புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

தேவதைகளின் மணித்துளிகள்!"ப்பா.."

அழைத்தபடி வந்து என்னை முதுகோடு கட்டிக்கொண்ட மகள் பிரீத்திகா..
பிரீத்.பிரீத்..பிரீத்திகா..(ரிதம் மாதிரி இருக்கில்ல..)
இந்த வருடம் வகுப்பு 5-ல்.
(ம்ஹ்ம்..கவலைகளில்லாத தேவதைகள்..!)
ஒரு கையில் தமிழ்ப்புத்தகத்துடன் எனது தாடையைத் திருப்பினாள்.
"என்னம்மா?" கொஞ்சலானேன்.

'இது என்னப்பா?'
குழலினிது..யாழினிது தோற்கிறது.
புத்தகத்தின் முகப்புப் பக்கத்தைக் காட்டிக் கேட்டாள்..
"
தீண்டாமை ஒரு பாவச்செயல்..
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்.
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்..

"
சட்டென்று சூழ்நிலை மாறுகிறது.ஆனாலும்,ரம்மியம் குறையவில்லை.
நினைத்தேன்..! குழந்தைகள்தான் எவ்வளவு அறிவாக, எதையும் உற்று நோக்கும் திறனுடன் இருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு சமூகத்தின் கட்டமைப்புகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய நேரம் இதுதான்!
சாதிகளினால் தான் எத்தனை சண்டைகள்,சச்சரவுகள்,பிரிவுகள்..
பாரதியின் "சாதிகள் இல்லையடி...." -யையெல்லாம் சொல்லி அவளுக்குப் புரிய வைத்தேன்.

முடிக்கற்றைகள் காற்றில் பறக்க தலைசாய்த்துக் காதுமடல்களில் பென்சிலைக் கொடுத்து நெம்பியவாறே,
சொல்வதை முழுதும் கேட்டவள் அவளது தோழியின் குரல்கேட்க சிட்டாய்ப் பறந்தோடினாள்..

***************

ரு வாரம் கழித்து காற்றிலாடிய தமிழ்ப்புத்தகத்தின் முகப்பில்
நான் காண நேர்ந்தது புன்னகையுடன் இவ்வாறு..
(சற்றே.. பென்சில் திருத்தங்களுடன்!)
"
காலாண்டு ஒரு பாவச்செயல்..
அரையாண்டு ஒரு பெருங்குற்றம்..
முழு ஆண்டு ஒரு மனிதத் தன்மையற்ற செயல்.."

ம்ஹூம்...தேவதைகளுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை..
பரீட்சைகளைத் தவிர!
*****பி.கு :
படங்களிலுள்ள குட்டிதேவதை நண்பர் பாலனது வீட்டில் குடிகொண்டிருக்கிறாள்..

வெட்டு ஒண்ணு..துண்டு ரெண்டு!
விசயம் ஒன்னுதான்..
அது ரெண்டு இடங்கள்ள எப்படி பயன்படுதுன்னு
இப்படியும் எழுதிப் பார்ப்போமே!
காசா..பணமா?


விளையாடுகிறது...
தோட்டத்தில் புறாவும்..
கூட்டுக்குள் பாம்பும்..

*******
சுதந்திரமாய்..
சிங்கங்கள் கூண்டிலும்..
நாய்கள் நடுவீதியிலும்..

*******
வதந்தீ..
வாழ்வை அழிக்கவும்..
வயிற்றை நிறைக்கவும்..

*******
காற்று..
மாலையில் தென்றலாகவும்
காலையில் கத்ரீனாவாகவும்..

*******
சமூகம்..
ஆழ்ந்தவர்கள் கூடியதும்..
வாழவிடாததும்..

*******
பூக்கள்..
கல்லறையிலும்..
மணவறையிலும்...

*******
தெய்வம்...
நல்லவனுக்கு துன்பம் தரவும்..
கெட்டவனுக்கு அள்ளிக் கொடுக்கவும்..

*******
உண்மைகள்..
சொல்லுபவனிடம் கேட்க ஆளில்லாமலும்..
சொல்ல மறுப்பவனிடம் சுற்றி நின்று கேட்கப்படுவதும்..

*******

அவ்ளோதான்..!
விரும்பினால் நீங்களும் முயற்சி
செய்துபாருங்களேன்!
நன்றிகள்!
:)

சில (க)விதைகள்.. (ஆடி-5)

*
மூடன்!

ஆண்டவனை
முதியோர் இல்லத்தில்
விட்டு விட்டு..
ஆலயங்கள் தோறும்
தேடல்!

****************************

சகுனம்!

ஓடிய
பூனை
நின்றது.
மனிதன்..
வருகிறான்!

****************************

இதனையும் கவிதை எனலாமா?

அன்று
இளமையில் கல்..
இன்று
இளமையில் க'ள்'..

****************************

விலங்குகள்!

சிந்திக்க மறந்த
விலங்குகள்..
விலங்குகளாகவே ஆயின..
சிந்தித்த மனிதவிலங்கிற்கு
சிந்திப்பே
விலங்குமானது!

****************************

மாற்றம்(?)

அனலடித்த
ஓர்
வெயில்நாளில் கண்டேன்..
வெளிநாட்டுக்காரனின்
கையில்
இளநீரும்..பதநீரும்..!
நம்மூர்க்காரனிடம்
கோக்கும்..பெப்சியும்!

****************************


நன்றிகள்!

நோவா கிரகம் போவோமா??

