புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

கபடி..! கபடி..! கபடி..!


(தலைப்பை கில்லி-ல கபடி ஆடும்போது கண்ணை உருட்டி, கட்டை விரலை ஆட்டி விஜய் சொல்வாரே அந்த மாதிரி படிங்க!)
(பக்க வாத்தியம் : நான் விஜய் விசிறி அல்ல!)

கபடி..!! அப்படியே மெல்ல மூச்சை இழுத்துக்கிட்டு கண்ணை மூடிசொல்லுங்களேன்!
இந்த வார்த்தை மந்திரம் மாதிரிங்க அப்ப எங்களுக்கு!
பெரிய பெரிய கபடி மேட்ச்செல்லாம் இரவு நேரத்தில் தான் ஊர்கள்ள தொடங்கும்!
கிலோ வாரியாக நடக்குற மேட்சுல 35 கிலோவுல தொடங்கி 45, 50, 60, அதுக்கு மேல ஓப்பன் டோர்(யார் வேண்டுமானாலும் விளையாடலாம்!) இந்த ஓப்பன் டோர்-வகையில் விளையாடுபர்கள் எல்லாம் உள்ளூர் அர்னால்டு ரேஞ்சுக்கு இருப்பார்கள்! இந்த கடோத்கஜன் டீமை சில நேரம் சின்னப் பையன்கள் நிறைந்த நாகேஷ் டீமிடம் கோத்துவிட்டு விடுவார்கள். அப்போது ஆடியன்ஸோட ஃபுல் சப்போர்ட்டும் அந்த சின்ன டீமுக்குத்தான்! அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு பாய்ண்டும் அப்ளாஸ்களை அள்ளும்!

எனக்கு என்னோட நண்பனுக்கும் ரோல்மாடலாக அப்போதைய சில கபடி வீரர்கள் இருந்தார்கள்!அவர்களுடைய அர்னால்டு சைஸ் தொடைகளைப் பார்த்துவிட்டு ஏக்கப் பெருமூச்சு விடுவோம்! உருக்கு மாதிரி உடம்பை வைத்திருப்பார்கள்! அந்த ஏக்கத்தில் நானும், நண்பனும் சுண்டக்கடலையை ஊற வைத்து தண்டால் எடுத்தகதைகளும் உண்டு.சும்மா ரெண்டு நாளைக்கு!ஆனால்,நீங்கள் தொடர்ந்து கபடி விளையாண்டால், உங்கள் உடல் கட்டாவதை(ரெண்டா இல்லீங்க!.. பழனிப் படிக்கட்டு!) நீங்களே நினைத்தாலும் தடுக்க முடியாது!

முதல்நாள் இரவு 9 மணிவாக்கில் தொடங்கி மறுநாள் சாயங்காலம் வரை கபடி நடக்கும்! நானும் , எனது நண்பனும் தலையில் ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்து விடுவோம்! ஹே..ஹே என்று கூட்டம் கூவக்கூவ நம்ம பசங்க சும்மா பின்னுவாங்க!
கிரேக்க அச்சிலஸ்,மகாபாரத கர்ணன் மாதிரி வீழ்த்தவே முடியாத வீரர்களெல்லாம் இருப்பாங்க! எப்புடிப் புடிச்சாலும் போயிடுறாண்டா..இவனை என்ன தாண்டா பண்ணுறது-ந்னு திகைக்க வச்சுருவாங்க சிலபேர்!தோள்பட்டைக்கு மேலே பறப்பாங்க!
சும்மா வில்லு மாதிரி வளைவாங்க..இன்னும் சில பேரு பீமன் மாதிரி மொத்த டீமையும் இழுத்துக் கொண்டு வருவார்கள்! நல்ல பார்வைத்திறனும், லாஜிக் புத்தியும் கபடிக்கு ரொம்ப அவசியம்!

*நடுவரின் தீர்ப்பே இறுதியானது!
*ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்!
*முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை!

