*
ராஜனும்,ராமுவும் நண்பர்கள்.எங்கும் ஒன்றாகவே செல்வார்கள்.
இணைபிரியாத நண்பர்களான அவர்கள்,
பிறிதொரு நாளில் பிரிந்தார்கள் மனக்கசப்பால்..
மீண்டும் ஒருநாள் இணைந்தார்கள்.
பக்கத்து பக்கத்துக் கல்லறைகளில்..
(வாழும் காலம் கொஞ்சம்!)
******************************
கையினில் சினேகமாய் ஊர்ந்து விளையாடியது எறும்பொன்று.
தட்டிவிட்டு தேடிச்சென்று செருப்பால் தேய்த்தேன்.
"அப்பாடா! காலில் படவில்லை!"!
தலையில் நசுங்கல்பட்டு செத்திருந்தது.
எறும்பும் கூடவே..
காருண்யமும்!
******************************
2 வாழைப்பழம் வாங்கிவரச் சொன்னேன்.1-மட்டும் வாங்கி வந்தான்.
"எங்கே?வாழைப்பழம்?" என்றேன்.
"இதுதான் அது" என்றான். குழப்பம்.
இது எப்படி அதுவாகும்.
இப்பழம் சிவப்பாய்,உருண்டையாய் இருக்கிறது.
இல்லை.இது இன்னும் குழப்பமான கதை.
******************************
அனிதாவும்,கார்த்திக்கும் காதலித்தார்கள்.அவளுடைய மாமனுக்கு இது தெரிந்து விட்டது.
கையில் அரிவாளுடன்.."ஹேன்ட்ஸ் அப்! யூ ஆர் அண்டர் அரஸ்ட்!
உங்களை நாங்க இப்ப கைது பண்ணப் போறோம்!..."
மன்னிக்கவும்..!"அலைகள் ஓய்வதில்லை" படத்தில், பில்லா போலீஸ் மேஜர் சுந்தர்ராஜனின் கிளைமாக்ஸ் வந்துவிட்டது.
*******************************
"உன்னால் முடியும் தம்பி.. தம்பீ!!!!!!" எங்கோ ரேடியோவில் பாடல் தன்னம்பிக்கையுடன்.
"டேய்! இது உன்னால முடியலேன்னா எதுக்குடா வர்றீங்க..!முயற்சி இருக்கனும்டா!"
"டேய்.சும்மா இரு! இந்த உலகத்துல முடியாதது எதுவுமே இல்ல!"
"ஹி..ஹி..பார்க்கத்தானே போறேன் உன்னோட திறமைய."
"இந்தா என்னால முடியலாட்டி நீ என்னான்னு கேளு..நீ ஊத்துடா!"
6-ஆவது ரவுண்டுக்கு சியர்ஸ் சொல்லி அவனைத் தயார் செய்தார்கள்.
பாட்டு எங்கோ கரைந்தது. "உன்னால் முடியும் தம்பி.தம்பீ(ர்)!!!!!
****************************************
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே- இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!!!!"
டேய்! யாருடா இது? ஃபங்சன் நடக்குற பள்ளிக்கூடத்துல இந்த மாதிரிப் பாட்டுப் போடுறது.மொதல்ல நல்ல கலக்கலாப் பாட்டுப் போடுங்கப்பா!பசங்களுக்கு ரிகர்சலுக்கு எடைஞ்சலா இருக்காம்!
குழந்தைகள் ஆர்வத்துடன் ரிகர்சல் செய்ய..பெற்றோர்கள்
ஆர்வக்கோளாறுகளுடன் கைதட்டினார்கள்.அருந்தமிழ்ப்பாட்டு..
"டாடீ..மம்மீ...வீட்டில் இல்ல!
தடபோட யாருமில்ல!"
(வாவ்..! வெளங்கிரும்!)
**************
பி.கு:
* சும்மா ஒரு முயற்சிதான்! என்னவாயிருந்தாலும் சொல்லுங்க.