(ரு நல்ல கதையை நீளத்தின் காரணமாக மிஸ் செய்யாதீர்கள்.
நமது மூளை எப்போதாவதுதான் இப்படி சிந்திக்கிறது..!)
தோ இன்னும் சில நொடிகளில் விண்கலம் நோவா-வை அடையுமென அடிக்கொரு முறை மானிட்டரும், ஒலிபெருக்கியும் எங்களைத் தெளிவித்தன.

ராக்கெட்டை எடுத்துக்கொண்டு.. அல்லது ராக்கெட் எங்களை எடுத்துக்கொண்டு.. இவ்வளவு தொலைவு வந்தாயிற்று.
பூமிப்பந்தைப் பார்த்தபோது விண்வெளியில் ஒரு நீலமுத்தைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது.
உலகமே எங்களது வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்காக மைக்கை தயார்செய்துவைத்துக் காத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இதோ இங்கே..இந்த பேஸ்ட் போன்ற உணவை அருந்திக்கொண்டு..பறந்து கொண்டிருக்கிறோம்.
ஒருபக்கம் மகிழ்ச்சி…மறுபக்கம் பெருமை..

நோவாவில் கால்தடம் பதிக்கப்போகும் முதல் மாமனிதர்களாக நாங்கள் இருப்போம்.கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு நல்ல நிலமையிலேயே இருக்கிறது.மெல்ல விண்கலம் தரையிறக்கம் பெறுவதற்கான அனைத்துக் கட்டளைகளும் பிறப்பித்தாகிவிட்டது.

********
தோ கதவு திறக்கிறது.மெல்லமெல்லத் தான் அடியெடுத்து வைக்க முடியும் .
கொஞ்சம் பொறுங்கள்!
என்னைச் சொல்லிவிடுகிறேன்!நான் யார்?
இந்தியாவில் செயற்கைக்கோள் மற்றும் விண்கலத்துக்குக்கான பலவிதப் படிப்புகளையும் கப் & சாசர் - ல் கரைத்துக்குடித்துவிட்டு அமெரிக்கா தத்தெடுத்துக் கொண்டதால் இப்போது இங்கே வந்திருப்பவன்-அபினவ்!
இந்தியாவும் அதற்காக வருத்தப்படவில்லை. அமெரிக்கா சென்ற பிறகு, அமெரிக்கவாழ் இந்தியர் என சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ள தயாராகவே இருக்கிறது.

இப்போது இருப்பது அல்லது பறப்பது..
நோவாவில்..என் கனவு தேசமான நோவாவில்!
பூமியில் இருந்துகொண்டு - நான் பூகோளங்களில் படித்தும்,பாட்டி தூரத்தே காட்டியபோது மகிழ்ந்தும் நினைவிழந்த நோவாவில்..
இன்னும் சிறிது நேரத்தில் நானும் எனது உயிர் நண்பனும் - ராஜீவ்-ஒரே பயோடேட்டா - காலடி வைக்கப்போவதில் பெருமிதமிருப்பதைக் காட்டிலும் பொறுப்பு அதிகமிருந்தது.

வெளிப்புற வெப்பநிலை, ஈர்ப்புவிசை என நோவாவின் ஒவ்வொரு முகமும் எங்களுக்கு அத்துப்படி! இங்கு மனிதர்கள் இல்லை என்பது 5-ஆவது வகுப்புப்பாடப் புத்தகங்களிலேயே இடம்பெற்றுவிட்ட செய்தி.

அமெரிக்கக்கொடியை நட்டுவிட்டு சென்சாரின் போட்டோக்களுக்கு சல்யூட் செய்து ராஜநடை நடந்துசில மண்சேகரிப்புகளையும் (இருக்குமேயானால்.).. நிகழ்த்திவிட்டு.. மற்ற பணிகளைப் பார்த்துக்கொள்ள இருக்கவே இருக்கிறது இன்னபிற லேண்டர் சேம்ப்ளிங் ஆர்ம்!(மண் சேகரிப்புக் கருவி!) மற்றும் ஸ்கேனர்கள்.
உலகவரலாற்றில் நாங்கள் ஒரு பெரும்புள்ளிகளாவோம். எங்களைப்பற்றிய குறிப்புகள் பாடப்புத்தகங்களிலே இடம்பெறும்.
பொறுக்க….
எனது கற்பனைகளில் ஏதோ மண்விழுகிறது.

சில வருடங்களுக்கு முன் ஆளில்லா விண்கலம் கொடுத்த அறிக்கைக்கு முற்றிலும் ஆப்பு.
நாங்கள் எதிர்பார்த்ததைவிட 250சதவீதம் பூமியின் நிலைக்கு ஒத்துப்போனது நோவா.
மிகமிக ஆணவத்துடன் ..ஆர்ப்பரிப்புடனும் தரை தொட வேண்டிய எங்கள் கால்கள்.. பயத்துடனும்,படபடப்புடனும் நோவாவில்..
விண்கலம் தரையிறங்கிய பிறகு இந்த சிலநொடிகளில் ஏதோ வெளிச்சப்புள்ளி..
மிகமிகப் பிரகாசமாக..
சற்றே வினோதமான அந்த ஒலி வேறு எங்களை பீதியடையச் செய்தாலும் உலகத்துடனான தொடர்பு (CDH) எங்களுக்கு நல்ல நிலையிலேயே இருந்தது.
ஒளிவேகத்தில் பயணித்த அந்த வெளிச்சம் எங்கள் முகவுறையைத் தாண்டியும் தாக்கி எங்களை நிலைகுலைய வைத்தது..
லேசர் துப்பாக்கியை தயார்நிலையில் வைத்திருந்ததால் அவைகளை துரிதமாக உபயோகம் செய்ய முயன்றோம்.கண்டிப்பாக…
அவை வேலை செய்யவில்லை.