இப்படி கபடி நோட்டீஸிலேயே கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் எதுவும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட மாட்டாது! 'இதுதான் உங்களுக்கு இறுதி அழைப்பு ' என்று இருபத்தாறு தடவை டீமை அழைத்துக் கொண்டிருப்பார்கள்!

ரெண்டு டீம் ஆடுதுன்னா ரெண்டு ஊருக்காரங்களும் மல்யுத்தம் போடுற மாதிரிதான்! ஏதாவது பிரச்சினைன்னா உடனே ரெண்டு ஊருப்பயபுள்ளைகளும் களத்தில் இறங்கி நடுவரிடம் சண்டைபோட்டுக் கொண்டிருப்பார்கள்! மைக்கில்- வெளியாட்கள் உள்ளே வர வேண்டாம்! நடுவரின் தீர்ப்பே இறுதியானது - என்பது காற்றினிலே வரும் கீதம் போலக் கரைந்து கொண்டிருக்கும்!

15-5-15 என்பதுதான் மேட்ச் டைமிங்!


இதில் 5 என்பது டைம்-அவுட் மற்றும் சைடு சேஞ்சுக்கானது.
ஆனா, பிரச்சினை வந்துச்சுன்னா சில மேட்ச் விடிஞ்சாலும் முடியாது!
முருகேசன் நினைவுக்குழு,
வெண்ணிலா கபடிக்குழு,
தேவரின் செல்வங்கள்,
பயமறியா தம்பிகள்..
இதெல்லாம் சில சுற்று வட்டாரக் கபடி டீம் பெயர்கள்!

கபடியில மைக் அறிவிப்புகள், சுவரொட்டிகள் எல்லாமே தூய தமிழில் என்பது ஒரு மகிழ்ச்சியான விசயம்!ரெடிமேடாக முந்தின நாளே வந்து முளைத்திருக்கும் கடைகள் நல்ல லாபம் பார்த்து விடுவார்கள்.மைக் செட்,லைட்ஸ், கொட்டகை, ஏன் பரிசையும் கூட அந்தந்த ஊரிலுள்ளவர்கள் அன்பளிப்பு அளித்து விடுவார்கள். அதுக்குப் பரிகாரமாக அவர்கள் பெயர் நோட்டீஸில் இருக்கும்!

எனக்கு சிறிய வயதில் கிரிக்கெட்டை விட கபடியில் தான் ஆர்வம் அதிகம். பள்ளிக்கூடத்துல பசங்க நோட்டீஸ் அடிக்க வசதியில்லைன்னா கையிலேயே முதல் காப்பி எழுதி அதை பிரதி எடுத்து பள்ளியெங்கும் ஒட்டி விடுவார்கள். சில சமயம் கையெழுத்துப் பிரதியிலேயே நோட்டீஸ் உருவாக்கிய சம்பவங்களும் உண்டு!நம்ம கையெழுத்து அழகாயிருக்கும்னு நம்மகிட்ட வந்து (நம்புங்க பாஸ்!) எழுதிவாங்கிட்டுப் போவாங்க. எழுதுறது மட்டும்தான் இவன் வேலை விளையாண்டதெல்லாம் இல்லைனு நினைச்சுறாதீங்க.
ஒரே ஒரு மேட்சுல சரியா 35-கிலோ இருந்தப்ப கபடி, கபடி-ந்னு நானும் இறங்கினேன். அந்த மேட்ச் பாதியிலேயே அடிதடி- யில நின்னுபோச்சு.
எல்லாரும் அடிச்சுக்கிட்டு நின்னப்ப நான் டென்ஷனாகி ஓரமாய் இருந்த டீக்கடையில போயி டீக் குடிச்சேன்.(வீரம்ப்பு..)

அதோ..ட சரி! மத்தபடி ஊருக்குள்ள விளையாடுவனே தவிர ஊரு விட்டு ஊரு போயி அடிவாங்குற வேலையே இல்ல! போனா நல்ல பிள்ளையா மேட்சு பாக்குறதோட சரி! வாய்ப்புக் கிடைச்சா,ஒரு தடவை கிராமத்துல போய்க் கபடி மேட்ச் பாருங்களேன்!
அது ஒரு தனீ... உலகம் பாஸ்!







