புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

அழகி!!!!
ழகிஅழகி! என்னய இப்புடி ஒத்தயில விட்டுப்புட்டு போயிட்டியே அழகி!
என்னால முடியலத்தா ..மறுபடியும் வருவியா?? இல்லாட்டி என்னயுங் கூப்புட்டுக்க.. அங்கயே நானும் வந்துர்றேன்!”


நாங்கள் தோட்டத்தில் ஆயில் மோட்டார் போட்டு நீரைக் காய்கறி,கீரைகளுக்குப் பாய்ச்சுவதுண்டு.அருகிலேயே மற்றுமொரு தோட்டம்.அதில் ஒரு கிழவர் தள்ளாத 85 வயதுகளில்.காற்றடித்தால் விழுந்துவிடும் தேகம்.குழிவிழுந்த கண்களின் வழியே பார்வை தேடும் தோற்றம்.கைகால்கள் நடுக்கமுற்றிருந்த போதும் யாரிடமும் கையேந்தாத வைராக்கியம்.

அந்த நிலையிலும் ஏற்றம்போட்டு இறைத்துதான் தனது கீரைகளுக்கு நீர் பாய்ச்சுவார். ஒரு காலத்தில் கடுமையான உழைப்பாளியாய் இருந்திருப்பார்.இன்றும்!அவர் அந்தக் கீரைகளை எங்கும் விற்று நான் பார்த்ததில்லை.பிள்ளைகள் போல வளர்த்துவந்தார் அல்லது அவர் விற்கும்போது அந்த முதுமையை சகித்து யாரும் அவரிடம் வாங்குவதில்லை என நினைக்கிறேன்.சில தென்னம்பிள்ளைகளும் அங்கு இருந்துவந்தன.எங்கள் தோட்டத்தில் பாதியளவு இருந்தபோதும் அந்தத் தோட்டம் சரியாகப் பராமரிக்கப்படாமல் வேலியடைக்காமல் இருந்து வந்தது.

சில சமயங்களில் அவரது தோட்டத்தில் இருந்து விசும்பல்கள் கேட்கும்.மேற்குறிப்பிட்ட வாக்கியங்களுடன்! மனது ஒரு மாதிரி வெறுமையில் புகுந்து, வேலை கவனமற்றுப் போய்விடும்.
ஆனாலும்,அந்த சிறிய வயதுகளில்,
"அந்தத் தோட்டம் சண்டக்காரருட்டு..!" என்றே என்னை வீட்டில் சொல்லிவைத்திருந்தார்கள்.
ஆனால், நான் எப்போதாவது வெளியில் வீதிகளில் சைக்கிள் டயர்களை உருட்டித் திரியும்போது யாருமற்ற வீதிகளில் அவரை சந்திக்க நேரிடும்.நெற்றியில் கையூன்றி என்னை நோக்குபவர்...
"ஆரு..செந்தாமர மகனா?நல்ல புள்ளடா ஒங்காத்தா!" என்று என்னைத் தாவங்கட்டை வழித்துக் கொஞ்சுவார். அந்தக் கண்களில் கருணையும்,ஒருவிதப் பழைய கிராமத்து மனிதர்களுக்கே உரிய வெள்ளந்தியான புன்சிரிப்பும் , அருகாமையும் கலந்திருக்கும்.

சண்டைக்காரர் என்று சொல்லிவிட்டதால் எதுவும் பேசாமலேயே வேகமாகத் தலையசைத்து அப்போது கடந்துவிடுவேன்.ஆனால், அவர் கொஞ்சிய வாசம் மனதினுள்ளேயே மணத்துக் கொண்டிருக்கும்.

பின்னொரு நாளில் நான் விசாரித்த போது தெரிந்தது.அவருடன் எந்த சண்டையும் இல்லை.அவருக்கு ஒரு மகனும், இரண்டு பெண்களும் உண்டு.மூவருக்கும் திருமணமாகி,மகன் வெளிநாடு போக,மருமகள் மாமனாரை அக்கறையாகக் கவனித்துக்கொண்டதால்(?), அவர் தனியே சமைத்து உண்ணவேண்டியதாயிற்று அந்தத் தள்ளாத வயதிலும்.மகனும் ஏனென்று கேட்கவில்லை.
இந்தப் பெரிய மனிதர்களுக்கெல்லாம் வார்த்தைதான் முக்கியம்.அன்பிற்காக எதையும் தாங்குவார்கள்.ச்சீ..என்று நாக்கில் பல்போட்டு சொல்லிவிட்டால் செத்தாலும் அந்தப்பக்கம் தலைவைத்தும் படுக்க மாட்டார்கள்.இவரோடு பேசுபவர்களுடன் மருமகள் சண்டைக்குப் போக,என் வீட்டுக்காரர்கள் பயந்த காரணம் புரிந்தது.