********

ந்த வெளிச்சம் கண்ணிமைக்..ம்ஹும்..அதற்குள்ளாகவே எங்களை நெருங்கி இருந்தது. தூரத்தில் தெரிந்தபுள்ளி அருகில் வந்தபோது சிறிய கோளளவில் எங்கள் விண்கலத்தை ’.சுண்டைக்காய்..’ என்று ஏளனமாகச் சிரிப்பதுபோல் வந்து நின்றது.

அதன்பிறகு நடந்தவைகள் உங்களுக்கு அனாவசியமானவை .
அதை நாங்கள் வெளிஉலகுக்கு சொல்லப்போவதில்லை.
நோவாவில்
மனிதர்கள் இருக்க வாய்ப்பே இல்லை..இனிமேல் சென்று குடியேறினால்தான் உண்டு என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்த பூமிப்பிரஜைகளில் நானும் ஒருவனாயிருந்தேன். இப்போது நாங்கள் அப்படியில்லை..
ஒரு அற்புதமான , பசுமை நிறைந்த ..நோவாவின் கண்டறியாத உலகம் எங்கள் முன் விரிந்தது . என்னையும் மீறி எனது கண்களும் , வாயும் ‘O’ போட்டது.

வெளிச்சப்புள்ளி சொன்னேனல்லவா..!

அதிலிருந்து வெளிப்பட்டன சில சாதுவான ஜந்துக்கள்.. வோடஃபோன் விளம்பரங்களில் காண்பிப்பார்களே.. வோடஃபோன்காரர்கள் எங்களுக்கு முன்னமே இங்கு தகவல் கிடைத்து வந்தார்களோ எனும் சந்தேகம் ஏற்படுத்துமளவுக்கு கனகச்சிதமாக தலையில் ஆண்டென்னா-வைப் போன்ற கருவியுடன் எங்களை நெருங்கி தங்கள் உலகிற்கு வந்த வெளியுலக ஜந்துக்களை(எங்களை ) நன்றாகப் பார்த்துக்கொண்டன.

அவைகளின் முட்டைக்கண்களும், எங்களின் ஆயுத செயலிழப்பும் நாங்கள் பெற்றிருந்த பயிற்சிகளையும், முகவுறைகளையும் தாண்டி எங்கள் பீதியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
(அவைகளுக்கு எங்கள் உணர்ச்சிகள் புரியுமென்றால் !?)
ஆட்டுமந்தைக் கூட்டம்போல் அணிவகுத்து நின்றன.
ஒன்று மட்டும் தனித்து நின்றது.(எங்கும் தலைவர்கள் இருப்பார்கள் போல!)

அவைகளில் சற்றும் வேறுபாடில்லாத(எனக்கு சீனர்களின் ஞாபகம் ஏனோ வந்து தொலைத்தது..) ஒரு ஜந்து எங்களை நெருங்கி மெல்ல நுகர்ந்த பின்னர்..
தெளிவான ஒரு இன்டர்ப்ரெட்டர் போல் தெள்ளத்தெளிவான தமிழில் பேசத்தொடங்கியது.

********

ங்களுக்குத் தான் சிறிது சிரமமாயிருந்தது.
(முகவுறையைத் தாண்டியுமா..தமிழ்முகம் தெரிந்திருக்கும்?!)
“ஏ..அப்பா..! தமிழ் ஆதிமொழிதான்..புவியைத் தாண்டியும் பேசுகிறார்களே!”
ராஜீவ் மெல்ல கிசுகிசுப்பது கேட்டு..

“எங்களுக்கு சமஸ்கிருதமும் தெரியும்...”
என்றது.
யப்பப்பா.!

யார் நீங்கள்..?

".............." மௌனமாயிருந்தோம்!..

தூதுவரா?

".............."மௌ….

எங்களை சிறைபிடிக்க வந்தவர்களா?
உங்கள் நோக்கம் என்ன?
உண்மையைச் சொல்லாவிடில் உங்கள் உயிர் போகும்.
விடாமல் அழகான தமிழில் அந்த இண்டர்ப்ரெட்டர் வினவியது..

அந்தக்குரலில் குழைவான தேன்,
கொஞ்சம் விஷம்,கொஞ்சம் அமுதம்(பார்த்ததில்லை.ஒரு வேளை இருக்கும் நிலையைப் பார்த்தால் இனி பார்க்கலாம்!)
எல்லாமே கலந்திருந்தது. நிச்சயமாகக்குரலை நம்பெண்கள் யாருடனும் ஒப்பிட முடியாது. யாருமே தமிழ் பேசுவதில்லை என்பதைவிட.. இந்த அளவு இனிமை இருக்குமா என்பதும் சந்தேகமே!

"என் பெயர் குழலழகி..ஒரு காலத்தில்
கரிகால்வளவனின் அவையில் மயில்பொறியில்
கிரகம் விட்டு கிர.. "
என்றெல்லாம் கூட சொல்வாளோ..?
என நினைத்து ஏமாந்தேன்!

முட்டாள்தனமாக அவ்வளவு கூட்டத்தை நோக்கி ராஜீவ் லேசரைத் தூக்கினான்..
(டிரிக்கரைத் துவக்கும்போதே..அது வேலை செய்யவில்லை என்பது வேறு விசயம்!)

“விருந்தாளிகளைக் கொல்வதில் எங்களுக்கு விருப்பமுமில்லை.”.என்றபடி அவள்(ன்)
மீண்டும்..
விரலை நீட்டியபடி வினவ..??
அல்ட்ரா வயலட் (u.v)கதிர்கள் போல பாய்ந்த ஊதா நிற ஒளியில்..