மெக்கானிக்க வச்சாவது சரிபண்ணிரலாம்!
5,6 வரிச் சிறுகதைகள்!
சில நல்லவர்களைப் பற்றி!
காங்கிரஸில் அந்த மாமனிதர் உறுப்பினராயிருந்த காலம்.
கிடைத்த குறைவான சம்பளத்தில் குடும்பத்தை ஓரளவு மனநிறைவுடனே அந்தத் தம்பதியினர் ஓட்டி வந்தார்கள்.
அந்த மாமனிதரின் மனைவிக்கோ ஒரு சிறிய நகை வாங்கிவிட வேண்டுமென்று வெகுநாளைய ஆசை.கேட்டாலும் "ஆகட்டும் பார்க்கலாம்!" என காமராஜர் போல சொல்லிவந்தாரே அன்றி அந்தக் கணவர் அந்நினைப்பை ஏறெடுத்தும் பார்த்தாரில்லை.
பொறுத்துப் பொறுத்துப்பார்த்த மனைவி ஒருநாள் கணவனை அழைத்தவர்
"நீங்கள் ஒன்றும் எனக்கு அதனை வாங்கித்தர வேண்டாம்.நானே வாங்கிக்கொள்வேன்.
என்னிடம் கொஞ்சம் பணமுள்ளது " என்று கணவனிடம் காண்பித்தார்.
"உனக்கு எப்படிக் கிடைத்தது இந்தப் பணம்"? என்றார் அந்தக் கணவர்.
மாதந்தோறும் நீங்கள் தரும் சம்பளத்தில் குடும்பச்செலவு போக..மீதப் பணத்தை சேர்த்து வைத்துள்ளேன்.உங்களின் 120 ரூ சம்பளத்தில் 90 ரூபாயைக் குடும்பச்செலவு போக மீதம் 30 ரூபாயை சேமித்தேன்.அதில் வந்த தொகைதான் இது என்று காண்பித்தார்,கணவர் தனது சேமிப்புத்திறனைப் பாராட்டுவார் என்ற நோக்கில்.
அந்த மாமனிதர் உடனே ஒரு கடிதம் எழுதினார் தன்னுடைய காரியாலயத்திற்கு,
என்னுடைய குடும்பத்தை நடத்துவதற்கு 90 ரூபாயே போதுமானதாக உள்ளது.ஆனால்,நீங்கள் எனக்கு 120ரூ சம்பளம் அளிக்கின்றீர்கள்.எனவே அடுத்த மாதத்திலிருந்து அந்த 30 ரூபாயைக் குறைத்து எனக்கு சம்பளம் வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.மேலும்,
இதுவரை எனக்களித்த அந்த 30 ரூ அதிகப்படி சம்பளத்தை மொத்தமாக இந்தக் கடிதத்துடன் அனுப்பி வைத்துள்ளேன்!"
இப்படி அனுப்ப , அந்த மனைவி என்ன நினைத்திருப்பாள்?
அந்த மாமனிதர் திருமிகு.லால்பகதூர்சாஸ்திரி அவர்கள்.
*****

ப.ஜீவானந்தம் என்பவர் அந்நாளைய புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்.
ஒருமுறை அகில இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு மூட்டையுடன் ஊருக்கு வரும் வழியில்,
அவரைக் கண்ட நண்பர்.
"என்ன ஜீவா? வெயிலில் இப்படி வருகிறீர்களே?"
எனக் கேட்டுவைக்க,
"கட்சிக்கூட்டம் முடிச்சிட்டு இப்பத்தான் வர்ரேன்."
"ரொம்ப சோர்வா இருக்குறீங்களே! சாப்பிட்டாச்சா?"
"இல்லைப்பா! ரொம்பப் பசியாத்தான் இருக்குது! ஆனா, கையில காசு இல்லை.அதான் வீட்டுல போயி சாப்பிட்டுகுறேன்!"