நான் விவரமறிந்த பின்னாட்களில் அவரைக் காணும்போதெல்லாம் என்னை வாஞ்சையாக அழைத்துப்பேசுவார்.வழக்கம்போலவே, "ஆரு! செந்தாமர மகனா..?" என அழைப்பதில் காற்றோடு சேர்த்துக் கொஞ்சம் சத்தமும் வரும்.அதுவே எனக்குப் போதுமானதாகவும் இருந்தது.அவருக்குக் காதும் சற்று மந்தமாகையால், நான் கைகளாலும், முகபாவனைகளாலும் சைகையாகக் கேட்பதற்கெல்லாம் ஆர்வமாய் பதில் சொல்வார்.நான் அவரைப் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பேன்.யாரும் கிழவர்களுடைய பேச்சுகளைக் கேட்பதில்லை.அதனால், தன்னில் உள்ளதனைத்தையும் என்னிடம் கொட்டுவார்.
"இம்புட்டுக் கஞ்சி ஊத்தமாட்டேங்குறாக..! எம்புட்டு சாப்புடுவேன்? எம்புட்டோ ஒழச்சேன்.அவ இருந்திருந்தா இந்தக் கதி எனக்கு வந்திருக்குமா?"

அவர் கண்களில் ஒருவித ஆற்றாமையுடன் கூறும்போது, சொல்ல முடியாத துக்கமொன்று தொண்டையிலிருந்து ஆக்கிரமிக்கத் தொடங்கும்.அவர் கூறுவதனைத்தையும் கண்களில் நீர்மறைத்து மெலிதான புன்னகையுடன் கேட்டுக்கொள்வேன்.கண்டிப்பாக என் உள்மனம் நிசப்த விளிம்பில் கிடந்து நாறும்.ஆனால், அவர் கூறுவதைக் கேட்டுக்கொள்வதைத் தவிர, அவர் துக்கத்திற்கு ஒரு வடிகாலாக இருப்பதைத் தவிர, ஏதும் உதவிகள் செய்ய முடியாத சிறிய பையனாகவே நான் இருந்தபோதும் என்னிடம் கொட்டுவதில் அவருக்கு ஒரு ஆறுதல்.

அவருடைய மனைவியான அழகியை நான் பார்த்திருக்கிறேன். ரவிக்கையணியாமல் கொண்டை போட்டுப் பெரிய காதுகளில் பப்படம் தொங்க இறுகிய முகத்துடன் இருப்பார்.ஒருவேளை சிரிக்காத நேரங்களில் நான் பார்த்திருக்கலாம்.நிசமாகவே அழகிதான்.இளமையில் வெகு அழகாக இருந்திருப்பார்.முதுமை தனது தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது.அவர் இறந்துவிட்ட பிறகுதான் தாத்தாவின் புலம்பல்கள் அதிகமாகியிருந்தன.

வயதானவர்களின், பேச்சுகளைக் கேட்பதற்கே யாருமில்லை எனும்போது, பிறகு யார் அவர்களுக்காகப் பேசுவது?

மகள்கள் எப்போதாவது வந்து பார்த்துச் செல்வதுண்டு.
நாங்கள் விளையாடுமிடங்களில் வருவார்.அவராகவே வாளி எடுத்துவந்து இறுக்கிய கோவணத்துடன் அடிகுழாயில் அடித்துக் குளித்துவிட்டுப் போவார். ஒன்றிரண்டு முறை எதேச்சையாக நான் அடிக்க முனையும்போதும் மறுத்துவிடுவார்.
ஒரு காலத்தில் தனது மகனைத் தோளில் தாங்கிப்பிடித்திருந்த கைகள்,மகனுக்கு நுங்கு வேண்டுமென்பதற்காகப் பனைமரத்தில் பாசத்துடன் பிணைந்தேறிய கால்கள், இன்று தளர்ந்து நடுங்கும்போது தாங்குவதற்கு யாருமில்லை.