“நாங்கள் இந்த கிரகத்தில் மனிதர்கள் வசிக்க முடியுமா என ஆரா….”

ராஜீவ் மந்திரம்போல உண்மைகளை சொல்லத் தொடங்கினான்.மனது மறுத்தும் வாய் உண்மைகளை உளறியது.

பூமியில் குற்றவாளியை உண்மைசொல்லவைக்கும் பாலிகிராப் ,ப்ரைன் மேப்பிங்-கெல்லாம் இவர்கள் முன்பு குப்பை சமாச்சாரம் என்பது அவன் உளறலில் எனக்குத் தெரிந்தது. ஏனெனில் நாங்கள் பெற்றிருந்த பயிற்சிகள் அப்படி!
வாய்ப்புக்கொடுத்தால் நானும் உளறுவதற்குத் தயாராகவே இருந்தேன்.

வெகு தீர்க்கமாக எங்கள் அருகில் வந்துபார்த்துவிட்டு..
நிதானமாகப் பேசியது ..அல்லது குற்றம் சாற்றியது ..அந்த நோவா கிரகவாசி!

**********
"
நீ
ங்கள் உங்கள் பூமியை பரிசோதனைக் கூடமாக மாற்றியிருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னர் இருந்தவர்கள் செய்யாததையெல்லாம் நீங்கள் செய்கிறீர்கள்.இவைகள் உங்களுக்கும் பூமிக்கும் நன்மை பயக்காது எனத் தெரிந்தவுடன் இதோ அடுத்த கிரகம் நோக்கிப் படையெடுக்கிறீர்கள்...உளவு பார்க்கிறீர்கள்.. சரியா?”
– தொடர்ந்து….
“இதோ இங்கிருந்தே நோக்குங்கள். பூமி ஒரு நீலமுத்து அல்ல..மெல்ல மெல்ல தனது சதைகளை இழந்துகொண்டு எலும்புக்கூடாவது உங்களுக்குத் தெரிகிறதா?
பூமியில் அதிர்வுகள் முன்னெந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. இன்னும் எத்தனை காலம் அது தாங்கும் என்பது தொங்குபாலம்தான்.
இயற்கையை அழிக்கிறீர்கள்.இதோ இங்கிருக்கும் மரங்களைப் பாருங்கள்.
ஒருநாள் விரைவிலேயே ஈர்ப்புவிசை மாறுபாடு ஏற்பட்டு சூரியனை பூமி முத்தமிடப்போவது உறுதி.”

விக்கித்தோம் !

உங்கள் டெலஸ்கோப் கண்களுக்குத் தெரியக்கூடாது என்றுதான் ஒரு பெரிய மாயவாயுவளையத்தை எங்கள் கிரகம் எங்களுக்கு வழங்கியுள்ளது. உங்களிடம் உள்ளதைக்காட்டிலும் மனோவேக வாகனங்கள் எங்களிடம் உள்ளபோதும் நாங்கள் எங்கும் படையெடுப்பதில்லை.

உங்களின் நவீன சாதனங்களெல்லாம் எங்களின் சென்ற தலைமுறைக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் என்பதை மறவாதீர்கள். எந்த நினைப்புமின்றி வந்த வழியே பூமி செல்லுங்கள்.
உங்களுக்கு ஒருமுறை வாழ்வளிக்கிறோம்!
இனி வருபவர்களுக்கு இந்த வாய்ப்பும் இல்லை.
விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த விண்கலம்.. வெடித்துச் சிதறியதாக செய்திகளில் அவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

வாயை மனது சில சமயங்களில் மீறியது.
“ இல்லை..நாங்கள் வந்த வேலையை முடிக்காமல் செல்வதில்லை.எங்களது கருவிகள் இவற்றைப் பதிவு செய்திருக்கும். ”
ஒருவேளை அவர்கள் எங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த அவகாசம் கொடுத்திருக்கலாம்..

“உங்களுடைய எல்லாக்கருவிகளின் பதிவுகளும் அழிக்கப்பட்டு வெற்றிடமான, பாலை நிலம் நிறைந்த ஒரு நோவாதான் பூமிவாசிகளுக்குக் காண்பிக்கப்படும் ..எப்போதும் போலவே..!”

தப்பித்தோம்..பிழைத்தோம்..என்றாலும்..எங்கள் ஸ்கேனர் இவற்றையெல்லாம் கண்டிப்பாக பதிவு செய்திருக்கும் என்ற நம்பிக்கையிலும் மண்விழுந்தது.

கூறினார்கள்..
“உங்கள் பூமியில் எல்லாமே சுயநலம்..இதோ பார்க்கின்றீர்களா??”

“விண்கலம் எந்த பாஸிடிவ் செய்தியும் கொண்டு வரவில்லையென்றால் பூமிக்கு முன்னரே வீழ்த்திவிடுங்கள்! இது வல்லரசுகளுக்கான யுத்தம். தோல்வி என்றே இருக்க வேண்டாம். அப்படியே தொலைத்து விடுங்கள்!”
எங்களது தலைமை அதிகாரி ஜான் தான் கட்டுப்பாட்டு அறையில், பூமியில் கழுகுமூக்குப் புடைக்கக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தான்.

முதல்முறையாக வெட்கித் தலைகுனிய நேரிட்டது .ஒரு வேற்றுகிரகவாசியிடம் !