"ஏங்க அப்படி? அது என்ன கையில மூட்டை?"
"ஓ!இதுவா? இது கட்சிக்காக தொண்டர்கள் திரட்டிக்குடுத்த நிதிப்பணம்"
"அதுல கொஞ்சம் எடுத்து சாப்பாடு வாங்கிட்டு பிறகு வைத்துவிடலாமே!" என நண்பர் கேட்க..
"ஐயையோ! இது கட்சிக்காகத் தொண்டர்கள் கொடுத்த நிதி! இதைத் தொடக்கூடாது.நான் வீட்டுலயே போயி சாப்பிட்டுக்கிறேன்."
எனக் கூறிவிட்டு நண்பர் அழைத்ததற்கும் மறுத்து தன்வழியில் பயணமானார் அந்தத் தன்னலமற்ற தலைவர்.
*****

கன்னியாகுமரியில் சிற்றாறு அணைக்கட்டுத் திட்டத்தை செயல்படுத்தினார் கர்மவீரர்.உடனே ரப்பர் தோட்ட முதலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து காமராஜரை சந்தித்தனர். ஒரு கோரிக்கையுடன்,
"இங்கு அணை கட்டப்பட்டால் ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவுள்ள இந்த ரப்பர் தோட்டங்கள் எல்லாம் பாழாகிவிடும்.அதனால், அணைகட்டும் திட்டத்தைக் கைவிட்டு விடுங்கள்" என்றும் கூறினார்கள்.
காமராஜர் அவர்களை நிதானமாகப் பார்த்துவிட்டுச் சொன்னார்.
"அரிசிக்குப் பதிலாக நீங்கள் கூறுகின்ற இந்த ரப்பரைத் தின்றே மக்களெல்லாம் உயிர் வாழ முடியுமென்றால் சொல்லுங்கள். அணைக்கட்டுக்கான திட்டத்தைக் கைவிட்டுவிடுகிறேன்!"
"நாடு பார்த்ததுண்டா? இதுபோல் தலைவரை நாடு பார்த்ததுண்டா?"
என்றுதான் தோன்றுகிறது.
********************************
நன்றிகள்!
லேபிள்கள்: அனுபவங்களும் ..இன்ன பிறவும்
எனக்கு மட்டும்தான் இப்படியா? (பேருந்துகளில்!)

பேருந்துகளாலும், பேருந்துக்குள்ளும் ஏற்படும் சிற்சில அனுபவங்கள் மற்றும் தொல்லைகள் கீழ இருக்குங்க! படிச்சு மனசைத் தேத்திக்குங்க!(ஒப்பிட்டுக்குங்க!)எனக்கு மட்டும்தான் இப்படியா? இல்ல, எல்லாருக்குமே இப்படித்தானா?
1. 8.50 - க்கு வர்ற பேருந்துக்கு நாம ஒரு நாள் 8.51 க்குப் போனாலும் கரெக்டா வெள்ளக்காரன் மாதிரி 8.50-க்கே அந்தப் பேருந்து போயிருக்கும்.ஆனா,
அதே பேருந்து நாம வழக்கமா 8.40 - லயிருந்தே கொடுமையாக் காத்திருந்தாலும் 8.59 வருவானே ஏன்?
2. நாம பேருந்துக்காகக் காத்திருக்கும்போது மட்டும் நாம போக வேண்டிய பேருந்து வராம , நமக்கு எதிர்த்திசையிலயே பேருந்து வரிசையாப் போயிட்டிருக்குமே? ஏன்?
3.அடிச்சுப் புடிச்சு பேருந்துல ஏறி சீட்டுப் போட்டு உட்கார்ந்துட்டாலும் வயதானவரோ,குழந்தையுடன் வருபவரோ(நாம சீட்டுக் கொடுப்போம்தான்!)அத்தனை பேர் இருந்தாலும், சரியாகக் கருணை மணியான நம்மை அப்ரோச் செய்வது ஏன்?