கொஞ்ச(ம்) நீ என்னருகில் வாயேன்!!!!



சாம்பாருடன் கொஞ்சம் சோறு
சடுதியாட நிறை சேறு!
பாம்பாட்டி போலொரு ஆட்டம்!
பம்பரம் போல்சுழல் ஓட்டம்!
வீம்பாகத் தலைசாய்ப்பு, கோபம்
விளையாட்டாய்க் கொஞ்சலொடு சிணுங்கல்
தாம்பாலத் தட்டினிலே இனிப்பு
தகிக்காத வெயிலினிலே களிப்பு!

கள்ளமில்லா சிறார் வேணும்!
காலத்துக்கும் விளையாட வேணும்!
பள்ளமில்லா வாழ்க்கையும் வேணும்!
பயமின்றிப் பாடியாட வேணும்!
உள்ளத்தில் உருவாகும் நினைப்பு!
உயர்வாகி நலம்பெறவே வேணும்!
பள்ளிக்கு மீண்டும்நான் போயே
பாடமிரண்டு படித்திடவும் வேணும்!

குருவிபோல் வானத்தின் மீதே
குழந்தைநான் பறந்திடவும் வேணும்!
தெருவிலே நண்பனொடு அலைந்து
தேடிபழம் அடித்திடவும் வேணும்!
நல்லபிள்ளை யாயிருப்பேன் - அம்மா!
நலமாகச் சொல்கேட்பேன் - அம்மா!
கொஞ்சம்நீ என்னருகில் வாயேன்-மீண்டும்
குழந்தையாய் மாற்றிவிடு தாயே!

சின்னச் சின்ன சிந்தனைகள்! ( 4 )



௧, குருதி!

முள்பட்டவுடன்
முளைக்கிறது
ரோஜா.!

*************

௨, ச்சே..!!

காலை மிதித்தவனிடம்
பாய்ந்தேன் சண்டைக்கு...
கண்ணீரோடு காண்பித்தான்
கட்டைக்கால்.!

*************

௩, ரோசம்!

வீட்டைப் பறித்தவனை
விட்டு வைப்பதில்லை..
தேனீ..(கூட)..

*************

௪, மரியாதை..

விடமற்ற பாம்புக்கும்
நகமற்ற புலிக்கும்
இல்லை..

*************

௫, அப்புறம் வேற என்ன?
நீங்கதான் ஏதாவது சொல்லனும்!
வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?
:)

போன தலைமுறை வரை அனைவரும் உபயோகம் செய்த தமிழ் எண்களை கூகிளில் எங்கெங்கோ தேடிப்பார்த்துவிட்டு கடைசியில் இங்கிருந்துதான் சுட்டேன்!மேலும்,சுடுவதற்கு->
http://thangaththamil.blogspot.com/2010/03/blog-post_24.html

சின்னச் சின்ன சிந்தனைகள்! ( 3 )



முன் குறிப்பு:
** படத்துக்கும் கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை!

1,எப்புடி!!!!!

அதோ..பாருங்கள்..!
தூ...ரத்தில்!
சிறகுவிரித்துப் பறக்கிறது…
- -
உங்கள் சிந்தனை..!
(எனது கற்பனையும்)
:)

**********

2,நினைவிருக்கட்டும்!

துரத்திக்கொண்டேயிருக்கிறது
ஒவ்வொருவரையும்
குறிப்பிட்ட தூரத்தில்
மரணம்..!

*********

3,பனித்துளி!

சிலநொடி
நேரமாயினும்
சூரியனை எதிர்க்கும்
தைரியம்..!

*********

4,வீண்!

ஓரிடத்துச்செல்வம்
உதவுவதில்லை
யாருக்கும்..
கடல்நீர்!

***********


அம்புட்டுதேன்..!!!!!!

நாம் எதையோ இழந்துகொண்டிருக்கிறோமோ.!!