*******

தேன்கூடுபோல் நீட்டப்பட்டிருந்த மைக்குகளில் எங்கள்மேல் சூழ்ந்திருந்த ஊடகங்களின் கேள்விக்கணைகள் ..

சொன்னோம்..(பொய் .. பொய் ..பொய்யைத்தவிர வேறொன்றுமில்லை எனும்படியாக..!)

அங்கு நீருக்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை..அவை அனைத்தும் வாயுக்கோளங்களே..அதுவும் நோவாவை விட்டு வெகு தூரம்தள்ளியே பரவியுள்ளது..முழுதும் மீத்தேன்......”

பதிவாகியிருந்தது மூளையிலும்..ஸ்கேனரிலும் இப்படித்தான்..

எனக்கு ஞாபகமிருந்தவைகளைக் கூட சொல்ல மனமில்லை..
அவர்களாவது..
இயற்கையை நேசிக்கும் அவர்களாவது ...
நிம்மதியாய்த் தான் இருக்கட்டுமே!

கேட்டார்கள்
"உங்களுடைய அடுத்த திட்டம்?"

“ஆம்! எனது வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் !”
தீர்க்கமாகச் சொன்னேன்!மனதுக்குள் நினைத்தேன்..
“உங்களுக்குத் தெரியுமா??

(பூமி கூட இப்படித்தான் சொல்ல நினைக்கிறது !)”********

பி.கு :
இன்னும் கூட நல்ல முடிவாய் யோசித்திருக்கலாம்.. பொறுமையில்லை.. பூமிவாசியாயிற்றே ! :)


உள்ள
பூமியை
ஒழுங்காக வைத்துக்கொள்ளத்
தெரியாதவர்கள்..
தேடுகிறார்கள்..
நிலவிலும்..செவ்வாயிலும்..
நீரை..!

(இது கவிதையல்ல..ஆதங்கம் !)

செல்லுங்கள்..கண்டதையெல்லாம் சொல்லுங்கள்..!

கல்விக்கண் திறந்ததின்று!


ல்விக்கண் திறந்த தின்று!
கார்மேகம் திரண்டதின்று!
கர்மவீரர் பிறந்ததின்று!
காமராசர் உதித்ததின்று!
சூரியனோ டொப்பிட்டால்
சூரியனோ ஒளியிழக்கும்!
மாரியினோடொப்பிட்டால்
மழைநீரோ வற்றிநிற்கும்!

ஒப்புவமை இல்லாத
உயர்வான ஒருபொருளை
எப்பொருளோ டொப்பிடுவேன்
இயலாது திகைத்துநிற்பேன்!
காமராசர் ஆட்சி செய்ய
கலகங்கள் துடைத்து நிற்க
நூறுபேரின் வாய்திறக்கும்
நின்முகமோ பசியாற்றும்!

குன்றாத புகழ்வாய்ந்த
எம்.சி.ஆர் அன்று சொன்னார்
அண்ணா- என் வழிகாட்டி!
காமராசர் - என் தலைவர்!
ஆயிரம்பேர் அய்யாவின்
ஆட்சி செய்யத் துடித்திடலாம்!
தனக்குவமை இல்லாத
தலைவர் காமராசர்தான்!

அய்யன் காமராசர் வந்த
அருமையான இந்நாளில்
அவரை வணங்கி நிற்க
அழகுபெறும் நம்வாழ்வும்!

தனக்குவமை இலாத அருந்-
தலைவரவர் தாள்பணிவோம்!படிக்காத மேதை அவர்களின் அரிய புகைப்படங்களும்,தகவல்களும் இங்குள்ளன.
http://kamarajar.blogspot.com/
நன்றிகள்!

பட்டினத்தாரும்..கண்ணதாசனும்..பின்னே நாமும்!ட்டினத்தாருடைய ஒரு பொருள்பொதிந்த பாடல்..

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மிவிம்மியிரு
கைத்தல மேல்வைத்து அழும்மைந்தரும் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!

ஒண்ணும் புரியலையா?இப்பக் கீழ உள்ளதப் படிப்போம்!

வீடு வரை உறவு..
வீதி வரை மனைவி..
காடு வரை பிள்ளை..
கடைசி வரை யாரோ?நவீன பட்டினத்தார் கண்ணதாசன் அவர்களின் எண்ணவண்ணத்தில் நசுக்கிச் சுருட்டி மேல உள்ள பாட்டை எப்படி எழுதியிருக்கார் பாருங்க!(படம்- பாத காணிக்கை 1962)

******************
ட்டினத்தார்-ந்னு சொன்னவுடனேயே தப்பிச்சு ஓடப்பார்க்குறீங்க பார்த்தீங்களா?
எவ்வளவு நாள்தான் பெண்ணையும்,அவர்தம் கண்ணையும்,நிலவையும்,
உள்மன ஆழ விளிம்பு இருட்டின் சிறுபிம்பத்தையும்-என்றுமட்டும் கவிதையெழுதிக் கொண்டிருப்பது..அதனால்தான் இந்த சிறுமுயற்சி..

*******************
கொஞ்சம் பட்டினத்தாரின் மனநிலையுடனேயே நிதானமாகக் கீழுள்ள கவிதைகளை அணுகவும்!
*

காதறுந்த
ஊசி..
சொல்கிறது
சேதி..
வாழ்க்கை!


*************************

விறுவிறுவெனப்
பாவம் சேர்க்க
வேகமாய்த் தொடர்கிறான்..
காலன்..


*************************

கருவில் உதைத்தால்
இன்பம்..
காலத்தில்
தெருவில் உதைத்தால்..
என் சொல்ல.. ?