4. இன்னும் சிலபேர் கொஞ்சம்கூட கருணை இல்லாம அழுகிற குழந்தையை பயமுறுத்த "பாரு!அழுதா மாமா பிடிச்சிக்கிட்டுப் போயிடும்னு !" நம்மளப் பச்சப்புள்ளைக்கிட்ட பூச்சாண்டியாக்குறது ஏன்?
5.இதனால நாம அந்தப் பிள்ளையைப் பார்க்கும்போதெல்லாம் நம்மை அது "கொன்னு!, மூக்கறுத்து!" என சைகை வேறு செய்ய, அந்தத் தாய்க்குலம் வேறு "இவன் அப்படியே ! அப்பா மாதிரி!" என அதை திருஷ்டி கழிப்பதும், நாம் கிடந்து அல்லாடுவதும் ஏன்?
6.எல்லாரிடமும் 100ரூ-க்கு 97ரூபாயையே கவலையில்லாமல் சில்லறைகளாக வாரி வழங்கும் கண்டக்டர், நம்மிடம் மட்டும் 10ரூக்கே 3ரூ சில்லறை இல்லை என்று சிடுசிடுப்பது ஏன்?
7. எல்லா ஆண்களும்கூட, ஆளில்லாத காரணத்தால் சீட்டில் அமர்ந்திருக்க நம்மிடம் மட்டும் வந்து இது மகளிர்சீட் தானே! எந்திரிங்க! சீட் கொடுங்க ப்ளீஸ்! என மகளிர்கள் ஆதிக்கம் செய்வதுமேன்? :)
8.ஏழு பேரு ஒத்தை ஒத்தையா ஒவ்வொரு சீட்ல உட்கார்ந்திருந்தாலும், லேடீஸ் வந்தா "ப்ளீஸ்!கொஞ்சம் ஜென்ட்ஸோட மாறி உட்கார்ந்துக்குறீங்களா?" எனநம்மிடம் மட்டும் கருணை மனு போடுவதேன்!(சில சமயம் அதிகாரமும்!)
9.என்றாவது, பேருந்தில் எல்லாரும் தூங்கறாங்களே! நாமும் தூங்கித்தான் பார்ப்போமே! என முனையும் போது ,"யாரு பெரியவீதி-ல மூணாவது வீடா?நானும் உங்கப்பாவும்..!"என ஒருவர் வந்து வினைக்குன்னே மாட்டிக் கேள்வியாக் கேட்பாரே?ஏன்?
10. காற்றுப் புகாத இடைவெளியிலும் கனகச்சிதமாகப் புகுந்து வரும் கண்டக்டர் , ஒரு ஆட்டோ போகுமளவு இடமிருந்தும்,நம்மிடம் வரும்போது மட்டும் நம் காலைக் குறிவைத்து மிதித்துவிட்டு "சாரி!"கூட சொல்லாமல் பணிமுடிந்த திருப்தியில் செல்வாரே ஏன்?
11. பாருங்க..! எல்லா ஸ்டாப்பிலும் , சரியாக விசிலடித்து நிறுத்திச் சொல்லும் கண்டக்டர் நம்முடைய ஸ்டாப்பில் மட்டும் நம்மைக் கதறவிட்டு விசிலடித்து நிறுத்துவாரே ஏன்?
டிரைவரும் கண்டக்டருக்கு சற்றும் சளைக்காமல் விசிலடித்து 120 நொடிகள் கழித்தே வண்டியைப் போனால் போகட்டும் என நிறுத்துவது ஏன்?
12.சரி இதையெல்லாம் விடுங்க! இதுபற்றியெல்லாம் குமுற நினைத்து பேருந்தில் அமர்ந்து குறிப்பெழுதும்போது, ஒருவர்
"தம்பி! நீங்க பதிவெழுதுறீங்களா?" என நம்மை சரியாகக் கவனித்து ஆப்படிப்பது ஏன்?
