேரரசு - திருப்புறம்பியம் போர்!

சோழனும் சரி! பாண்டியனும் சரி! சேரனும் சரி! தங்கள் கைகள் ஓங்கும்போதெல்லாம் தங்களுக்குள் அடித்துக்கொண்டார்களே தவிர,தமிழகத்தைத் தாண்டிச் சென்று பிறபகுதிகளைக் கைப்பற்றுவதை கற்பனையிலும் நினைக்கவில்லை.தமிழகத்தை முழுவதும் ஆளவேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாக இருந்தது.மூவேந்தர்களும் இணைந்து ஒரு பேரரசை ஏற்படுத்தியிருந்தால் முழு இந்தியாவையும் கைக்கொள்ளும் மூளையும்,பலமும் நம்மவர்களிடம் நிறையவே இருந்தது.

ஆனால், வலியச்சென்று தாக்குவதை அவர்கள் விரும்பவில்லை.தங்கள்,தங்கள் பகுதிகளைக் காத்துக்கொள்ளக் கட்டமைத்தவர்கள் அடுத்த நாட்டினைக் கைப்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.அவர்களின் அதிகபட்ச இலக்கு முழுத்தமிழகமே!

சேரன், சோழனுடனோ அல்லது சேரன்,பாண்டியனுடனோ சேர்ந்து கொண்டு மற்றவரை எதிர்ப்பதே வாடிக்கையாக இருந்தது.இதுபோன்ற நிலையில்தான் ,ஆட்சிப்பொறுப்பேற்ற ராஜராஜன் கிட்டத்தட்ட இன்றைய பீகார் வரை படையெடுத்து வெற்றி கண்டான்.அதற்கு முன்,

ஆண்டு கி.பி 848. ஆட்சிக்கட்டில் ஏறினான் விஜயாலய சோழன்(பரகேசரி என்ற பட்டத்துடன்!)இதற்குப் பின் வந்தவர்கள் தங்களது பெயர்களுடன் பரகேசரி,இராஜகேசரி போன்ற பட்டங்களை சேர்த்துக் கொண்டனர்.

அந்நேரம் சிற்றரசாக உறங்கிக்கிடந்தது சோழ அரசு. தஞ்சை மற்றும் அருகிலிருந்த சில வளமான பகுதிகளை பாண்டியர்களுக்குக் கட்டுப்பட்ட முத்தரையர்கள் ஆண்டு வந்தனர்.இந்த முத்தரையர்களை அகற்றிவிட்டு அந்தப் பகுதிகளைத் திறமையாகக் கைப்பற்றினான் விஜயாலயசோழன்(கி.பி 848-871)
(பார்க்க படம்:1)



பாண்டியர்களும்,பல்லவர்களும் முனைப்போடு தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலம்.இருவருக்கும் இடையிலான தொடர்ச்சியான போர்களினால் இரு நாடுகளிலும் குழப்பம் மிகுந்திருந்தது.

நிருபதங்க பல்லவன் ஆட்சிக்குவர பாண்டியனும், அபராஜித பல்லவன் ஆட்சிக்கு வர சோழனும் உதவிபுரிய வந்தார்கள்.கங்க நாட்டு மன்னனாகிய பிரதிவீபதியும் அபராஜித பல்லவனுக்குத் துணையாக வந்தான்.

இருபடைகளுக்கும் இடையே திருப்புறம்பியம் எனும் இடத்தில் போர் மூண்டது.பலநாட்கள் தொடர்ந்த போரில் (பிற்பாடு வரப்போகும் சோழசாம்ராஜ்யத்துக்கான மிக முக்கிய திருப்புறம்பியம் போர் இதுதான்!) சோழர்கள் சார்ந்த அபராஜித பல்லவன் படை வெற்றிபெற்றது.
பாண்டியர்களும், நிருபதங்க பல்லவனும் தமிழகத்தின் வட பகுதிகளிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.
இந்தப் போரில் ஒரு மெய்சிலிர்க்கும் வீரச்செயலும் சொல்லப்படுவதுண்டு.

அபராஜித பல்லவனுக்குத் துணைபோன சோழர்படை அடிமேல் அடிவாங்கி தோற்கும் நிலை.அங்குப் படைகளின் போரைக் காண வந்த விஜயாலயசோழன் இந்த நிலையைக் கண்டான்.இருகைகளிலும் வாளேந்தி படைவீரர்களின் தோளில் அமர்ந்து சென்று(இருகால்களும் செயல் இழந்திருந்த நிலையில்!) நாலாபக்கமும் வாளைச் சுழற்ற சிதறி வீழ்ந்தன எதிரிகளின் தலைகள்.இதைக் கண்டு வீராவேசமடைந்த சோழர்படை எதிரிப்படைகளை முன்னேறித் துவம்சம் செய்தது என்பதும் செவிவழிச் செய்திகள்.