*************************

இறைவனுடன் போட்டி..
மன்மதன் வென்றான்
அம்பால்..
மனிதன் வென்றான்
அன்பால்..
கிடைத்தது சாபம்.. !
போனது பாபம்..!


*************************

முடிமுடிமுடி!

விதிமுடி
வாழ்க்கை..
தலைமுடி..
இரண்டும்
சேர்த்து முடி!


*************************

மது..
மாது..
சூது..போம்!
மனை(வி)யிழந்த போதே
புலனாகிறது
வாழ்க்கை!


*************************

செத்தபிணம்
கிடக்க..
சுற்றி நின்று
அழுகின்றன..
இனிச் சாகும்பிணங்கள்!

*************************

இதை இன்னும்.. சற்றே நிதானமாகப் படியுங்கள்!

மானிட வாழ்க்கை!

வளர்பிறை..!
பௌர்ணமி..!
தேய்பிறை..!
அமாவாசை..!
பிறகு..??வகையாய் முதலில் நம்மிடம் சிக்கியவர் பட்டினத்தார்..அதனால தான் தலைப்பும் அப்படியே! ரைட்டுன்னா கைதட்டிக்குங்க.. தப்புன்னா தலையில தட்டுங்க!
(ச்செல்லமான்னு சொல்ல வந்தேங்க!)

*************************
படங்கள் - நன்றி கூகிள்.

இளவட்டக்கல் தெரியுமா..இளவட்டக்கல்!


படம்: நன்றி தினமலர்


இளவட்டக்கல்..!
இதுக்கு இன்னொரு பேரு கல்யாணக்கல்..
சும்மா உருண்டு திரண்டு ஒவ்வொரு கோவிலுலயும் ஊருக்கு ஊரு இது பாண்டிய நாட்டுல இருக்குங்க..முன்னாடியெல்லாம் இந்தக் கல்லைத் தூக்கி கோவிலை வலம் வர்ரது..ஊருணியை வலம்வர்ரது -ந்னு வந்து நானும் ரௌடி-ந்னு நிரூபிச்சா தான் பொண்ணு. இல்லன்னா , வாயில மண்ணு விழுந்தாலும் பொண்ணு கிடையாது..

காளை மாட்டை அடக்குறது..கல்லு தூக்குறது மூலமா உடல்வலிமையை நிரூபிச்சாதான் ..சரி.இவன் நம்ம பொண்ணைக் கல்யாணம் பண்ணுனாலும் கடைசி வரைக்கும் வச்சு உழைச்சுக் காப்பாத்துவான்- ந்னு ஒரு நம்பிக்கை. ஏன்னா ..அப்ப எல்லாமே உடல் உழைப்பு சம்பந்தமான தொழில்கள்.அதுக்காகத்தான் இதெல்லாம்.லியோனி சொன்ன மாதிரி,
இப்பல்லாம் கல்லத் தூக்குனாதான் பொண்ணுன்னு சொன்னா கொள்ளப் பயபுள்ளைகளுக்குக் கல்யாணமே நடக்காது.

சரி..இப்ப இளவட்டக்கல்லுக்கு வருவோம்.
இது பார்த்தீங்கன்னா நல்ல உருண்டையா , எந்த பிடிப்பும்
இல்லாம,சும்மா வழுவழு-ந்னு இருக்கும்.
எப்படித் தூக்குவது.. ?

1. முதலில் குத்த வைத்தது போல் கல்லோடு சேர்ந்து
உட்கார்ந்து கொண்டு அதனைச் சுற்றி மாலையாகப் பிடித்து
உங்கள் கைகளுக்குள் வைத்து உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும்.

2.கைகளைக் கல்லைச் சுற்றி அணைத்தபடியே அப்படியே
எழுவதற்கு முயற்சி செய்து , உடல் நிமிர்ந்தவுடன்
.கே..ஸ்டார்ட்..

3. இப்போது கல்லை மெல்ல தூக்கி வந்து முழங்காலில்
வைத்து சிறிது கால இடைவெளி கிடைக்கும். (ரொம்பக் கவனமா கல் வழுக்கிடாம விரல்கள்ள இருந்து உங்க முழங்கைகள் வரை கல்லை அணைச்சிருக்கணும்.கொஞ்சம் கல் வழுக்கியதுன்னாலும் கை சிராய்ப்பாகிவிடும்.)

4. இப்போது மேலும் மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டு சற்றே
வளைந்திருக்கும் உடம்பை மெல்ல நிமிர்த்தி கல்லை உங்கள்
நெஞ்சினில் வைத்து உருட்டி அங்குலம் அங்குலமாக மேலேற்ற
வேண்டும்.( இப்போதைய நிலைதான் படத்திலுள்ளது!)

5. உங்களுக்கு எது எளிதாக உள்ளதோ அந்தப் பக்கம் (இடது
அல்லது வலதுபுறம்) கல்லை உருட்டி ஏற்றி..(நெஞ்செலும்புகள்
மடமடவென்று லேசான சத்தத்தை ஏற்படுத்தக்கூடும்...முதல்
முறையென்றால்)

மூச்சடக்கித் தோள்பட்டையில் வைத்துவிட்டால் உங்களுக்குப் பொண்ணு உறுதி.. :)
இதில் மார்பிலிருந்து , தோள்பட்டை வரை கல்லை நகர்த்தும் போதுதான் பலர் தோல்வியடைந்து விடுவார்கள்.கல்லை அவ்வளவு தூரம் தூக்கி விட்ட பிறகு சிலபேர் அப்படியே தோள்பட்டையில் கல்லை வைத்துக் கொண்டு எப்புடி??? என்பது போல கொஞ்ச நேரம் போஸ் கொடுப்பார்கள்.
இன்னும் சிலர் அருகிலுள்ள கோவிலை வலம் வருவார்கள்.இன்னும் சில ஊறிப்போன பயபுள்ளைக.. கோவிலுக்கு முன்னாடி இருக்கிற ஊருநி-யவே வலம் வரும்.
இந்த அங்குல..அங்குல நகர்த்தல்களெல்லாம் நம்மல மாதிரி கத்துக்குட்டிகளுக்குத் தான்..ஒண்ணுரெண்டு பீமனுங்க அசால்ட்டா கல்லத்தூக்கிப் போட்டுட்டு
..அடுத்த வேலை என்ன? என்பது போல பார்க்கும்..

