*
வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும்!
தமிழகத்தை எந்தக் காலத்திலும் ஆண்ட, எந்த மன்னர்களிலும் தனியாக வைத்துப் போற்றப்பட வேண்டியவன் மாமன்னன் ராஜராஜ சோழன். வீழ்ந்து கிடந்த சோழப்பேரரசை மீட்டுப் புலிக்கொடியைப் பறக்கவிட்ட மிகப்பெரிய வேந்தன்.
(மரியாதைக்காக "ர்" போட்டால் ராஜராஜர் என தள்ளிப் போவதால் "ன்" போட்டே அழைப்போம்.சோழவேந்தனும், தஞ்சை ஆவுடையாரும் பொறுத்தருள்வராக!)
அவனுடைய சரித்திரத்தை உற்றுப் பார்ப்பதற்கு முன் சற்றே அந்தக் காலத்து தமிழகத்து நிலை எப்படியிருந்தது என்பதைப் புரட்டிப்பார்த்து விடுவது நலம்.
தமிழகத்தைத் தொன்றுதொட்டு அல்லது பழைய நாளிலிருந்தே மூன்று வம்சங்கள் ஆண்டு வந்தன. ஆம்..நீங்கள் சொல்வது தான். அவை பாண்டிய,சோழ,சேர வம்சங்கள்.
இதில் தமிழகத்தின் பூர்வீகக்குடி என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது பாண்டிய வம்சத்தினரே.அதற்காக சோழரும்,சேரரும் பூர்வீகம் என்ன பாரசீகமா? இல்லை.
அவர்களும் பூர்வீகத் தமிழினங்களே.ஆனால்,
பாண்டியனிலிருந்து பிற்பாடு பிரிந்தவர்களான அவர்களே சேரர்,சோழர்,பாண்டியராகத் தமிழகத்தை முறையே மலைநாடு,வளநாடு,பழநாடு என ஆண்டு வந்தனர். "கிளைநாடு” பல்லவர்களைக் குறிக்கும்.அவர்கள் அடுத்து வருவார்கள்.
அசோகர், சந்திரகுப்தர் போன்ற மாபெரும் ஆட்சியாளர்கள் இந்தியா முழுமையும் ஆண்டபோதும்கூட, கி.மு-க்களில் இருந்தே தமிழகம் யாருடைய ஆளுகைக்கும் உட்படாமல் தனித்தே இருந்துவந்தது.
(பார்க்க படம் 1: அசோகரின் கீழ் இந்தியா)
சரி! கரிகால் வளவன்(கரிகாலன் இரண்டு பொருள் : சற்றே தீப்பிடித்து கருமை படிந்த கால்கள். யானைகளுக்கு யமன் (கரி - காலன்!)) இமயத்தில் புலிக்கொடி பறக்கவிட்ட பின்னர் பலகாலம் கழித்து வடக்கிலிருந்து உள்புகுந்த கன்னட தேசம் சார்ந்த கன்னடர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தினர்.கிட்டத்தட்ட கி.பி 300 முதல் 600 வரை தமிழகத்தை ஆண்ட களப்பிரர்களும் இவர்களே!
இவர்களில் குறிப்பிடத் தகுந்தவன் அல்லது குறிப்பிடக் கிடைத்தவன் அச்சுத விக்கந்தன் அல்லது அச்சுதன் என்பவன்.யாப்பெருங்கலக்காரிகையில் குறிப்பிட்டுப் பாராட்டப்பெறுபவன் இவனே.
இவர்கள் போதுமான அளவு கல்வெட்டுகளை விட்டுச் செல்லவில்லை அல்லது பின்னர் வந்த மன்னர்கள் அவற்றை விட்டுவைக்கவில்லை(அழித்துவிட்டிருக்கலாம்!)
இவர்களின் ஆட்சிக்காலம் பற்றிய தகவல்கள் எதுவும் பெற முடியாமையால் இது வரலாற்று ஆய்வாளர்களால் "இருண்ட காலம்" என அழைக்கப்படுகிறது என்றாலும் மூவேந்தர்களையும் அடிமைப்படுத்தியவன் சாதாரணனாக இருந்திருக்க முடியாது.