இப்போருக்குப் பின் அபராஜித பல்லவனுக்கு பல்லவநாட்டின் அரசனாக முடிசூட்டப்பட்டது.போரில் அதிகபட்ச வீரம் காட்டிய கங்க நாட்டு மன்னன் பிரதிவீபதி வீரமரணமடைந்தான்.ஆனால் இந்தப் போர்களினாலும்,பிளவுகளினாலும் பல்லவர்படை வலுவற்று இருந்தது உண்மை.

அடுத்த சில ஆண்டுகளிலேயே ராஜதந்திரமாக கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அபராஜித பல்லவனைக் கொன்று பல்லவநாட்டையும் சோழதேசத்துடன் இணைத்தான் விஜயாலயசோழனின் புதல்வனாக ஆட்சிக்குவந்த முதலாம் ஆதித்தன்(கி.பி-871-907)

இப்போது தொடங்கிய இந்தப் பிற்கால சோழராட்சியில் விஜயாலய சோழனைத் தொடர்ந்து முதலாம் ஆதித்த கரிகாலனும் அவனைத் தொடர்ந்து பராந்தக சோழனும்(கி.பி 907-950) ஆட்சிக்கட்டில் ஏறினார்கள்.

பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தில் ஆட்சியை மேலும் விரிவாக்கும் எண்ணத்துடன் பாண்டியமன்னன் ராஜசிம்மனுடன் போரிட, பாண்டியனுக்கு ஆதரவாக இலங்கையின் ஐந்தாம் காசியபன் படைகொண்டு வர, இருபடைகளையும் ஏககாலத்தில் வெற்றிகண்டான் பராந்தக சோழன்.ஆனாலும், தனது மணிமுடியை இலங்கைமன்னன் காசியபன் வசம் பாண்டியமன்னன் ஒப்படைத்ததால் அதனைக் கவர்வதற்காக இப்போதிலிருந்து தொடங்கியதுதான் இலங்கையுடனான சோழர்களின் போர்.

பராந்தக சோழனுக்குப் பிறகு ஆட்சிக்குவந்த கண்டராதித்தர்(கி.பி 949-958) ஆட்சியின் மீது பிடிப்பு அற்றுப்போய், தனது தம்பி அரிஞ்சய சோழனுக்கு அடுத்து பட்டத்தை சூட்டினான்.கண்டராதித்த சோழன் போர்களை விரும்பாமல், இறைவழிபாட்டில் மனதைச் செலுத்த சோழர்பகுதிகள் ஒவ்வொன்றாக எதிரிகள் வசமாகத் தொடங்கியது.
அரிஞ்சய சோழன்(கி.பி 956-957) எதிரிகள் வசமிருந்த பகுதிகளை மீட்க முயன்று அதில் தோல்வியே கண்டான்.

அடுத்து இவனுடைய மகன் சுந்தரசோழன் (கி.பி 956-973) ராஜகேசரி என்ற பட்டத்துடன் ஆட்சிக்கு வந்தான்.கண்டராதித்தரின் புதல்வன் மதுராந்தகன் சிறுவயது என்பதால், தானே ஆட்சிப்பொறுப்பேற்றான் இந்த அரிஞ்சய மைந்தன்.சுந்தரசோழனின் ஆட்சியில் விரிவுபெறத் தொடங்கியது சோழநாடு.

சுந்தரசோழனின் கீழ் சோழநாடு(படம்:2)


இவனுக்கு மூன்று குழந்தைகள்.ஆதித்த கரிகாலன்,குந்தவை,அருண்மொழிவர்மன்.
சுந்தரசோழனின் ஆட்சியில் சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலன் தலைமையிலான சோழர்படை வீரத்துடன் போரிட்டு வீரபாண்டியனுடைய தலை கொய்யப்பட்டது.அடுத்து வடக்கே காஞ்சிப் பகுதிகளில் தொடர்ந்து தொல்லை தந்து கொண்டிருந்த ராட்டிரகூடர்களை அடக்கக் கிளம்பினான் (இரண்டாம்)ஆதித்த கரிகாலன்.

தீராப்பகையுடன் இருந்த இலங்கையை வெற்றிகொள்வது சுந்தரசோழனின் வெகுவான ஆவலாயிருந்தது.ஆதித்தன் வடபகுதிகளில் போர்களில் இருந்ததால், இலங்கைகுப் படையெடுத்துச் செல்ல தந்தையால் அனுப்பப்பட்டவன் தான் 19 வயதே நிரம்பிய அருண்மொழிவர்மன் எனும் ராஜராஜசோழன்!