நான் கேட்பேன்."ஏன்.உங்கள நல்லாத்தானே பாத்துக்குறாக..?"
“அவ எங்க பாக்குறா?என்னாலதான் எல்லாமுன்னு என்ன அடிக்க வாராப்பா..! கேப்பாரில்ல..முடியாமக் கெடந்தாலும் பாக்க நாதியில்ல..ஆத்தாள நல்லாப் பாத்துக்கனும்பா…!"

நான் "ம்" என்று சிரித்தபடி தலையாட்ட காற்றோடு நடுங்கியபடி சென்றவர் , அடுத்த மாதத்தில் காலத்தோடு கலந்துவிட்டார்.இருந்த நிலங்களும்,சொத்துகளும் அவரது கட்டையை வேகச் செய்துவிட்டன. எனக்குக் கொஞ்சம் மகிழ்ச்சிதான்.ரொம்பவும் கிடந்து இழுபடாமல் இந்தமட்டில் அவருடைய அழகியைப் பார்க்கக் கிளம்பி விட்டார்.ஆனால், எனக்குதான் தாடையைத் தடவிக் கொஞ்சுவதற்கு ஒரு ஆள் குறைந்துவிட்டது.

ஆங்! சொல்ல மறந்தேனே! அவருடைய மருமகளான அந்தப் பெண்மணிக்கும் இரண்டு பையன்கள்.

8 கருத்துகள்:

வெறும்பய 12 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:24  

மனதை நெருடியது...

நகரங்களில் முதியோர் இல்லங்கள் என்றால் கிராமங்களில் இந்த மாதிரி தோப்புகள் தான் அவர்களுக்கு அடைக்கலம்... தனக்கும் முதுமை வரும் என்று அறிந்தும் இது போல செய்வபர்களை காலம் தண்டிக்கும்...

##ஆங்! சொல்ல மறந்தேனே! அவருடைய மருமகளான அந்தப் பெண்மணிக்கும் மூன்று பையன்கள். #### இந்த வரிகள் ஆறுதல் அளித்தன...

வெறும்பய 12 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:27  

மருமகள் மாமனாரை அக்கறையாகக் கவனித்துக்கொண்டதால், அவர் தனியே சமைத்து உண்ணவேண்டியதாயிற்று அந்தத் தள்ளாத வயதிலும்.மகனும் ஏனென்று கேட்கவில்லை.

//

இந்த வரிகளை சரி பாருங்கள்... கொண்டதால் (அல்லது) கொள்ளாததால்..

அண்ணாமலை..!! 12 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:28  

அவராகினும் இந்தத் தலைமுறையில் தாத்தா போலில்லாது நன்றாயிருக்கட்டும் நண்பரே!

அண்ணாமலை..!! 12 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:33  

கவனித்துக்கொள்ளாததைத்தான் அப்படி வேண்டுமென்றே எழுதினேன் நண்பரே!
:)
(வஞ்சப் புகழ்ச்சியாம்!)
இப்போது ஒரு (?)குறியீடு அங்கே சரிசெய்துவிட்டது என நினைக்கிறேன்!

Chitra 12 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:51  

வயதானவர்களின், பேச்சுகளைக் கேட்பதற்கே யாருமில்லை எனும்போது, பிறகு யார் அவர்களுக்காகப் பேசுவது?


.......வலிக்கும் உண்மை.

அண்ணாமலை..!! 13 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:26  

உண்மையோ உண்மைங்க!!!

Ananthi 15 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:54  

//ஒரு காலத்தில் தனது மகனைத் தோளில் தாங்கிப்பிடித்திருந்த கைகள்,மகனுக்கு நுங்கு வேண்டுமென்பதற்காகப் பனைமரத்தில் பாசத்துடன் பிணைந்தேறிய கால்கள், இன்று தளர்ந்து நடுங்கும்போது தாங்குவதற்கு யாருமில்லை.//

உண்மையில் அட்டகாசமா எழுதி இருக்கீங்க.. இந்த வரிகள் படிக்கும், போது மனதிற்கு ரொம்ப சங்கடமா இருந்தது... ஹ்ம்ம்..

அண்ணாமலை..!! 15 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:52  

ரொம்ப நன்றிங்க!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!