மூவேந்தர்களும் சிற்றரசர் அதிகாரத்திலேயே அந்நாட்களில் அதிகாரம் செலுத்த முடிந்தது. இருப்பினும் 6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டியர்களும்,பல்லவர்களும்(புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கோவில் இவர்கள் கைங்கரியம்)சேர்ந்து களப்பிரர்களைத் தமிழகத்திலிருந்து அகற்றினர்.
இந்தக் களப்பிரர்களே பாளி மொழியும்,சமணமும் தமிழகத்தில் புகக் காரணமானவர்கள்.
பின்னர் வந்த பல்லவர்களும் தங்கள் பங்குக்கு வடமொழியை வழிமொழிந்தனர்.இவர்கள் ஆட்சிக்குப் பின்னரே தமிழில் "ஜ" போன்ற எழுத்துகளின் உச்சரிப்புகளை நாம் காணலாம்..(மன்னர்களின் பெயர்களில் கூட!) என்றாலும் பல்லவர்களின் கட்டடக்கலையே பின்னாளில் பெரும் உயரத்தில் கோபுரங்கள் உயர எழுவதற்கு முத்தாய்ப்பாகவும் அமைந்தது.
பாண்டியர்களுக்கும், காஞ்சியைத் தலைமையாகக் கொண்டிருந்த பல்லவர்களுக்கும் தமிழகத்தின் தலைமையைக் கைப்பற்ற போட்டி நடக்கையில்(பார்க்க படம்:2) வீழ்ந்து கிடந்த சோழரினம் மெல்லத் தலைதூக்க முடிந்தது.வீழ்வதும் மெல்ல எழுவதுமாக இருந்த அந்தப் பிற்காலச் சோழர்களின் ஆட்சிவரிசையில் தான் ஒரு புதிய நட்சத்திரம் உதயமானது.
அந்நட்சத்திர மன்னனின் ஆட்சியில் நிலப்பரப்பு,அதிகாரம்,கலை,இலக்கியம்,வாணிபம்,
சமயம் என அனைத்து வகையிலும் உச்சத்தைத் தொட்டு உலக அரங்கில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. அவனை வீழ்த்த யாராலும் முடியவில்லை.சென்ற இடமெங்கும் வெற்றிக்கொடி நாட்டினான்.
ஆம்! அவன் தான் இராஜராஜசோழன்!
- தொடர்ந்து வருவான்!
மன்னாதி மன்னன் - இராஜராஜசோழன்!
லேபிள்கள்: இராஜராஜ சோழன்
மன்னாதிமன்னன் - தொடர்பதிவின் தொடக்கம்!
*
*
அனைவருக்கும் வணக்கம்!
_____/\_____
என்னுடைய ஆதர்ச நாயகனும், தமிழகத்துத் தலைசிறந்த அரசனுமாகிய மாமன்னன் ராஜராஜ சோழனின்(என்ன பேருப்பா..உன் பேரு!) வரலாற்றை வானம் தொடத்துடிக்கும் (முடியாதெனத் தெரிந்தும்!)சிட்டுக்குருவியின் ஆவலுடன் எழுதத் தொடங்குகிறேன். முடிந்த வரையில் ஏமாற்றாமல் எழுதவும் முயல்வேன்.
கை வசம் இப்பொது ராஜராஜனைப் பற்றி இருக்கும் தகவல்கள் குறைவே என்றாலும், இதைவிட அவனைப் பற்றி எழுதுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்துவிட முடியாது.
படித்த காலங்களில் பிடித்த பாடம் வரலாறு.அதனைப் பரீட்சைக்கு என்று படித்ததேயில்லை..ஒரு கதைப்புத்தகம் போலவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்ததால் அதற்கு அவசியம் நேரவில்லை.
நண்பர் வெறும்பய அழைத்த போது விக்கித்தாலும் என்றோ ஒருநாள் எழுதவேண்டும் என நினைத்ததுதானே..!ஒருவேளை அந்த நாள் வராமலே போய்விட்டால் என்ற நினைப்பால்..வந்த மலைப்பால்.. இதோ இப்போதே தொடங்கி விடுகிறேன்.இதன் நீள அகலங்கள் தாங்கள் வழங்கும் ஆதரவைப் பொறுத்தது.