-தொடர்ந்து வருவான்.

மன்னாதி மன்னன் - இராஜராஜசோழன்!

*


வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும்!

மிழகத்தை எந்தக் காலத்திலும் ஆண்ட, எந்த மன்னர்களிலும் தனியாக வைத்துப் போற்றப்பட வேண்டியவன் மாமன்னன் ராஜராஜ சோழன். வீழ்ந்து கிடந்த சோழப்பேரரசை மீட்டுப் புலிக்கொடியைப் பறக்கவிட்ட மிகப்பெரிய வேந்தன்.
(மரியாதைக்காக "ர்" போட்டால் ராஜராஜர் என தள்ளிப் போவதால் "ன்" போட்டே அழைப்போம்.சோழவேந்தனும், தஞ்சை ஆவுடையாரும் பொறுத்தருள்வராக!)

அவனுடைய சரித்திரத்தை உற்றுப் பார்ப்பதற்கு முன் சற்றே அந்தக் காலத்து தமிழகத்து நிலை எப்படியிருந்தது என்பதைப் புரட்டிப்பார்த்து விடுவது நலம்.

தமிழகத்தைத் தொன்றுதொட்டு அல்லது பழைய நாளிலிருந்தே மூன்று வம்சங்கள் ஆண்டு வந்தன. ஆம்..நீங்கள் சொல்வது தான். அவை பாண்டிய,சோழ,சேர வம்சங்கள்.

இதில் தமிழகத்தின் பூர்வீகக்குடி என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது பாண்டிய வம்சத்தினரே.அதற்காக சோழரும்,சேரரும் பூர்வீகம் என்ன பாரசீகமா? இல்லை.
அவர்களும் பூர்வீகத் தமிழினங்களே.ஆனால்,

பாண்டியனிலிருந்து பிற்பாடு பிரிந்தவர்களான அவர்களே சேரர்,சோழர்,பாண்டியராகத் தமிழகத்தை முறையே மலைநாடு,வளநாடு,பழநாடு என ஆண்டு வந்தனர். "கிளைநாடு” பல்லவர்களைக் குறிக்கும்.அவர்கள் அடுத்து வருவார்கள்.
அசோகர், சந்திரகுப்தர் போன்ற மாபெரும் ஆட்சியாளர்கள் இந்தியா முழுமையும் ஆண்டபோதும்கூட, கி.மு-க்களில் இருந்தே தமிழகம் யாருடைய ஆளுகைக்கும் உட்படாமல் தனித்தே இருந்துவந்தது.
(பார்க்க படம் 1: அசோகரின் கீழ் இந்தியா)

சரி! கரிகால் வளவன்(கரிகாலன் இரண்டு பொருள் : சற்றே தீப்பிடித்து கருமை படிந்த கால்கள். யானைகளுக்கு யமன் (கரி - காலன்!)) இமயத்தில் புலிக்கொடி பறக்கவிட்ட பின்னர் பலகாலம் கழித்து வடக்கிலிருந்து உள்புகுந்த கன்னட தேசம் சார்ந்த கன்னடர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தினர்.கிட்டத்தட்ட கி.பி 300 முதல் 600 வரை தமிழகத்தை ஆண்ட களப்பிரர்களும் இவர்களே!
இவர்களில் குறிப்பிடத் தகுந்தவன் அல்லது குறிப்பிடக் கிடைத்தவன் அச்சுத விக்கந்தன் அல்லது அச்சுதன் என்பவன்.யாப்பெருங்கலக்காரிகையில் குறிப்பிட்டுப் பாராட்டப்பெறுபவன் இவனே.
இவர்கள் போதுமான அளவு கல்வெட்டுகளை விட்டுச் செல்லவில்லை அல்லது பின்னர் வந்த மன்னர்கள் அவற்றை விட்டுவைக்கவில்லை(அழித்துவிட்டிருக்கலாம்!)

இவர்களின் ஆட்சிக்காலம் பற்றிய தகவல்கள் எதுவும் பெற முடியாமையால் இது வரலாற்று ஆய்வாளர்களால் "இருண்ட காலம்" என அழைக்கப்படுகிறது என்றாலும் மூவேந்தர்களையும் அடிமைப்படுத்தியவன் சாதாரணனாக இருந்திருக்க முடியாது.