ஏன்? ஏன்? ஏன்?
லேபிள்கள்: அனுபவங்களும் ..இன்ன பிறவும்
நானே! நானே! அனைத்தும் நானே!

கண்ணனைப் பற்றி எத்தனை கவிதை வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே இருக்கலாம்!
கனவில் வந்த கண்ணன் கவியெழுத உரைத்தான்.!
(கண்ணனுக்குப் போதாத காலம், நம்ம கனவுலயெல்லாம் வர ஆரம்பிச்சுட்டார்)
விடுவேனா நான். கேள் என் கவியை! என கண்ணனே உரைப்பதாக ஒரு கவிதைய எடுத்துவிட்டேன்.
அம்புட்டுதேன்.மகாலட்சுமியே தேவலை என்று நான் கண்விழிக்கும்போதுமறைந்துவிட்டான்.
மாயக்கண்ணன்!
யாரெனக் கண்ணனைக் கேட்டால்,
அவன் தன்னை எப்படி அறிமுகம் செய்வான்?கற்பனைதான்!
அன்னையர் எனைத்தான் கண்ணன் என்பார்!
கன்னியர் எனைத்தான் கிருஷ்ணன் என்பார்!
விண்ணவர் முன்னவர் யாவருக்கும் நான்
அன்னவர் என்றே அறியப் படுவேன்!
வேதம் நான்கினையும் ஓதும் அடியார்தம்
நாவினில் இருப்பதும் நானே ! நானே!
ஊதுகுழல்பிடிக்கும் ஆய்ச்சியர்தம்மில்
கீதமிசைப்பதுவும் நானே! நானே!
பாதம்வரைவார் தம் பாகமொன்றாக
வீடு புகுவதும் நானே! நானே!
தாதன்போல நிதம் தயங்கும்வேளைதனில்
காதில் உரைப்பவனும் நானே! நானே!
வீணை மீட்டிவிட விரல்கள் முனைகையில்
நாதம் ஒலிப்பவனும் நானே!நானே!
மானே!தேனே! எனும் மயங்கும் வார்த்தைதனில்
மருகும் அன்புமது நானே!நானே!
இன்பமும் துன்பமும் படைக்கும் மனிதா!
எல்லாப் பொருளிலும் இயக்கம் நானே!
கல்லார் இதயமும் கற்றவர் உதயமும்
எல்லாம் எழுவதும் என்னரு ளாலே!
ராதையர் தேடிடும் கண்ணனும் நானே!
கீதையின் நாயகன் கிருஷ்ணனும் நானே!
பாதையில் தோன்றிடும் முட்களும் நானே!
வீதியில் ஓடிடும் எறும்புமென் உயிரே!
இந்த அறிமுகம் போதுமா ?
இன்னும் கொஞ்சம் வேண்டுமா?? என்று கேட்பானோ?
(இவிங்க அழிம்புகளுக்கு ஒரு அளவே இல்லையா?!)
லேபிள்கள்: நெடுங்கவிதைகள்
சில நல்லவர்களைப் பற்றி!

கலைவாணர் வள்ளல் என்பது உலகறிந்த விசயம். ஆனால், அவர் இடதுகை கொடுப்பது வலதுகை அறியாது என்பது போலத்தான் உதவி செய்வாராம்.
ஒரு முறை நண்பர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு வயதானவர் சற்றே ஏழ்மைத்தோற்றத்துடன் அருகேவந்து
"ஐயா என் பொண்ணுக்குக் கல்யாணம்.உங்ககிட்டக் கேட்டா ஏதாவது பண உதவி செய்வீங்கன்னு சொன்னாங்க. அதுதான் வந்தேன்."
என்றார்.
கலைவாணருக்கு வந்ததே கோபம்.
"ஏம்ப்பா நான் என்ன இங்கக் கொட்டியா வச்சிருக்கேன்.நானே அல்லாடுறேன்.போ.போ..!