குறைவான தகவல்களுடன் இருந்தாலும் சுயம் தொலைந்துவிடாமல் கற்பனைகளை ஏற்றிவிடவேண்டியதுதான்.
ஏதேனும் பிழைகளிருப்பின் பொறுத்தருள்வதுடன் சுட்டிக்காட்ட நானும் தெரிந்துகொள்வேன்.
கற்றது கடு-களவு :)
அடுத்த பதிவிலிருந்து மன்னாதி மன்னனாக வலம்வருவான் -
****மாமன்னன் ராஜராஜசோழன்!****
நன்றிகள்!
லேபிள்கள்: இராஜராஜ சோழன்
உறை(ரை)ப்புகள்!
*
காவிரிநீர்..
கரைபுரண்டு..
கர்நாடகாவிலிருந்து..
ச்சே!
காலையிலேயே
கனவு!
**************
"சிந்திக்காமல்
சில நேரம் இரு"
என்றேன் மனதை!
நிந்திக்கிறது
அறிவு!
***************
எங்குள்ளது உயிர்?
கழுத்தில்..?
இருதயத்தில்..?
மூளையில்..?
என் காலில் முள்குத்த
அலறுகிறாள்
தாய்..
இப்போது சொல்லுங்கள்!
****************
சிறப்பு!
அர்ச்சனைத் தட்டில்
ஆயிரத்தை விட..
அனாதை இல்லத்தில்
அரைப்பணம் இடுவது!
****************
செத்துமடிந்த மரம்
சொல்கிறது சேதி!
நான் மீண்டும் வருவேன்!
அதோ...!
காற்றில் பறக்கிறது..
ஒற்றை விதை!
****************
வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்!
"ப்ச்"
இந்தக் கீரையை
நாளை யார் வாங்குவார்கள்?
****************
மூன்றாவது முறையாக
சில்லறை கேட்கப் போனேன்!
கடைக்காரர்
வசைபாடி விரட்டினார்.
பிச்சைக்காரனை!
பெரிய வித்தியாசமில்லை!
****************
இதுகளைக் கவிதைன்னும் சொல்லலாம்.
சிலசமயங்கள்ள கழுத்தறுப்புன்னும் சொல்லலாம்.
ஆனாலும்,
அவ்ளோதான்!
:)
லேபிள்கள்: சில (க)விதைகள்
அழகி!!!!

“அழகிஅழகி! என்னய இப்புடி ஒத்தயில விட்டுப்புட்டு போயிட்டியே அழகி!
என்னால முடியலத்தா ..மறுபடியும் வருவியா?? இல்லாட்டி என்னயுங் கூப்புட்டுக்க.. அங்கயே நானும் வந்துர்றேன்!”
நாங்கள் தோட்டத்தில் ஆயில் மோட்டார் போட்டு நீரைக் காய்கறி,கீரைகளுக்குப் பாய்ச்சுவதுண்டு.அருகிலேயே மற்றுமொரு தோட்டம்.அதில் ஒரு கிழவர் தள்ளாத 85 வயதுகளில்.காற்றடித்தால் விழுந்துவிடும் தேகம்.குழிவிழுந்த கண்களின் வழியே பார்வை தேடும் தோற்றம்.கைகால்கள் நடுக்கமுற்றிருந்த போதும் யாரிடமும் கையேந்தாத வைராக்கியம்.
அந்த நிலையிலும் ஏற்றம்போட்டு இறைத்துதான் தனது கீரைகளுக்கு நீர் பாய்ச்சுவார். ஒரு காலத்தில் கடுமையான உழைப்பாளியாய் இருந்திருப்பார்.இன்றும்!அவர் அந்தக் கீரைகளை எங்கும் விற்று நான் பார்த்ததில்லை.பிள்ளைகள் போல வளர்த்துவந்தார் அல்லது அவர் விற்கும்போது அந்த முதுமையை சகித்து யாரும் அவரிடம் வாங்குவதில்லை என நினைக்கிறேன்.சில தென்னம்பிள்ளைகளும் அங்கு இருந்துவந்தன.எங்கள் தோட்டத்தில் பாதியளவு இருந்தபோதும் அந்தத் தோட்டம் சரியாகப் பராமரிக்கப்படாமல் வேலியடைக்காமல் இருந்து வந்தது.