கார்த்திகைப்பனி, காகிதக்கப்பல்கள், கொட்டும்மழை நனைதல்,கபடி, பட்டை..என்று பலவற்றை இப்போதுள்ள பிள்ளைகள் இழந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்!
தங்களது பிள்ளைகளுக்கு டைட் செடியூல் இருப்பதை பெருமையாகக் கருதுகிறார்கள் பெற்றோர்கள்.அதிலும் அப்பா, அம்மா என்று அழைப்பதை விட மம்மி, டாடி என்று அழைத்தால்தான் பிள்ளைகளுக்கு சோறு ஊட்டுகிற வீட்டையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். தமிழ் என்ன அப்படி தப்பு செய்தது??தமிழைப் பற்றி ஒரு கருத்து..எங்கே படித்தேன்.? நினைவில்லை..
அவர் சொல்லியிருந்தார்,

' எனக்கு முந்தைய தலைமுறையில் 'மாடு கன்னு ஈனியது' என்றார்கள்.
என் தலைமுறையில் 'மாடு கன்னு போட்டது' என்கிறேன்.
எனது பிள்ளைகள் 'மாட்டிற்கு டெலிவரி' என்கிறார்கள்.
'

இவரது கருத்து ஏற்புடைய ஒன்றே.
மாட்டுக்கு மட்டுமா டெலிவரி-ந்னு நாம சொல்றோம்.விடுங்க, அடுத்த நூற்றாண்டுல மாடே இருக்காது. மனிதன் மட்டும் இருப்...??
க்ளோனிங் -ல மாடு மாதிரி மனிதனும் கண்டுவிடுவார்கள் என்று சொல்ல வந்தேன்.
சரி.. இப்போ கொஞ்சம் சொந்தக்கதை..
எங்களூர்களில்,
வீட்டிற்கு முன்புள்ள பரந்த தரையில் தான் நெல், தானிய வகைகளையெல்லாம் காயப் போடுவார்கள்.இதைப் பாண்டிய நாட்டில் கட்டுத்தரை என்று கூறுவார்கள்!
எங்கள் ஆயா காலத்தில் காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து கட்டுத்தரை கூட்டி,சாணமிட்டு, கம்பிக்கோலமெல்லாம் போட்டு நாம் விழிக்கும்போது லெட்சுமி முகத்தில் விழித்தது போலிருக்கும்.
(கவனிக்க: லட்சுமி என்ற பெயரில் எங்கள் வீட்டுக்கு அருகில் எந்தப் பெண்ணும் இல்லை.!!)

என் அம்மாவுடன் கூடப்பிறந்தவர்கள் 3 தம்பிகள்!
மூவருக்கும் முறையே 3 ஆண்டு இடைவெளிகளில் திருமணம் முடிந்து விட்டது. எங்களது 3 அத்தைகளும் வந்த பிறகு ஒரே வருடத்தில் இந்தியா மேப் அளவிற்கு இருந்த இந்தக் கட்டுத்தரை சுருங்கி இலங்கைத்தீவு போலாகிவிட்டது.(இப்போது இன்னும் சுருங்கி ராமேஸ்வரம் ரேஞ்சுக்கு ஆகிவிட்டது வேறு விஷயம்.!)
ஐயா இருந்தபோது செழுமையாயிருந்த தோட்டங்கள், தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்படாததால், முட்களிருந்தாலும் எனக்கு அருமையான நார்த்தம்பழங்களை தந்து கொண்டிருந்த மரங்களெல்லாம் பட்டுப்போனது வேறு சோகக்கதை.13,15,17 என்று நான் எண்ணுவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த கட்டுத்தரையிலிருந்த மாடுகள் காலாவதியாகியிருந்தன.நாய்களைக் கூட தேடவேண்டியிருக்கிறது.
(ஐயையே..என்ன இது! ஒரே அழுகாச்சியா இருக்கு..!
காலம் மாறிருச்சு தம்பி!)
ஊர்களில்
வேட்டைக்கென்றே வைத்திருந்த நாய்களெல்லாம் தேவையில்லாத அளவிற்கு இன்று மனிதர்கள் மாறியிருக்கிறார்கள். ஊரோடு 'பாரிவேட்டை ' என்று கிளம்பிப்போய் கிடைத்ததைப் பங்கு போட்ட பங்காளிகளெல்லாம் மறைந்து போய் இன்று மழைத் தண்ணீர் ஒழுங்குபடுத்தலுக்காக எல்லோரும் பகையாளிகளாக மாறியிருக்கிறார்கள்!கல்யாண வீட்டுக்கு சொல்லியும் செல்லாவிட்டாலும், கருமாதி வீட்டுக்கு சொல்லாமல் சென்ற 'ரோசங்களும், பாசங்களும்' மறைந்து விட்டன.