எங்க ஊருல இதுமாதிரி மூன்று இளவட்டக்கற்கள் இருக்கின்றன.அதுல ஒரு கல்லை நிறைய பேரு தூக்கீருக்காங்க..ஆனா, மத்த ரெண்டும் யாருமே தூக்குனதில்ல.தூக்குனவங்கள்ளாம் போய்ச் சேர்ந்துட்டாங்க..போன தலைமுறை ஆட்களோட சரி..

ஒரு நாள் ஆளில்லாத நேரமாப் பார்த்து இருட்டுல போய் எல்லாரும் போல நானும்
அந்த இரண்டு பெரிய இளவட்டக்கற்களை முயற்சி பண்ணுனேன்..
தரையிலிருந்து 2 அங்குலம் வருவதற்குள்ளாகவே மூச்சு
முட்டி, வியர்த்து காதடைத்து ..அய்யோ..போதும்டா சாமி...என்று யாரும் பார்க்கும் முன்னே
கா(கல்)லைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே ! - ந்னு

கவிமணி அவர்களின் பாடல் போலத்
தப்பித்து ஓட்டம் பிடித்தேன்!.

ஆனால் ஒன்று, என்னால் நம் முன்னோர்களின் உடல்பலத்தை
வியக்காமலிருக்க முடியவில்லை.இனிமேல் கிராமத்துக்குப் போனால் கோவில்களில் அந்த இளவட்டக்கற்களைத் சற்றுத் தேடிப் பாருங்கள்.எங்கேனும் ஒரு ஓரத்தில் அந்த வீரம் ஒளிந்திருக்கக் கூடும்!
(வாய்ப்புக் கிடைத்தால் படங்களுடன் பின்னொரு நாளில் வெளியிடுகிறேன்!நன்றிகள்!)

மலையாளியும்.. ஒரு கொலையாளியும் :)

*
லையாளிகள் அதிகமாகப் பணிபுரியும் அந்த இடத்தில் வழக்கமாக நான் மலையாளத்திலேயே பேசுவதுண்டு(பேச முயற்சிப்பதுண்டு!)அன்றும் அப்படித்தான் மலையாளத்தில் சம்சாரித்துக் கொண்டிருந்தேன். அந்த மனிதரை அதற்கு முன் அங்கு பார்த்ததில்லை.சிறிது நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவர்.. (என்னையல்ல..நான் மலையாளம் பேசும் அழகை!என்பது பின்னர் புரிந்தது!)
சொன்னார்.
"தம்பி.தமிழ்லயே பேசுங்க.எல்லோரும் புரிஞ்சுக்குவாங்க.
(ஆகா..தமிழுக்காக ஒரு குரலா என வியந்த வேளையில்..)
மலையாளத்துல பேசி அதைக் கொல்லாதீங்க "என்றாரே பார்க்கலாம்.
எனக்கு விதிர்த்துவிட்டது.

தமிழைக் கொல்லாதேன்னு இதுபோல் யாரும் சொல்லிக் கேட்டதில்லை. தமிழர்களுக்குள் பேசிக்கொள்வதோடு சரி. தமிழ் பேச முனையும் நேபாளிகளைக் கூட(மலையாளிகளையும்) நான் தட்டிக் கொடுப்பேனே தவிர திட்டிக் கெடுப்பதில்லை.வெளியே நாகரிகமாக நான் புன்னகைத்த போதிலும் உள்மனம் 'ங்கொய்யால' என கொதித்துக்கொண்டிருந்தது.

"ஏன் சார்! ஆரம்பத்துல தப்பாப் பேசுனா தான் ..அடுத்து சரியாப் பேச முடியும். அதுக்காக பேசாமலே இருக்க முடியுமா என்ன?"என்றேன்.தடுமாறித் தவறிவிழாத எந்தக் குழந்தையும் நடப்பது சாத்தியமில்லை என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
"நீங்க சொல்ற மாதிரி அது 'பறைஞ்சு' இல்ல.
'பறைஞு'-ந்னு சொல்லனும். மலையாளத்தக் கொல்லாதீங்க..!" என மீண்டும் சொன்னவுடன் எனக்கு மண்டை சூடேறிவிட்டது."சார்! இவ்வளவு பேசுறீங்களே! நீங்க மட்டும் என்ன ப்யூர் மலையாளமா பேசுறீங்க?சரி! செந்தூரந்தொஞ்ஞி-ந்னா என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்"ந்னேன்.