சில சமயங்களில் அவரது தோட்டத்தில் இருந்து விசும்பல்கள் கேட்கும்.மேற்குறிப்பிட்ட வாக்கியங்களுடன்! மனது ஒரு மாதிரி வெறுமையில் புகுந்து, வேலை கவனமற்றுப் போய்விடும்.
ஆனாலும்,அந்த சிறிய வயதுகளில்,
"அந்தத் தோட்டம் சண்டக்காரருட்டு..!" என்றே என்னை வீட்டில் சொல்லிவைத்திருந்தார்கள்.
ஆனால், நான் எப்போதாவது வெளியில் வீதிகளில் சைக்கிள் டயர்களை உருட்டித் திரியும்போது யாருமற்ற வீதிகளில் அவரை சந்திக்க நேரிடும்.நெற்றியில் கையூன்றி என்னை நோக்குபவர்...
"ஆரு..செந்தாமர மகனா?நல்ல புள்ளடா ஒங்காத்தா!" என்று என்னைத் தாவங்கட்டை வழித்துக் கொஞ்சுவார். அந்தக் கண்களில் கருணையும்,ஒருவிதப் பழைய கிராமத்து மனிதர்களுக்கே உரிய வெள்ளந்தியான புன்சிரிப்பும் , அருகாமையும் கலந்திருக்கும்.
சண்டைக்காரர் என்று சொல்லிவிட்டதால் எதுவும் பேசாமலேயே வேகமாகத் தலையசைத்து அப்போது கடந்துவிடுவேன்.ஆனால், அவர் கொஞ்சிய வாசம் மனதினுள்ளேயே மணத்துக் கொண்டிருக்கும்.
பின்னொரு நாளில் நான் விசாரித்த போது தெரிந்தது.அவருடன் எந்த சண்டையும் இல்லை.அவருக்கு ஒரு மகனும், இரண்டு பெண்களும் உண்டு.மூவருக்கும் திருமணமாகி,மகன் வெளிநாடு போக,மருமகள் மாமனாரை அக்கறையாகக் கவனித்துக்கொண்டதால்(?), அவர் தனியே சமைத்து உண்ணவேண்டியதாயிற்று அந்தத் தள்ளாத வயதிலும்.மகனும் ஏனென்று கேட்கவில்லை.
இந்தப் பெரிய மனிதர்களுக்கெல்லாம் வார்த்தைதான் முக்கியம்.அன்பிற்காக எதையும் தாங்குவார்கள்.ச்சீ..என்று நாக்கில் பல்போட்டு சொல்லிவிட்டால் செத்தாலும் அந்தப்பக்கம் தலைவைத்தும் படுக்க மாட்டார்கள்.இவரோடு பேசுபவர்களுடன் மருமகள் சண்டைக்குப் போக,என் வீட்டுக்காரர்கள் பயந்த காரணம் புரிந்தது.
நான் விவரமறிந்த பின்னாட்களில் அவரைக் காணும்போதெல்லாம் என்னை வாஞ்சையாக அழைத்துப்பேசுவார்.வழக்கம்போலவே, "ஆரு! செந்தாமர மகனா..?" என அழைப்பதில் காற்றோடு சேர்த்துக் கொஞ்சம் சத்தமும் வரும்.அதுவே எனக்குப் போதுமானதாகவும் இருந்தது.அவருக்குக் காதும் சற்று மந்தமாகையால், நான் கைகளாலும், முகபாவனைகளாலும் சைகையாகக் கேட்பதற்கெல்லாம் ஆர்வமாய் பதில் சொல்வார்.நான் அவரைப் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பேன்.யாரும் கிழவர்களுடைய பேச்சுகளைக் கேட்பதில்லை.அதனால், தன்னில் உள்ளதனைத்தையும் என்னிடம் கொட்டுவார்.