என விரட்ட.
நொந்து போன அந்தப் பெரியவரும் அங்கிருந்து அகன்றார்.
சற்றுதூரம் சென்றிருப்பார் ..அவரை அழைத்த கலைவாணர்
"சரி.சரி! வந்தது வந்துட்ட...இந்தா இந்த வெத்தலையைப் போட்டுக்கிட்டுப் போ!'
எனக்கொடுக்க,
அதை வாங்கிக்கொண்டு சற்றுதூரம் சென்று பிரித்துப்பார்த்தபோது அதனுள் பணத்தினை சுருட்டிவைத்துக் கொடுத்திருந்தாராம் கலைவாணர்.
மற்றவர் அறியக் கொடுத்தால் வாங்குபவர் சங்கடப்படுவாரே என நினைத்த கலைவாணர் எங்கே?
ஒரு டியூப் லைட்டைக் கோவிலுக்குக்கொடுத்துவிட்டு அதில் உபயம் - சி.மு.கரு.ப....
என கருப்புமையால் எழுதி வெளிச்சத்தையே மறைக்கும் இந்நாளைய மனிதர்கள் எங்கே?
***************************************************
கக்கன் என்பவரை தமிழகம் நன்கறியும் என நினைக்கிறேன். அறியாவிட்டால் அது தமிழகத்தின் தலையெழுத்து.இவர் காமராஜர் ஆட்சியில் போலீஸ்துறை மற்றும் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தவர்.
எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்த இவரது நூற்றாண்டு விழாதான் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களால் வெகுவிமரிசையாகக்(?!) கொண்டாடப்பட்டது.
காமராஜர் ஒருமுறை கட்சிக் கூட்டத்திற்குச் செல்லவேண்டும் என கக்கனை அழைத்துச்செல்ல முன்கூட்டியே சொல்லாமல்கொள்ளாமல் அவரைத்தேடி வீட்டிற்கே வந்துவிட்டார்.வாசலில் காரில் இருந்துகொண்டு ஒருவரை உள்ளே அனுப்பி கக்கனை அழைத்துவரச் சொன்னார்.
உள்ளே சென்றவர்
"அய்யா! இன்னும் 5 நிமிடத்தில் வந்திர்ரேன்னு சொன்னாருங்க" என்றார்.
10 நிமிடமாகியும் காணாததால் "இவன் என்னதான் பண்ணுறான் இன்னும்?"
என்றபடி காமராஜர் வீட்டினுள் புக..அங்கே கொல்லையில் தனது வேட்டியைக் கையில் பிடித்து வெயிலில் காயவைத்துக்கொண்டிருந்தார் கக்கன்.
"ஏய்!என்னப்பா பண்ணுற?"
"இல்லைங்க ஐயா! ஒரே ஒரு வேட்டிதான் இருந்தது. இப்பதான் துவைச்சேன்.அதான் காயட்டும்னு வெயில்ல வச்சிருக்கேன்!இந்தா இப்பக் காஞ்சிரும்!"
என்றாராம் அந்த போலீஸ்துறை மற்றும் பொதுப்பணித்துறை மந்திரி.
இவர்தான் பின்னாளில் முடியாமல் இருந்தபோது அரசு ஆஸ்பத்திரியில் கவனிக்க ஆளின்றிக் கிடந்ததாகவும் எதேச்சையாக அவரை எம்.ஜி.ஆர் கண்டு சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியதாகவும் தகவல்கள் உண்டு.
உங்களுக்குத் தெரியுமா?
இன்று பெய்கின்ற மழைகளுக்கெல்லாம் மேகம் விதைத்தவர்கள் இவர்கள்தான்.
"நாளைக்கு!" என்று எதையும் சேர்த்துவைத்துக்கொள்ளத் தெரியாதவர்கள்.