மூவேந்தர்களும் சிற்றரசர் அதிகாரத்திலேயே அந்நாட்களில் அதிகாரம் செலுத்த முடிந்தது. இருப்பினும் 6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டியர்களும்,பல்லவர்களும்(புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கோவில் இவர்கள் கைங்கரியம்)சேர்ந்து களப்பிரர்களைத் தமிழகத்திலிருந்து அகற்றினர்.
இந்தக் களப்பிரர்களே பாளி மொழியும்,சமணமும் தமிழகத்தில் புகக் காரணமானவர்கள்.
பின்னர் வந்த பல்லவர்களும் தங்கள் பங்குக்கு வடமொழியை வழிமொழிந்தனர்.இவர்கள் ஆட்சிக்குப் பின்னரே தமிழில் "ஜ" போன்ற எழுத்துகளின் உச்சரிப்புகளை நாம் காணலாம்..(மன்னர்களின் பெயர்களில் கூட!) என்றாலும் பல்லவர்களின் கட்டடக்கலையே பின்னாளில் பெரும் உயரத்தில் கோபுரங்கள் உயர எழுவதற்கு முத்தாய்ப்பாகவும் அமைந்தது.



பாண்டியர்களுக்கும், காஞ்சியைத் தலைமையாகக் கொண்டிருந்த பல்லவர்களுக்கும் தமிழகத்தின் தலைமையைக் கைப்பற்ற போட்டி நடக்கையில்(பார்க்க படம்:2) வீழ்ந்து கிடந்த சோழரினம் மெல்லத் தலைதூக்க முடிந்தது.வீழ்வதும் மெல்ல எழுவதுமாக இருந்த அந்தப் பிற்காலச் சோழர்களின் ஆட்சிவரிசையில் தான் ஒரு புதிய நட்சத்திரம் உதயமானது.

அந்நட்சத்திர மன்னனின் ஆட்சியில் நிலப்பரப்பு,அதிகாரம்,கலை,இலக்கியம்,வாணிபம்,
சமயம் என அனைத்து வகையிலும் உச்சத்தைத் தொட்டு உலக அரங்கில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. அவனை வீழ்த்த யாராலும் முடியவில்லை.சென்ற இடமெங்கும் வெற்றிக்கொடி நாட்டினான்.

ஆம்! அவன் தான் இராஜராஜசோழன்!


- தொடர்ந்து வருவான்!

மன்னாதிமன்னன் - தொடர்பதிவின் தொடக்கம்!

*


*
அனைவருக்கும் வணக்கம்!
_____/\_____

ன்னுடைய ஆதர்ச நாயகனும், தமிழகத்துத் தலைசிறந்த அரசனுமாகிய மாமன்னன் ராஜராஜ சோழனின்(என்ன பேருப்பா..உன் பேரு!) வரலாற்றை வானம் தொடத்துடிக்கும் (முடியாதெனத் தெரிந்தும்!)சிட்டுக்குருவியின் ஆவலுடன் எழுதத் தொடங்குகிறேன். முடிந்த வரையில் ஏமாற்றாமல் எழுதவும் முயல்வேன்.
கை வசம் இப்பொது ராஜராஜனைப் பற்றி இருக்கும் தகவல்கள் குறைவே என்றாலும், இதைவிட அவனைப் பற்றி எழுதுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்துவிட முடியாது.
படித்த காலங்களில் பிடித்த பாடம் வரலாறு.அதனைப் பரீட்சைக்கு என்று படித்ததேயில்லை..ஒரு கதைப்புத்தகம் போலவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்ததால் அதற்கு அவசியம் நேரவில்லை.

நண்பர் வெறும்பய அழைத்த போது விக்கித்தாலும் என்றோ ஒருநாள் எழுதவேண்டும் என நினைத்ததுதானே..!ஒருவேளை அந்த நாள் வராமலே போய்விட்டால் என்ற நினைப்பால்..வந்த மலைப்பால்.. இதோ இப்போதே தொடங்கி விடுகிறேன்.இதன் நீள அகலங்கள் தாங்கள் வழங்கும் ஆதரவைப் பொறுத்தது.
குறைவான தகவல்களுடன் இருந்தாலும் சுயம் தொலைந்துவிடாமல் கற்பனைகளை ஏற்றிவிடவேண்டியதுதான்.
ஏதேனும் பிழைகளிருப்பின் பொறுத்தருள்வதுடன் சுட்டிக்காட்ட நானும் தெரிந்துகொள்வேன்.
கற்றது கடு-களவு :)

அடுத்த பதிவிலிருந்து மன்னாதி மன்னனாக வலம்வருவான் -
****மாமன்னன் ராஜராஜசோழன்!****

நன்றிகள்!

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2011 (4)
    • ▼  மார்ச் (1)

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!