"இம்புட்டுக் கஞ்சி ஊத்தமாட்டேங்குறாக..! எம்புட்டு சாப்புடுவேன்? எம்புட்டோ ஒழச்சேன்.அவ இருந்திருந்தா இந்தக் கதி எனக்கு வந்திருக்குமா?"
அவர் கண்களில் ஒருவித ஆற்றாமையுடன் கூறும்போது, சொல்ல முடியாத துக்கமொன்று தொண்டையிலிருந்து ஆக்கிரமிக்கத் தொடங்கும்.அவர் கூறுவதனைத்தையும் கண்களில் நீர்மறைத்து மெலிதான புன்னகையுடன் கேட்டுக்கொள்வேன்.கண்டிப்பாக என் உள்மனம் நிசப்த விளிம்பில் கிடந்து நாறும்.ஆனால், அவர் கூறுவதைக் கேட்டுக்கொள்வதைத் தவிர, அவர் துக்கத்திற்கு ஒரு வடிகாலாக இருப்பதைத் தவிர, ஏதும் உதவிகள் செய்ய முடியாத சிறிய பையனாகவே நான் இருந்தபோதும் என்னிடம் கொட்டுவதில் அவருக்கு ஒரு ஆறுதல்.
அவருடைய மனைவியான அழகியை நான் பார்த்திருக்கிறேன். ரவிக்கையணியாமல் கொண்டை போட்டுப் பெரிய காதுகளில் பப்படம் தொங்க இறுகிய முகத்துடன் இருப்பார்.ஒருவேளை சிரிக்காத நேரங்களில் நான் பார்த்திருக்கலாம்.நிசமாகவே அழகிதான்.இளமையில் வெகு அழகாக இருந்திருப்பார்.முதுமை தனது தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது.அவர் இறந்துவிட்ட பிறகுதான் தாத்தாவின் புலம்பல்கள் அதிகமாகியிருந்தன.
வயதானவர்களின், பேச்சுகளைக் கேட்பதற்கே யாருமில்லை எனும்போது, பிறகு யார் அவர்களுக்காகப் பேசுவது?
மகள்கள் எப்போதாவது வந்து பார்த்துச் செல்வதுண்டு.
நாங்கள் விளையாடுமிடங்களில் வருவார்.அவராகவே வாளி எடுத்துவந்து இறுக்கிய கோவணத்துடன் அடிகுழாயில் அடித்துக் குளித்துவிட்டுப் போவார். ஒன்றிரண்டு முறை எதேச்சையாக நான் அடிக்க முனையும்போதும் மறுத்துவிடுவார்.
ஒரு காலத்தில் தனது மகனைத் தோளில் தாங்கிப்பிடித்திருந்த கைகள்,மகனுக்கு நுங்கு வேண்டுமென்பதற்காகப் பனைமரத்தில் பாசத்துடன் பிணைந்தேறிய கால்கள், இன்று தளர்ந்து நடுங்கும்போது தாங்குவதற்கு யாருமில்லை.
நான் கேட்பேன்."ஏன்.உங்கள நல்லாத்தானே பாத்துக்குறாக..?"
“அவ எங்க பாக்குறா?என்னாலதான் எல்லாமுன்னு என்ன அடிக்க வாராப்பா..! கேப்பாரில்ல..முடியாமக் கெடந்தாலும் பாக்க நாதியில்ல..ஆத்தாள நல்லாப் பாத்துக்கனும்பா…!"
நான் "ம்" என்று சிரித்தபடி தலையாட்ட காற்றோடு நடுங்கியபடி சென்றவர் , அடுத்த மாதத்தில் காலத்தோடு கலந்துவிட்டார்.இருந்த நிலங்களும்,சொத்துகளும் அவரது கட்டையை வேகச் செய்துவிட்டன. எனக்குக் கொஞ்சம் மகிழ்ச்சிதான்.ரொம்பவும் கிடந்து இழுபடாமல் இந்தமட்டில் அவருடைய அழகியைப் பார்க்கக் கிளம்பி விட்டார்.ஆனால், எனக்குதான் தாடையைத் தடவிக் கொஞ்சுவதற்கு ஒரு ஆள் குறைந்துவிட்டது.