மனிதர் அதை எதிர்பார்க்கவில்லை. கேள்வி கேட்டவர் ஒரு மலையாளியாயிருந்தால் அப்படி ஒரு வார்த்தையே இல்லை என்று யோசிப்பின்றி சொல்லி இருக்கக்கூடும்.ஆனால், என்னிடம் தோற்பதற்கு அவருக்கு மனமில்லை.மூளையின் ஞாபக அடுக்குகளில் அவரது செல்கள் வார்த்தை தேடியலைவதை கண்கள் காட்டிக் கொடுத்தன.மனிதர் பேய்முழிமுழித்தவாறே..
'செந்தூரம்'-னா இது என்று நெற்றியில் கைவைத்துக் காண்பித்துக் கொண்டிருந்தார். நான் கேட்டேன் "அப்ப 'தொஞ்ஞி'-ன்னா?"

"நல்லாத் தெரியலைன்னா அடுத்தவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குங்க சார்!"
என்றபடி..
அடுத்த 5 நிமிடமும் அங்கிருந்த மற்றொருவரிடம் மலையாளம் கலந்த தமிழிலேயே பறைந்து அவரை வெறுப்பேற்றிவிட்டு வந்தேன்.தமிழில் ஐந்து எப்படி அஞ்சு ஆனதோ.. அதுபோலவே
பறைந்து-பறைஞ்சு- ஆகி - பறைஞு வாகத் திரிந்திருக்க வேண்டும்.உண்மையில் மொழி என்பது ஒருவருக்கோ அல்லது ஓரினத்தவருக்கோ மட்டும் சொந்தமானது அல்ல.பேசுபவர் யாவருக்கும், பேச முனைபவருக்கும் கூட சொந்தமானது.தமிழராகப் பிறக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தமிழுக்கு அருந்தொண்டுகள் புரிந்த வீரமாமுனிவரும், தன்னுடைய கல்லறையில் தான் ஒரு தமிழ் மாணவன் என எழுத வேண்டிய ஜி.யு.போப் அவர்களுக்கும் தமிழ் சொந்தமானது இல்லையா என்ன?
மொழி என்பது காற்று போல.
விருப்பமுள்ளவர்கள் யாவரும் சுவாசித்துக்கொள்ளலாம்.

பி.கு :
அது என்ன 'செந்தூரந்தொஞ்ஞி'.
யாருக்குத் தெரியும்.வாயில வந்ததுதான்.
அர்த்தம் திருப்பிக் கேட்டிருந்தா??
கேள்வியே கேட்ட நமக்கு.. பதிலா தெரியாது?
**************************

கவியரசரும்..சில கவிதைகளும்!

*
வியரசர் கண்ணதாசன் ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்..
ஏதோ யோசித்தபடியே கீழே பார்த்தவரின் கண்களில் தட்டுப்பட்டது ஒரு ரயில் டிக்கெட்.

அதனைக் குனிந்து எடுத்தவர்,
யார் தவறவிட்டது.. தெரியவில்லையே? டி.டி.ஆர் வந்தால் என்ன செய்வார் பாவம்..
(பாவம் டி.டி.ஆர் இல்லங்க..டிக்கெட்டைத் தவற விட்டவர்!)என்று கம்பார்ட்மென்ட் முழுதும் இருந்த ஆட்களிடம் ஒவ்வொருவரிடமும் விசாரித்திருக்கிறார் 'டிக்கெட் யாருடையதென்று?'.

சிறிது நேரத்தில் அங்கு டி.டி.ஆர் வர..

ஒவ்வொருவராய் டிக்கெட் எடுத்துக் கொடுக்க..
கண்ணதாசன் முறை வந்ததும் டிக்கெட்டைத் தேடியிருக்கிறார்.
எங்கும் காணவில்லை.

தெரிந்து விட்டது..
கீழே கிடந்து எடுத்தாரே ..
அது அவருடைய டிக்கெட் தான் என்று!!

நல்ல வேளையாக , யாரும் வந்து கேட்டால் கொடுக்கலாம் என்று
அதை பத்திரமாக வைத்திருந்ததால் டி.டி.ஆரிடம் காட்டி
பிழைத்திருக்கிறார்.

கண்ணதாசன் சொல்வார்(சரி விடுங்க..சொல்லி இருக்கிறார்!)
" நான் தூக்கத்தினாலும், மறதியினாலும் இந்த உலகில் இழந்தது நிறைய" என்று.

(கவியரசர் மட்டுமா என்ன?இதுபற்றி ஏற்கனவே தெரிந்தவர்கள் மறுபடியும் கண்ணதாசனைப் பற்றிப் படித்ததில் மகிழ்ந்து கொள்ளுங்கள்!(எப்படியெல்லாம் தப்பிக்க வேண்டியிருக்கிறது!)
இது போல் இன்னுமொரு அல்லது பல நிகழ்வு(களு)ம் கூட கவியரசரின் வாழ்வில் உண்டு..
அது பிறிதொரு சந்திப்பில்!

****************************************************
சி கவிதைகளும்!

காக்கைகள்
குருவியென
வேடமணிந்தால்
குருவிகள்
பருந்தென
மாறுதல் நலமே!

***************

முள்ளை எடுக்க முள்!
வைரம் அறுக்க வைரம்!
என..
குற்றம் மறைக்க குற்றம்
புரியும்
தேசம் எங்கள்
தேசம்!

(புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்!)

***************

வற்றல்!

வலியவன்
வீட்டு மாடியிலும்
வறியவன்
வயிற்றிலும்,
வாழ்க்கையிலும்!

***************

கத்தியெடுத்தவனுக்குக்
கத்தியில்
சாவு!
எப்படி வரும்?
தொண்டையில்
புண்ணல்லவா
வர வேண்டும்!


இதைக் கவிதையில் சேர்த்த என்னை யாரும்
சத்தமாகத்(கத்தித்) திட்ட வேண்டாம் :)

*************************************************

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!