இவர்களெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்கள்தான்.ஆனால்,
மக்கள் மனங்களில் நிலைக்கத் தெரிந்தவர்கள்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுபோன்றே தலைவர்கள் அல்ல..
நல்ல மனிதர்கள் பற்றிப் பேசலாம்.
நன்றிகள்!
லேபிள்கள்: அனுபவங்களும் ..இன்ன பிறவும்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!
"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசைப் பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு"
கவியரசரின் இந்தப் பாடலை கேட்காதாரும், விரும்பாதவர்களும் யாருமில்லை.
பாட்டிற்குப் பொருள்கொள்ள விரும்பினால்
கவியரசர் அவர்கள்,
மதுவில் தான் குடியிருப்பதாகவும், அந்நேரம் ஒரு மங்கையைத் துணை வைத்திருப்பதாகவுமே எளிதில் கண்டுகொள்ள முடியம்.இதில் மறைபொருளாக இன்னொரு பொருளும் அடங்கி இருப்பதை நான் நண்பர் உயர்திரு.ராமகிருஷ்ணன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அறியமுடிந்தது.
மறைபொருள் இதுதான்..
அந்நாளிலே மைப் பேனாவைக்கொண்டே எழுதப் பயன்படுத்தியதால் அந்த மை புட்டியைத் தான்
ஒரு கோப்பை என்றும், அதிலேதான் தனது கருத்துகள் குடிகொண்டு வாழ்வதாகவும்,
கோலம் வரையும் மயிலாகப் பேனாவை உருவகப்படுத்தி அதுவே அவர்கையில் நாளும் துணையிருப்பாய் இருந்ததாகவும் இருபொருள்படக் கூற விரும்பிய கவியரசர் அவர்கள் மேற்கண்டவாறு எழுதியிருக்கின்றார்.
அதாவது, கோப்பையை மைபுட்டி-யுடனும்
கோலமயிலை - பேனாவுடனும் ஒப்பிட்டிருக்கிறார். ஆனால், இருபொருள் தொனிக்கும் வகையில்!
இன்னும் கவியரசரோட என்னென்னப் பாட்டுக்கெல்லாம் என்னென்ன அர்த்தம் இருக்குதோ???
********************************
நண்பனுடன் இணைய நிலையத்திற்கு(பிரௌசிங் சென்டர்-தான். சரியா இருக்கா?!)சென்றிருந்தேன்.வேலை முடிந்து பணத்தைக் கட்டிவிட்டுக் கிளம்பும்போது, கடைக்காரர் மீதப்பணமாக ஒரு 20ரூ நோட்டைக் கொடுக்க,
நண்பன் 20ரூபாய்க்குப் பதில் இரண்டு 10 ஆகவே கொடுத்துவிடுங்கள் என்றான்.
ஏற்கனவே இவன் பையில் சில்லரைகள் பிதுங்கியிருக்க எதற்கு இப்படிக் கேட்கிறான் என நினைத்தவாறே நான் அவனை வினவ..
சொன்னான்..
"நோட்டு கிழிஞ்சிருக்கு..வேற நோட்டுக்குடுங்க - ந்னு சொன்னா அவன் மனசு வருத்தப்படும். அதனாலதான் இரண்டு 10 ஆகக் கேட்டுவிட்டால் ஏதோ தேவை போலிருக்கிறது-ந்னு அவன் கொடுத்து விடுவானில்லையா.எந்தப் பிரச்சினையும் இல்ல பாரு!" என்றான்.
இல்லைன்னு சொல்லிட்டாருன்னா..??
நான் கேட்க,
"நம்ம கண்ணு முன்னாடிதான ட்ராயரை ஓப்பன் பண்ணுணான்.கண்டிப்பா நாம பார்த்திருப்போம்-ன்னு அவனுக்குத் தெரியும்" என்றான்.
சில்லரையை வாங்க்க்கொண்டு அவனுடன் 'நடைபயின்றேன்'.