ஆங்! சொல்ல மறந்தேனே! அவருடைய மருமகளான அந்தப் பெண்மணிக்கும் இரண்டு பையன்கள்.
லேபிள்கள்: அனுபவங்களும் ..இன்ன பிறவும்
பதிவன் என்பவன் யார்???

போன பதிவுல கொஞ்சம் ஓவராப் பேசிட்டதால நல்ல பிள்ளையா இந்தப் பதிவைக் கொடுத்திடறேன்.பதிவுல எந்த உள்குத்தும் இல்லைன்னு சொன்னா..
நீங்க என்ன நம்பவா போறீங்க??? மியூசிக் தொடங்கிருச்சா? ஓ.கே!
எப்படித்தான் பதிவெழுதுவது?
பத்திலோர் பதினொன்றாய்
....புத்தியை நீசெலுத்தி
பத்தியாய்ப் பதிவெழுதி
....பந்தியில் இட்டுவைக்க!
சித்திகள் உனக்குவரும்
....திட்டுகள் கூடவிழும்!
கலங்காதே அதைக்கண்டு!
....கவலையின்றி நீ எழுது!
எழுதியாச்சா ஓ.கே! அடுத்து என்ன செய்யனுமுன்னா.
தளராத மனமுடனே
....தலைவர்கள் பதிவுசென்று
தான்தோன்றித் தனமாகத்
....தனித்தெரிய பின்னெழுது!
சண்டைபோடத் தயங்காதே!
....சமத்துவங்கள் பேசிவிடு!
கொன்றிடுவார் தமிழைஅவர்
....கூறு!அவர் போல்வருமா?
அது மட்டும் பத்தாது!!அப்புறம் என்ன பண்ணனுமுன்னா..
எட்டுத்திக் கும்சென்று
....எழுதிஅவர் பதிவிணைக்க
கொட்டுமேளத் துடன்உன்னை
....குட்டிவாரி சாய்எடுப்பார்!
கண்ணீரை எழுதிவிடு!
....கவலைகளை உதறிவிடு!
பன்னீரோ! செந்நீரோ!
....பக்குவமாய்க் கடந்துவிடு!
பூக்களும் வரும்..சமயத்துல கல்லும் பறக்கும். பக்குவமா நாம ஒதுங்கிக்கிறதே அவ்வை பாணியில சொல்றதுன்னா"சாலச் சிறந்தது...!!!"
கடலுக்குள் மூழ்கியவன்
....கண்ணீரின் நிறம்சொல்வான்!
உடலுக்குள் மூழ்கியவன்
....ஒழுங்கிருக்க வழிசொல்வான்!
தேடவேண்டும்! தேடவேண்டும்!
....தேடிக்கொண் டிருக்கவேண்டும்!
தேடுதேடு! தேடுதேடு!
....தேடித்தேடித் தேறுதேறு!
தேடுனாக் கிடைக்காதது இந்த உலகத்துல இருக்கா என்ன?
"அன்பைத் தவிர!" . அதுனால நல்லாத் தேடுங்க. ஆனா,
அடுத்து வர்ரது தான் ரொம்ப முக்கியமானது!
தமிழுக்கோர் சிற்றழிவும்
....தன்னாலே நேருமென்றால்
தயவுசெய்து நிறுத்திவிடு!
....தலைவலியைத் துரத்திவிடு!
இயன்றவரை தமிழெழுதி
....இணையத்தில் புகுத்திவிடு!
முயன்றவரைக் கரையேற்ற
....முழுமூச்சாய் முனைந்துவிடு!
அறிவுர சொன்னது போதும் மகனே! பெரிசா பீலா விட்டியே!
பதிவன்னா யாருன்னு? அதச் சொல்லு!ஓ..பாட்டாவே கேட்டருறீங்களா?
பாடியதெல்லாம் சரிதான்!
....பதிவனென்றால் யார்கூறு?
பதிவனென்போன் யாரென்றால்?
....பதிவெழுதத் தொடங்கியே! ஓர்
பத்துமாதம் ஆனபின்னே!
....பதிவனென்றால் யாரென்றோர்
பதிவுதனை இடுபவனே
....பதிவனெனக் கொண்டிடுக!