தாவரமுள்வேலிகள் முன்பு வீடுகளைப் பிரித்தன. அதனூடே தெரிந்த இடைவெளியில் மக்கள் தங்கள் முகம் பார்த்து பேசிக் கொள்வார்கள்!இப்போது எடுக்கப்பட்ட காம்பவுண்டு சுவர்களைத் தாண்ட மனமின்றி எப்போதும் ஏதாவது சத்தமென்றால் கிளைமாக்ஸ் காட்சி எதிர்பார்த்து மட்டும் நல்லபாம்பு போன்ற தலைநீட்டல்களும், தனக்கு தொலைக்காட்சியின் நெடுந்தொடரில் ஏற்பட்ட கவனக்கலைப்புக்கான 'உச்' கொட்டல்களிலுமே மு(ம)டிந்துவிடுகிறது நமது மனிதாபிமானங்கள்!

இருங்கள் ஏதோ வெளியில் சத்தம் கேட்கிறது! நான் முகம்பார்த்தே விசாரிக்கிறேன்!
எங்கள் வீட்டில் வேலிதான்(காம்பவுண்டு அல்ல!)
'ப்ச்' "மனிதர்கள்... ஏழைகளாகவே இருந்திருக்கலாம்!"
பேருந்துகளில் விபத்துகளைப் கணநேரம் பார்த்து "ச்சு' கொட்டிச் செல்லும் அளவிற்கு நமது மனித அபிமானம் உயர்ந்திருக்கிறது!
எதையெதையோ செய்ய நினைத்து எதையுமே செய்யாமல் முடிவதுதான் வாழ்க்கை! - ன்னு பிளேடேவோ யாரோ ஒரு அறிஞர் சொன்னார்.அதே மாதிரிதான், எதையெதையோ சொல்ல நினைத்து எதையும் சொல்லாமல் நம்ம கட்டுரையும் முடிகிறது!தவறிருந்தால் சுட்டுங்கள்! அல்லது குட்டுங்கள்!
(கை பத்திரம்! வல்லாரை லேகியத்தை வளைத்துத் தின்ற உடம்பு!)

கடைசியா ஒரு குட்டிக்கவிதை..

உலகில்,
அதிகரித்துக் கொண்டே போகிறான்..
மனிதன்!
குறைந்துகொண்டே போகிறது..
மனிதம்!


உண்மைதானா??

சின்னச் சின்ன சிந்தனைகள்!


நம்ப ஏழைப்பங்காளர்களை நினைத்தா ஒரே


கருத்துமழைதான் போங்க..!


**************************************



சாதிக்கு


ஒரு கட்சி..!


தேதிக்கு


ஒரு கட்சி..!


வீதிக்கு


ஒரு கட்சி..!


. . .


நீதிக்கு..??


*************************


.சி..


வண்டிகளில்


ஏழைப்பங்காளர்களின்


பரப்புரைகள்..!


************************


உழைக்க


வழியில்லை..!


பிழைக்க


மட்டுமே வழி..!


அரசியல்!


*****************************


சேவல்


கூவுவதால்


விடிவதில்லை


பொழுதுகள்!


அரசியல்வாதியின்


ஆணைகள்..!


********************************* 


 

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2011 (4)
    • ▼  மார்ச் (1)

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!