**********************************************
எனது நண்பர்களுக்குக் கொஞ்சம் தமிழ்பக்தி அதிகம்.அதிலும் சிலபேர் உரக்கத் தமிழ்பேசி, புழக்கத்திலேயே அதிகமில்லாத (புளகாங்கிதம்! போன்ற) வார்த்தைகளைப் பயன்படுத்தி சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார்கள்.பாடல்களில் 'ழ'கர உச்சரிப்புகள் சற்றுத் தூக்கலாகவே இருக்கும்.மின்னியல்துறையில் வேலைசெய்யும் நமது நண்பர் 'ழ'கரப்புகழ் சுரேஷ் என்பவர்...வெகுநாளாக வேலைக்கு அழைத்தும் வரமறுத்த அவருடைய நண்பரான சப்-காண்ட்ராக்டர் ஒருவரை,
ஒரு வாரமா போன் செய்றேன்.எங்கப்பா போன? என ஆரம்பித்துக் கோபமாகி ஏகத்துக்கும் விளாசத்தொடங்க,
பேச்சை இடைமறித்த அந்த சப்-காண்ட்ராக்டர் சொன்னார்.
"சுரேஷு இதைக்கேளுங்க.ஒரு நல்ல கவிதை. தலைப்பு இதுதான்
"பொறுமை!"
தண்ணீரையும் சல்லடையில் எடுத்துச் செல்லலாம்.
அது பனிக்கட்டியாகும்வரை
பொறுமையிருந்தால்!
அதுனால கொஞ்சம் பொறுமையா இருங்க சுரேஷு..என சொல்லிவைக்க..
வெறுத்துப்போன நம் நண்பர்.எவ்வளவு சொல்றோம்.கவிதையா சொல்ற நீ என்றபடி..
கொஞ்ச நேரம் பேசிவிட்டுக் கிளம்ப எத்தனித்த காண்டிராக்டரக் கையமர்த்தியவர்.."நான் ஒரு கவிதை சொல்றேன்.நீங்க கேளுங்க" என்றார்.
தலைப்பு இதுதான்
“காலதாமதம்.”
தண்ணீரையும் சல்லடையில் எடுத்துச் செல்லலாம்.
அது பனிக்கட்டியாகும்வரை
பொறுமையிருந்தால்!ஆனால்,
அந்தப் பனிக்கட்டியும் மீண்டும் தண்ணீராகிவிடும்
சற்றே காலதாமதித்தால்!
யோவ்...உனக்கு எத்தனை மணிக்கு வரனும்னு சொல்லு.4 மணிக்குத் தான சொன்ன..3 1/2க்கே வர்ரேன் ஆளை விடு! என சப்-காண்ட்ராக்டர் நொந்து கிளம்பினாராம்.
**********************************************
நம்மகிட்ட உள்ள கெட்டப்பழக்கமே எதையாவது பார்த்தால், படித்தால் நாமும் அதுபோலவே செய்ய வேண்டும் என சாட்டையைச் சொடுக்குவதுதான்.
காளமேகப்புலவரின் பாடல்களில் அவர் இகழ்வது போலக் கடவுளர்களைப் புகழ்ந்து பாடியவை மிகப்பிரசித்தி பெற்றவை.
இதைப்படித்ததிலிருந்து கை அரிப்பு உண்டாகி நாமும் முயன்று..
காளமேகம் பொறுத்தருள்வாராக..
கண்ணனைப் பற்றி..!
கொண்டலாய் வண்ணமும் பொன்முடி அற்றுமே
சின்னமயில் தன்னினதுத் தோகையைக் - கொண்டிலங்கும்
கண்ணா உனக்குநாளும் கள்வனென்று வேறுபெயர்
பின்னெப்படிப் பெண்கொடுப் பார்!
கொண்டல்-மேகம்
கொண்டிலங்கும்-கொண்டு விளங்கும்
*******************************************
லேபிள்கள்: அனுபவங்களும் ..இன்ன பிறவும்