அதிகமாய்ப் பேசிவிட்டேன்!
....அடிகள்கூட விழக்கூடும்!
தீந்தமிழால் திட்டென்றால்
....தேனெனவே பெற்றிடுவேன்!
அனைத்தையும் எழுதிவிட்டு
...."அப்பப்பா! அனைத்துமிங்கே!
விளையாட்டுக் கென்றுசொல்லி
....வினையில்லை என்றுமுடி!"
(*இது 50-ஆவது பதிவுன்னா.. அதற்காக இப்படியா?)
கவிதை(?) கொஞ்சம் சிறியதாகப்(?)போய்விட்டதில் வருத்தமே! இவ்வளவு சின்னக் கவிதையை யாரு முழுசாப் படிச்சுறப் போறாங்க? ;-)
அடுத்த பதிவு என்னன்னா???
*
காந்திஜியோட பையன் பேரு என்ன? தெரிஞ்சவங்க சொல்லலாம்?
யோசிங்க.. யோசிங்க..!
விடை கீ..ழே!
***********************************
“அண்ணே! மொய்தீன் அண்ணே!
நல்லா இருக்கீங்களாண்ணே”
“நல்லா இருக்கேம்ப்பா! நீ நல்லாஇருக்கியா?”
“நல்ல்ல்லா இருக்கண்ணே!வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?போன் எதுவும் பண்ணுணீங்களா?”
“இன்ஷா அல்லாஹ்!!!!! பண்ணுணேம்ப்பா!
நேத்துகூடப் பேசுனேன். எல்லாம் நல்லா இருக்காங்க.”
“சாப்பிட்டாச்சாண்ணே!”
“இல்லப்பா !”
“ஏண்ணே! மணியாச்சே!”
“ஆமாமா!”
“என்ன போங்க! இத்தன மணியாச்சு .இன்னுமா சாப்பிடாம இருக்குறது.”
“ம்ம்.”
“என்னண்ணே! என்ன வேலை இருந்தாலும் முதல்ல சாப்பிட்டுட்டு அப்புறம் பாருங்கண்ணே!
போங்கண்ணே முதல்ல!”
“தம்பி ! நான் நோன்புல இருக்கேன்!” - சொல்லிவிட்டு அவர் அகல,
(ஆகா! இது தெரியாமப் போச்சே!)
"உணர்ச்சிவசப்பட்டவண்டா தமிழன்!" என்று விரல்களை மடக்கி, பல்லைக் கடித்து கட்டைவிரலும், ஆட்காட்டிவிரலும் படுமாறு இதயப்பகுதியில்(என்னுடையதில்தான்!) ரெண்டு குத்துவிட்டேன்!
***********************************
தமிழ்ல இரண்டு வார்த்தைகளாக வரும் வாக்கியங்களைக் கொஞ்சம் மாற்றிப் போட்டால் கட்டளை போடுவது போல் வந்துவிடுமென்று நண்பர் விஷ்ணு சொன்னார்.
உதாரணத்திற்கு,
அவரையே முதலில் அழைத்துவிடுவோம்.
வீட்டுக்கு விருந்தாளி வருகிறார்.
அவரையே
"வாங்க.விஷ்ணு!" என்றால் எப்படி..
"விஷ்ணு. வாங்க!" என்றால் கட்டளை போல் மாறிருதுல்ல...
அவர் வரும்போதே ஒரு சைஸாக விழிக்க நேரிடும்.
"அதை எடுங்களேன்!" என்றால் கெஞ்சல்.
"எடுங்களேன் அதை!" என்றால் கொஞ்சல்(?!கட்டளை)
"உள்ளே உட்காருங்க!" , வெளில இருங்க! , சாப்பிட வாங்க!,
என இவற்றை எல்லாமே மாற்றிப் போட்டால் கட்டளை தான்!
***********************************
எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு அருமையான பெரிய கல் இருக்கிறது.அதில்தான் கிறுக்குவேன் சமயத்தில். இப்போது கணினி வந்தபிறகு எழுதுவது குறைந்துவிட்டது.
சரி! தமிழ்நாட்டில் நாம் சோழர்,பாண்டியர்,சேரர் என அனைவரைப் பற்றிய தகவல்களையும் எப்படி அறிய முடிகிறது.ஒவ்வொருவரைப் பற்றியும் செவிவழிச்செய்தியாகப் பல பாடல்கள் உள்ளபோதும் வரலாற்றுநோக்கர்களுக்கு அது போதுமானதாக இல்லை.கல்வெட்டுகளே மன்னர்களின் வரலாறுகளைத் தீர்மானிக்கின்றன. அவைகள் கூறுவதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு மன்னருடைய காலத்தையும் பொருத்திப் பார்த்து அறிய முடிகிறது. உதாரணத்திற்கு, ராஜராஜனைப் பற்றிய கல்வெட்டுகளை எப்படி அறிந்துகொள்கிறார்கள்?
"திருமகள் போல " எனத் தொடங்கும் அனைத்துக் கல்வெட்டுகளும் ராஜராஜனின் புகழ்பாடும் கல்வெட்டுகளே!
அவரது மகன் ராஜேந்திர சோழனது கல்வெட்டுகள் "திருவன்னி வளர" எனத் தொடங்கும்.
சரி! மன்னர்களெல்லாம் ஓ.கே. நம்மைப் பற்றிய தகவல்களையெல்லாம் வருங்கால வாலிப சமுதாயம் அறிந்துகொள்வது எப்படி?
அதற்குதான் முதலிலேயே சொன்னேன்.என் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள கல்லில் நான் கிறுக்கு(!?)வது.
***********************************
பாக்களில் ரதி நிறைத்த பாரதியோ சிறுவயதிலேயே பாவியற்றும் புலமையினால் பாரதி(கலைவாணி) என்ற பட்டம் பெற்றிருந்தான்
ஒருமுறை பாரதியின் பாப் புலமையை (ராக்.. இல்லங்க தமிழ்ப்பாட்டு!) சோதிக்க விரும்பிய சற்றே பொறாமையும் கொண்ட காந்திமதிநாதன் என்பார் பாரதி சின்னப்பயல் என இறுதியடி வருமாறு பாடக் கூறினார். எந்தத் தயக்கமுமின்றி பாரதி பாட்டிசைத்தான்.
கார்அது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்
பார்அதி சின்னப் பயல்
ஆப்பைக் கேட்டு அதில் அமர்ந்துகொண்டார் காந்திமதி! :)
சரிங்க! உங்களுக்கு அது தெரிஞ்சதுதானா?இன்னொரு தடவை படிக்கிறது நல்லதுதானே!
தமிழையும் சிறிது ஆங்கிலத்தையும் மட்டும் கலந்து பேசிவிட்டுத் தமிழ்மொழி இனிது ! இனிது!
என்றெல்லாம் நாம் சொல்வதில் பெருமையில்லை. பதினாறு மொழிகளைக் கற்றுத்தேர்ந்து அதில் பாவியற்றும் அளவிற்குப் புலமையுடன் விளங்கிய பாரதி சொன்னானே!
"தமிழ்மொழி அமிழ்தினும் இனியதென்று !"
அதுதான் சிறப்பு!
(எந்தக் கடை(கை)யில் அமிழ்தம் கிடைக்கும் என்று யாராவது சொன்னால், அதற்கு உபகாரமாக அவர்களுக்கும் இரண்டு துளி அமுதம் பகிர்ந்தளிக்கப்படும்.)
***********************************
காந்திஜியின் பையன் பேரு "தினேஷன்"
எப்படினு கேக்கறீங்களா?
அவர்தானே " ஃபாதர் ஆஃப் தி நேஷன்!"
(காந்தியவாதிகள் கோபிக்கக் கூடாது.தேசமே அவரது குழந்தைதான் என்றே இதை எடுத்துக் கொள்ளலாம்!)
***********************************
அடுத்த பதிவு என்னன்னா?அடுத்த பதிவுல தானே தெரியும்-ந்னு சொன்னா அவ்வளவு நல்லாயிருக்குதுல்ல! :) அதிரடி ரிலீஸ்!
பதிவன் என்பவன் யார்?
***********************************